தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
13
இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக் கொண்டதாகத் தவறாகக் காட்டப்படுவத்றகாகத் திணிக்கப்படுபவை. இத்தகைய இடைச்செருகல்கள்தாம் தமிழுக்கு இழுக்குத் தேடி வருகின்றன.
எனவே, தமிழ் நூல்களிலான இடைச்செருகல்கள் அதன் அழகையும் மதிப்பையும் குறைக்கவும் ஆரியத்தைத் திணிக்கவும் உண்டாக்கப்பட்டவை;. சமற்கிருத நூல்களில் உள்ள இடைச்செருகல்கள் அவற்றுக்கு இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகத் திணிக்கப்பட்டவை எனலாம். இடைச்செருகல்கள் மூலம் சமற்கிருத நூல்களில் இந்தியர்கள் செய்த துமோசடிகள் வெளிப்படையாகக் கண்டுகொள்ளக் கூடியவை என்கிறார் ஏ.சி.பருனல்(The Ainthira school of sanskrit grammarians , பக்.102)
தொல்காப்பியத்தில் பிற்காலத்தோரால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் ஆங்காங்குள்ளன. தொல்காப்பியத்தைக் கற்போர் அவ் விடைச்செருகல்களை எளிதில் அறிந்துகொள்வர். அவ் விடைச்செருகல்கள் வடமொழித் தொடர்புடையோரால் சேர்க்கப்பட்டன. ஆதலின் வடமொழிச் சார்புடையனவாக இருத்தலில் வியப்பில்லை.
சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் பேராசிரியர் ப.மருதநாயகம் புரிய வைக்கிறார்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய வகுப்பு நடத்திய முதல்வரின் இடைச்செருகல்கள் குறித்த தவறான கருத்துகளுக்கு எதிராக உண்மைகளை உரைத்து வாதிட்டவர். இதழ்களிலும் தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர்.
மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக் குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பேராசிரியர் ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார்.
இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.
‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.
இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம் ஆகியவற்றுடன் இல்லாத கற்பனைச் சொற்களைச் சேர்த்துப் பாணினி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் பலவகைகளில் பேராசிரியர் ப.மருதநாயகம் சிறப்பாக விளக்கியுள்ளதை இக்கட்டுரை தெரிவிக்கிறது.
ஆரியத்தழுவலாகத் தொல்காப்பியத்தைக் காட்டுவதற்காகவும் தொல்காப்பியர் ஆரிய இலக்கணங்களை ஒப்பியல் நோக்கில் கையாண்டுள்ளார் எனப் போலியாகப் பாராட்டுவதுபோலவும் இடைச்செருகல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான்
காமக்கூட்டம் காணும்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே
என வரும் நூற்பா. இந்நூற்பாவை இடைச்செருகல் எனப் பேராசிரியர் ப.மருதநாயகம் ஐயந்திரிபறக் கூறுகிறார்.
ஆரியர்களைப் பார்த்துத் தமிழர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர் எனத் தொல்காப்பியம் உணர்த்துவதுபோல் திரித்துக் கூறும் பழக்கம் ஆரியப் பிராமணர்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் கற்பியல் குறித்து விளக்கும் பொழுது அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாகப் பேராசிரியர் ப.மருதநாயகம் மறுக்கிறார். வடமொழி இலக்கியங்களை வரலாற்றுக் காலத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தல் பெருந்தீங்கை விளைவிக்கும் என்றும் அவை யெல்லாம் பலவாறாகப் பல காலங்களில் பலரால் சிதைக்கப்பட்டவை யென்றும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை வைத்தும் எம்முடிவிற்கும் வர முடியாதென்றும் பண்டிதர்கள் தங்கள் மனம்போன போக்கில் மாற்றங்களைச் செய்துள்ளார்களென்றும்(ப.105) பருனால் கடுமையாகச் சாடுகிறார்.(ப.மருதநாயகம், வடமொழி ஒரு செம்மொழியா?, பக்.607)
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply