செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010)
? தமிழைப்போல் வேறு சில மொழிகளையும் செம்மொழிப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது அல்லவா?
# ஏதோ ஒரு கட்டாயச் சூழலில் தமிழுக்கான செம்மொழி ஏற்பை இந்திய அரசு வழங்கிவிட்டதே தவிர அதற்கு முழு உடன்பாடு இல்லை என்பதுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியினரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தத்தம் மொழிக்குச் செம்மொழி ஏற்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆழமும் அகலமும் நுண்மையும் திண்மையும் தொன்மையும் பழமையும் புதுமையும் இளமையும் வளமையும் எனப் பெரிதுபட்ட இலக்கியப் பரப்பைக் கொண்ட தமிழின் சிறப்பை நாம் அவர்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தைய அல்லது கிறித்துவக் காலத்திற்கு முந்தைய. இலக்கியச் சிறப்பு உடைய மொழிகளை மட்டும் கருதிப் பார்ப்போம் என்று அறிவிக்காமல் 1000 ஆண்டுப் பழமையான மொழி என வரையறுத்துப் பின்னர் 2000 ஆண்டுகள் தொன்மை என்ற கால அளவினை வலியுறுத்திய நமது போராட்டங்களுக்குப் பின் 1500 ஆண்டுகள் தொன்மையான மொழி எனக் காலவரையறை செய்தனர். எனவே, தெலுங்கு, கன்னடம் முதலான மொழியினர் உடனே செம்மொழி ஏற்பினை வேண்டினர். இதனை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே வழக்கு முடிவிற்கு உட்பட்டு எனத் தெரிவித்து தெலுங்கு, கன்னட மொழிகளைச் செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். எனவே, செம்மொழிப் பட்டியல் என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளையும் சேர்த்து, ஒப்புக்குச் சப்பாணியாக நிதியுதவி வழங்குவதே இந்திய அரசின் நோக்கமாக உள்ளது.
? நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
# உலக மொழிகளில் மூத்த மொழியாகவும் பிற மொழிகளுக்குத் தாயாகவும் விளங்கும் செந்தமிழை ஒவ்வொரு மொழியினரும் தத்தம் தாய்இன மொழி எனப் போற்றும் வகையில் நமது பரப்புரை அமைய வேண்டும். எனவே, வெறும் செம்மொழி அறிந்தேற்பை வழங்கிவிட்டதுடன் தன் கடமை முடிந்துவிட்டது என இந்திய அரசு கருதாமல் இந்தி, சமசுகிருதம் ஆகிய மொழிகளுக்குச் செலவழிப்பதற்குச் சமமான தொகையையாவது தமிழ் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் என ஒதுக்கிப் பெருமை கொள்ள வேண்டும். தமிழக அரசும் செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தியது போல் தமிழே தமிழ்நாட்டில் தலைமையிடம் பெறவும் தமிழரே முதன்மை பெறவும் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசு அடிமையாக இருப்பதாகவே மாண்புமிகு முதல்வர் உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே, அவரே அடிமைத்தளையை அறுத்தெறிய ஆவன செய்ய வேண்டும். படைப்பாளர்களும் ஊடகங்களும் நல்ல தமிழைக் கையாளவும் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கவும் மட்டுமே துணை நிற்கும் வகையில் நமது மொழிக் கொள்கை அமைதல் வேண்டும். வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பிற்கான அடிப்படை மொழியாகத் தமிழை மாற்ற வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகா; நனவாக்கித் தீருவோம் என இந்திய, தமிழக அரசுகளின் நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாட்டில் தமிழ்ச் சூழலை உருவாக்குவதை ஒரு கண்ணாகவும் உலகநாடுகளில் தமிழைப் பரப்புவதை மற்றொரு கண்ணாகவும் கொண்டு தமிழக அரசும் இந்திய அரசும் செயல்படவேண்டும். இவ்வாறான செம்மொழி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தினக்குரலுக்கும் தினக்குரல் வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply