தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! : இலக்குவனார்திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி)
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10
தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!
“தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான நகரங்களே குறிக்கப்பெறவில்லை.”
“ ‘மியான்மர் மொழிகள்’ என்னும் தலைப்பிலும் பருமாவில் ஒரு பகுதியினர் – தமிழர்கள் – பேசும்மொழியாகத் தமிழ் உள்ளமை குறிக்கப் பெறவில்லை. புள்ளிவரப்படி பார்த்தால் மியன்மா நாட்டில் தமிழ்மொழி பேசுவோர் 4 ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் பிற நாடுகளில், 1000 தமிழர்கள் இருப்பதைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் பெருமளவு எண்ணிக்கையில் தமிழர் வாழ்வதையும் தமிழ் பேசப்படுவதையும் குறிக்கவில்லை.” (அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல், 30.10.2016) நமது உண்மையான எண்ணிக்கையை நாம் அறிந்திருப்பதும் நமக்கு வலிமையல்லவா? ஆனால், “உலகில் தமிழர்கள்” என்று நாம் குறைக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டியே பெருமைப்பட்டுக் கொண்டுள்ளோம்.
வெற்று ஆரவாரக் கூச்சலில் தமிழை வளர்க்கலாம் என நம்பும் தமிழர்கள்
“மொழியும் இனமும் நமதிரு விழியாம்!
தமிழ்நெறி ஒன்றே தமிழர்க்குத் துணையாம்!”
“தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் உணர்வோம்!”
“பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்”
“தமிழனாய்ப் பிறந்ததில் பெருமை கொள்வோம்!
தாய்மொழியைக் கற்பதில் கடமை உணர்வோம்!”
என வெளிநாடுகளில் முழங்கித் தமிழுணர்வைப் பெருக்கி வருகிறார்கள். இருப்பினும் தாயகத் தமிழர்கள் வெற்று ஆரவாரக் கூச்சலில் தமிழை வளர்க்கலாம் என நம்பி வருகின்றனர்.
தாய்நாட்டில் தமிழைக் காப்பது முதற்பணி!
அயலகங்களில் தமிழை நிலைக்கச் செய்வது இரண்டாம் பணி!
எனக் கொண்டு நற்றமிழை நாடுதோறும் வளர்க்கும் தலைவர்களும் அறிஞர்களும் இல்லாதபோது தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!
தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்!
என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் பொன்மொழியை உணர்ந்தால், தமிழ் அழியும் இடங்களில் தமிழர் அழிவும் தமிழர் அழியும் இடங்களில் தமிழ்அழிவும் நிகழ்வதை உணர்ந்து விழிப்படைவோரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவோரும் இல்லையே!
தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!
அயோத்தியில் ஆரியப்புராணமான இராமாயண அருங்காட்சியகம் அமைப்பதற்காக 150 கோடி உரூபாய்களை ஒதுக்கியுள்ளது இந்திய அரசு. ஆனால், வரலாற்று உண்மைகளைக் கூறும் தமிழரின் பெருமைகளை உணர்த்தும் கீழடி அகழ்வாய்விற்கு முதலில் ஒரு நூறாயிரம் மட்டுமே ஒதுக்கியது. இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகையும் சில நூறாயிரமே. தமிழ்நாட்டின் ஒதுக்கீடுதான் 12.20 கோடி. தமிழ் உண்மைகளை வெளிவர ஒரு துரும்பையும் அசைக்காமல் இருப்பதும் தவிர்க்க இயலாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழல் எழுந்தால் ஒரு சிறிய தொகையைக் கண் துடைப்பாக ஒதுக்குவதுமே ஒன்றிய அரசின் பணியாக இருக்கின்றது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். சமற்கிருத, இந்தி மொழிகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் தமிழர் வாழும் இடங்களிலும் திணித்துக்கொண்டும் செயற்படுவதையே ஒன்றிய அரசு இலக்காகக் கொண்டு உள்ளது. ஆனால், இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஒருகாலத்தில் பேசப்பட்ட தமிழ்மொழியைத் தன் தாய்நிலத்தில் வாழ வைப்பதற்கு ஒன்றிய அரசையும் தமிழ்நாட்டு அரசையும் வலியுறுத்தி வாகைசூடத் தவறும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
தமிழ்நாட்டிலேயே தமிழுக்கான பயன்பாட்டை இல்லாமல் ஆக்குகிறார்களே!
தமிழ்நாட்டிலேயே தமிழுக்கான பயன்பாட்டை இல்லாமல் ஆக்கி அதன் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகிறோம். அரசு பிறப்பிக்கும் மாறுதல் ஆணைகள்கூடத் தமிழில் இல்லை. அரசின் பெயர் சூட்டல்களில் ஆங்கிலம்தான்இடம் பெறுகிறது. அரசின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டலாம் என்றால் தமிழின் முழுப் பயன்பாடின்மைக்கும் காரணமாக அதன் செயற்பாடே இருப்பதால் அதனை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழுக்குரிய பெருமையைத் தேடித்தராத நாம்!
இந்தியப் பண்பாட்டு அமைச்சகம் அறிவிப்பின்படி 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் சமற்கிருதத்திற்கு மட்டும் உரூபாய் 643.84 கோடியும், பிற 5 செவ்வியல் மொழிகளுக்கும் சேர்த்து உரூ.29 கோடி மட்டும் ஒதுக்கியுள்ளதைத் தெரிவித்துள்ளது. அ1ஃதாவது பிற ஐந்து மொழிகளை விட 22 மடங்கு சமற்கிருதத்திற்கு மட்டும் ஒதுக்கியதாக ஒன்றியப்பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஒன்றியக் கல்வியமைச்சர் சுபாசு சருக்கார், 2021-2022இல் தமிழ் மொழிக்கு உரு.11.86 கோடி ஒதுக்கியதாகவும், மத்தியச் சமற்கிருதப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 198.83 கோடி ஒதுக்கியதகாவும் தெரிவிததார். இவ்வாறு புள்ளி விவரங்களைப் பார்த்தால் உயர் தனிச்செம்மொழியாம் தமிழுக்கு மிக மிக மிக மிகக் குறைவாக ஒதுக்கி ஆனால் பதினைந்தாயிரத்தைத்தாண்டாத அளவில் பேசக்கூடிய சமற்கிருதத்திற்கு இல்லாத உயர்வைக் கற்பித்து மிக மிக மிக மிகப் பன்மடங்கு தொகை ஒதுக்கப்படுவது ஆண்டுதோறும் ஒன்றிய அரசாலேயே தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்துத் தன்மானமும் தமிழ் மான உணர்வும் இல்லாமல் நாம் அமைதி காத்து, உரிமைக் குரல் எழுப்பி வாகை சூடத் தயங்குகிறோம். தமிழுக்குரிய பெருமையைத் தேடித்தராத நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
இலக்குவனார் திருவள்ளுவன்
நிறைவு







Leave a Reply