(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி)

நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.)

ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும்.

இளையவர்களுக்குத் தருவது ஒரு முறை விருது( ஒன் டைம் அவார்டு). மூத்தவர்களுக்குத் தருவது வாழ்நாள் முழுமைக்குமான ஆண்டு தோறுமானது (யியர்லி அவார்டு).

 ஆண்டு தோறும் தரக்கூடிய வாணாள்  விருது தமிழில் இதுவரை தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பு தந்த பிறகுதான் சமற்கிருதத்திற்கு அறிந்தேற்பு தந்தார்கள் பாலி, பிராகிருதத்திற்கும் 2004 இல் கொடுத்துவிட்டார்கள் எல்லாவற்றிற்கும் கொடுத்து விட்டார்கள் கோயிலிலே வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் தருவது போன்று “இந்தா நீ வாங்கிக்கோ! நீ வாங்கிக்கோ! ” என்று  செம்மொழி அறிந்தேற்பு கொடுத்துவிட்டார்கள். இது மிகவும் தவறானது எல்லாம் செம்மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழ் ஒன்றுதான் உலகத்திலேயே உயர்தனிச் செம்மொழி, வேறு எந்த மொழியும் உயர் தனிச் செம்மொழி அல்ல. ஆகவே உயர் தனிச் செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்குக் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டிருக்க வேண்டும் .ஆனால் கேட்கவில்லை நாம். அது மட்டும் அல்ல. சமற்கிருதம் ஒரு முழுமையான மொழி அல்ல பாலி பிராகிருதம் தமிழும் கலந்த சொற்கலவைதான். தவறுதலாகச் சமற்கிருதத்தில் இருந்து பிராகிருதம் வந்தது என்பார்கள். பிராகிருதம் என்பது இயல்பான பேச்சு மொழி. சமற்கிருதம் செய்யப்பட்ட மொழி. இயல்பான பேச்சிலிருந்து செய்யப்பட்டது தான் சமற்கிருதம் அப்படி இருக்கும் போது பிராகிருதம் மூத்ததாக இருக்குமா சமற்கிருதம் மூத்ததாக இருக்குமா?  

சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993)  நூலிலேயே சொல்கிறார் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவின என்று காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும், பிராகிருத மொழி நூல்களையும் மொழி பெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களையும் எழுதி வைத்துக்கொண்டு, நூல்களாக இயற்றிவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களின் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டு எவ்வாறு சமற்கிருதம் தனது நூல்களாகக் காட்டுகிறதோ அதேபோன்று வடக்கே செய்து இருக்கிறார்கள். ஆக இத்தகைய ஒரு பொய்யான சமற்கிருதத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன?

நாம் என்ன சொல்ல வேண்டும். நமக்கு அஃதாவது இப்போது அரசு அறிவித்தார்களே பத்தாண்டு என்று, இப்போது குதிக்கிறார்கள் அல்லவா? எண்ணிப் பாருங்கள். பத்தாண்டு என்று சொல்லி இன்று கேள்வி கேட்பவர்கள் எங்கு சென்றார்கள். இன்று கூக்குரல் இடுபவர்கள் எங்கு? சென்றார்கள். ஆண்டுதோறும் அறிவித்துக் கொண்டு தானே இருந்தார்கள் ஏன் அப்பொழுது கேட்கவில்லை? ஒன்றிய அரசு ஆட்சிப் பொறுப்பில் தமிழர் கட்சிகள் இருந்தனவே, அப்போது என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுகையிலே அந்த நாடாளுமன்ற  அவையிலேயே அறிக்கை கொடுக்கிறார்கள் அல்லவா? எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியுமே, அப்பொழுதெல்லாம்  ஏன் கேட்கத் தெரியவில்லை? இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இப்பொழுது ஏதோ புதிதாகக் கொடுப்பது போல் கேட்கிறார்கள். அதுதான் கொடுமை. ஏதேனும் சமற்கிருதம் தொடர்பான அறிவிப்பு /இந்தி தொடர்பான அறிவிப்பு வந்த பிறகு அப்பொழுது தான் வந்து குதிகுதியென்று குதிப்பார்களே தவிர ஆண்டுதோறும் நடக்கும் இயல்பான ஒன்று என்பதை மறந்து விடுகிறார்களா அல்லது  மறைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆக ஆண்டுதோறும் விட்டு விட்டு பத்தாண்டுகள் போன பத்தாண்டுகள் அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் முந்தின ஆண்டு தொடர்ச்சியாகப் பத்தாண்டு இதெல்லாம் ஆங்கிலேயர்களிமிருந்து விடுதலைக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து வந்த அநீதிகள் இவையெல்லாம், இந்தியா விடுதலை அடைந்து மிகுதியாக வந்துவிட்டது.

பேராய கட்சியான காங்கிரசில் தொடங்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .ஆக, சமற்கிருத நிதி ஒதுக்கீடு என்பது இங்கே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்தக் கட்சிகள் எங்கே தூங்கிக் கொண்டு இருந்தன? ஒன்று இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதையும் சொல்லத் தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிறரது முதுகிலே உள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுகிற நாம், சுட்டிக் காட்டிய கைகளில் மண்டிக் கிடக்கிற அழுக்கை நாம் பார்க்க வேண்டும். நாம் தமிழுக்காக என்ன செய்தோம் என்று பார்க்க வேண்டும் .அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுது நான் பல திட்டங்களைச் சொன்னேன் அல்லவா, அதை விடப் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. திட்டங்கள் மட்டுமல்ல. எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? சமற்கிருதம் தொன்மையான மொழி என்பது பொய், பிற மொழிகளுக்குச் சமற்கிருதம் தாய் மொழி என்பதும் பொய், சமற்கிருதம் தேவ மொழி என்பதும் பொய். இவ்வாறு பொய்களைப் பரப்பிக்கொண்டு பொய்யான தகவல்களுக்காக – அத்தகவல்களின் அடிப்படையிலான திட்டங்களுக்காக –  நிதி ஒதுக்கீடு வழங்குகிறார்கள்.

13.07.2025