இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 – தொடர்ச்சி

  செல்வர்களுக்கான கல்வியகங்கள், ஏழை எளியோருக்கான  கல்வியகங்கள் என்ற பாகுபாடுநீக்கப்பட சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான சமத்துவமாகத் திகழும். நாட்டின் வளர்ச்சியும் தளர்ச்சியும் வகுப்பறைகளில் உருவாக்கப்படுவதை உணர்ந்து  சமஉடைமையைக் கல்வியகங்களில் தோற்றுவிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் கல்வியாளர்கள் கவலையுடன் எதிர்கால நல்வாழ்வு கருதி நிகழ்காலச் செயல்பாடுகளுக்கு  வழி காட்டும் வேளையில் அரசு  தமிழ்வழிக்கல்வி உள்ள, உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியைத் திணித்துக் கொண்டுள்ளது. பத்தவத்துசலம் முதலமைச்சராக இருந்த பொழுது ஆங்கில வழிப்பள்ளிகள் உருவாகிப் பெருகலாயின. கலைஞர் ஆட்சியில் தொடங்கி இன்றுவரை அரசு ஆங்கிலவழிக் கல்வி யிலேயே கருத்து செலுத்தும் துன்பநிலையே தொடர்கிறது.

  அரசு கல்வி வணிகர்களுடன் போட்டிபோடுவதை நிறுத்தி விட்டு, தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்விக்கூடங்கள் மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்றும் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80% முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

  சில ஆண்டுகளுக்கு முன்பு – கலைஞர் ஆட்சியில் – தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டதே என்ற எண்ணம் எழலாம். அது ஒரு மோசடியான ஆணை.  எண்பது விழுக்காடு தமிழ்வழி படித்தவர்கள் இருக்கும் பொழுது 20 விழுக்காடு மட்டுமே முன்னுரிமை என்பது எஞ்சிய பெரும்பான்மைக்கு ஆங்கிலவழியே முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்துகிறது. முன்னுரிமை என்றாலும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படுவதால், தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்னும் அரசாணை ஒரு  வகையில் தமிழ் வழியில் படித்தவர்களைத் தாழ்த்துவதாக உள்ளது.

  தமிழ் வழியில் படித்தவர்களைத் துணை ஆட்சியர்,  துணைப்பதிவாளர், காவல்துணைக் கண்காணிப்பாளர் முதலான உயர் பதவிகளில் அமர்த்தி விட்டு விவரம் தெரிவித்தால் தமிழ் வழியில் படித்தவர்களைப் பெருமை படுத்துவதாக அமைந்திருக்கும்.  மாறாக இழிவு படுத்தும் வகையில் கடை நிலை ஊழியரைப் போல உள்ள மின் ஏணி (லிப்ட்) இயக்கும் வேலையும் பதிவுரு எழுத்தர் பதவியும் தந்து விளம்பரப்படுத்தினார்கள். அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். எனினும் தமிழில் படித்தால் கடை நிலைப் பணிதான் கிடைக்கும் என்று சொல்வது  தமிழ் வழியில் படித்தவர்களை இழிவுபடுத்துவது ஆகாதா?  மேலும் 20%  தமிழில் படித்தவர்களுக்கு என்று சொல்லி 80%ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது எவ்வாறு தமிழ் வழியாகப் படிக்க மாணவர்களைத் தூண்டும்?

  வெற்று விளம்பரம் மூலம் நன்மை அடையும் மோசடியான முயற்சிதானேஇது. சற்று விளக்கமாகச்சொல்வதாயின் எடுத்துக்காட்டுடன் கூறுகின்றேன். 25.11.2012ஆம் நாளிட்ட இராணி இதழில் (பக்கம் 19) நான் தெரிவித்துள்ள கருத்தையே நினைவூட்ட விரும்புகின்றேன். ஒரு துறையில் 10 பணியிடங்கள் ஒழிவிடமாக இருந்து அதற்குத்  தேர்வு நடப்பதாகவும் 10பேர்களுக்கு மேற்பட்டவர்கள் தமிழ் வழிப் படித்தவர்களாக உள்ளார்கள் என்றும் கொள்வோம். இச் சூழலில் அப் பத்துப் பேரில் ஒருவருக்குக்கூட முன்னுரிமை யடிப்படையில் வேலை வழங்கப்பட மாட்டாது.

  அரசாணைக்கிணங்க 200 பணியிடங்களை நிரப்புவதாக இருப்பின் தமிழ் வழியில் படித்தவர்களுக்குச் சுழற்சி முறையில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு 18 ஆவது இடம், பொதுப்பிரிவினருக்கு 19 ஆவது இடம், மிகப்பிற்படுத்தப்பட்ட  பிரிவினர் அல்லது  சீர்மரபினருக்கு 23 ஆவது இடம், பட்டியல் இனத்தவர்க்கு 26 ஆவது இடம், பழங்குடி இனத்தவர்க்கு 150 ஆவது இடம், அருந்ததியருக்கு 166ஆவது இடம், பிற்பட்ட இசுலாமியருக்கு 188 ஆவது இடம் வழங்கப்படும். அவ்வாறில்லாமல் முதல் 40 இடங்களளைத் தமிழ்வழி படித்தவர்களுக்கு வழங்கிவிட்டு அதில் சுழற்சி முறையைப் பின்பற்றலாம் அல்லவா? மேலும் இந்த  ஆணைக்கிணங்கத் தமிழ் மொழியில் புலவர் அல்லது இளங்கலை அல்லது  முதுகலை அல்லது முனைவர் முதலான பிறபட்டங்கள் பெற்றவர்க்கு முன்னுரிமை கிடையாது.

  பல வேலைகளுக்கான கல்வித் தகுதிக்கான பட்டங்கள் தமிழ் வழியில்  இல்லை. அதற்காக விண்ணப்பிப்பவர்கள், அதற்கு முந்தைய கல்வி வரை தமிழ் வழியில் படித்திருந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது. தமிழில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தராமல் இவ்வாறு ஆணை பிறப்பிப்பது இழுக்கல்லவா?

  நமக்கு வேண்டியது எந்தப் பணியிடமாக இருந்தாலும் முதலில் தமிழ் வழியில் பயின்றவர்க்கு அளித்து விட்டு அதன் பின் எஞ்சிய பணியிடங்களையே பிறருக்கு அளிக்க வேண்டும்.  இதுவே நம் இலக்காக இருக்க வேண்டும். இருப்பினும் நூற்றுக்கு எண்பது இடங்களாவது தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கும் வழங்குமாறு ஆணை இருக்க வேண்டும்.