(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: தொடர்ச்சி)

நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. என்றாலும் கூட நாம் திராவிடத்தை, பகுத்து அறிவு வளர்ச்சிக்கும் தன்மதிப்பு எழுச்சிக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறோம். இந்தத் திராவிட உணர்வைத்தான் இன்றைக்குப் பெரியாரியம் என்று சொல்கிறார்கள். அதற்கான திராவிட மண்தான் இந்தத் திராவிட உணர்வை விதைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மொழி வாயிலாகப் பார்க்கும் போது நம் மொழி தமிழ்தான். நம் இனம் தமிழினம்தான். அந்த வகையிலே தமிழர் இனம் சிறக்கச் செய்வதற்குத் திராவிட உணர்வு என்ன செய்தது? இன்றைக்குக் கன்னடத்துக்காரன் கன்னடத்தில் இருந்து தமிழ் வந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். தமிழிலிருந்து கன்னடம் வந்தது என்று நடிகர் கமல் குறிப்பிட்டார். அவர் மக்கள் நீதி மையத் தலைவர். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். சரி. அதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? தப்பு என்றது. யாரை? உண்மையை எதிர்ப்போரை. தவறு என்று சொன்னவர்களிடம் அவ்வாறு சொல்வது தவறு என்று, ஆனால் கருநாடக உயர் நீதிமன்றம் என்ன சொன்னது? கமல் இவ்வாறு பேசக்கூடத் தடை விதிக்கிறது, உச்ச நீதிமன்றமே அவ்வாறு சொல்வதைத் தடுக்கக்கூடாது என்று சொன்ன பிறகு ஏன் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்வாறு சொல்ல வேண்டும்? அவன் கருநாடகக்காரன். மூத்த மொழி கன்னடம் என்கிறான். அவனுக்குத் தமிழைப் பற்றிய அறிவு இருந்திருந்தால் கன்னடத்தைத் திராவிட மொழி என்று சொல்லி இருப்பான். நமக்குத் தமிழ்நாட்டிலேயே பாடமாகத் தமிழைப் பற்றி எதுவும் இல்லை. தமிழ் பல்வேறு மொழிகளின் தாய்மொழி என்ற ஓர் உணர்வோ பாடமோ சொல்லப்படுவது கிடையாது. சொல்லப்படாத காரணத்தால் நம்மிடம் “உங்களுக்கு வேறு வேலை இல்லையாடா! இப்படித்தான் சொல்வீர்கள்” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தமிழின் சிறப்பையும், தமிழின் உயர்வையும் தமிழர் அறியுமாறு பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் இருந்து இடம்பெற வேண்டும், ஏன் மழலைப் பள்ளியில் பாடல் வகையில் இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழி கற்பிக்கப்பட்டாலும் – அது துளுவாக இருக்கலாம், இந்தியாக இருக்கலாம், மராட்டியமாக இருக்கலாம், சமற்கிருதமாக இருக்கலாம். ஏன் 15 மொழிகள் முதல் 22 மொழிகள் என்று சொல்லலாம். அவை தமிழ்நாட்டில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அம்மொழிப்பாடங்களில் எல்லாம் தமிழின் மொழிச் சிறப்பு இருக்க வேண்டும், தமிழ் இலக்கியச் சிறப்பு வரவேண்டும். அவ்வாறு தமிழ்நாட்டில் படிப்பவன் தமது தாய் மொழியில் தமிழின் சிறப்பை படிக்கும் பொழுதுதான் தமிழின் சிறப்பை உணர்வார்கள். தமிழுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய உணர்வு அவர்களுக்கு வரும். தமிழைப்பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு எப்படி உணர்வு வரும்? இவ்வாறு நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்வது கிடையாது. தமிழை வளர்ப்பதற்கு எதுவும் செய்வது கிடையாது. விருதுகள் கொடுத்தோம். மறுக்கவில்லை. பாராட்டுகிறோம். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிக்கான சில திட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். பாராட்டுகிறோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் செய்ய வேண்டிய வேலை என்ன? தமிழை ஆழமாக வேரூன்றுவதற்கான திட்டங்கள் செய்கிறோமா என்றால் இல்லை. எப்பொழுது தமிழ் ஆழமாக வேரூன்றப்படுகிறதோ அப்பொழுதுதான் தமிழ் வளரும்; தழைக்கும்; செழிக்கும்; மலரும்; மணக்கும். இல்லையேல் வளர்ச்சி ஒன்றும் இருக்காது. ஆக நாம் செய்ய வேண்டியது அடிப்படையிலேயே தமிழ் இருக்கச் செய்வதுதான். அன்றாட பயன்பாட்டுத் தமிழிலிருந்து ஆராய்ச்சித் தமிழ் வரை எங்கும் தமிழ் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும்! அது வழிபாடாய் இருக்கலாம், இசையாக இருக்கலாம், கலையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி அங்கெல்லாம் தமிழே இருக்க வேண்டும் என்ற ஒரு நிலையைக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இதற்கு எல்லா கட்சிகளும் தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அப்பொழுதுதான் முடியும் .இதில் எல்லாம் கட்சிக் கண்ணோட்டம் பார்க்கக் கூடாது. ஏனெனில் பிற மாநிலங்களில் அந்த மொழிக்கான ஒரு திட்டம் உண்டென்றால் எல்லா மொழி பேசுபவர்களும் அதாவது அந்தத் தாய்மொழி பேசுபவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாம் அவ்வாறு நிற்பது கிடையாது. எதிராகப் பேசுகிறோம். அதற்குக் காரணம் அப்படியல்ல இப்படியல்ல என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் நாம் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் பல்வேறு திட்டங்களைச் செய்தோம் என்றால் தான் நமக்குச் சரியாக இருக்கும். இன்னும் பார்ப்போம் ,அஃதாவது கேள்வி என்ன? சமற்கிருதத்திற்கு நிதி ஒதுக்கீடு சரிதானே என்று. ஆம். ஏன் சரிதானே என்றோம். நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேன் அத்தகைய திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறது, அதைச் செய்கிறார்கள். ஆக நாம் செய்ய வேண்டியது? என்ன தமிழுக்குத் தலை சிறந்த திட்டங்களைத் தாருங்கள். ஆனால், இருக்கின்றன திட்டங்கள் இல்லாமல் இல்லை அத் திட்டங்களைத் தாருங்கள். அந்த திட்டங்களைத் தருவதன் மூலமாக நாம் நிதி ஒதுக்கீட்டைக் கேட்டுப்பெற்று ஆவன செய்ய வேண்டும்.

(தொடரும்)

13.07.2025