வெருளி நோய்கள் 791-795: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 791-795
- கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி – Anatolephobia / Anatoliphobia/ Estephobia
கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி.
கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம்.
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில கோள்களின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்த நாளில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது கணிய/சோதிடப் பித்தர்களின் நம்பிக்கை. இந்தியாவில் கணிய(சோதிட)ப் பற்றர்கள், திங்கட் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிழக்குத் திசையில் பயணம் செய்ய மாட்டார்கள். இதனைக் ‘கிழக்கே சூலை’ என்பர். திங்கள்(சந்திரன்), சனி ஆகியவற்றின் திசை மேற்கு எனப்பட்டு, அதனால், திங்கள்கிழமை, சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்பர். வீட்டின் வாசல் கிழக்கு பார்த்து இருப்பின், ஞாயிறு, வெள்ளி ஆகிய கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தினால் தீங்கு நேரும் என்று அஞ்சுவர்.
Anatole என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் உதயம். சூரியன் உதயமாகும் திசை கிழக்கு என்பதால் இது கிழக்கைக் குறிக்கிறது.
உதி(த்தல்) என்பதன் அடிப்படையாகப் பிறந்த உதயம் என்னும் சொல் தமிழே.
செலவு என்றால் பயணம் என்று பொருள்.
00
- கிளி வெருளி – Papagalophobia
கிளிகள் குறித்த தேவையற்ற பெரும் அச்சம் கிளி வெருளி.
பறவை வெருளி உள்ளவர்களுக்குக் கிளி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Papagalo என்னும் இத்தாலியச் சொல்லின் பொருள் கிளி. இச்சொல் வெவ்வேறு வடிவங்களில் கிரேக்கம், அரபி, செருமானிய மொழிகளில் இடம் பெற்றுள்ளது.
00
- கிள்ளுதல் வெருளி -Pinchophobia
கிள்ளுதல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கிள்ளுதல் வெருளி.
ஒருவருக்கு வலி உண்டாக்கும் நோக்கத்துடன் அவரது தோலின் ஒரு பகுதியைத் தன் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தலே கிள்ளுதல் எனப்படுகிறது.
கிள்ளுவதால் புண் உண்டாகலாம், வேறு உடல் நோவு உண்டாகலாம் எனப் பேரச்சம் கொள்வர்.
00
- கிறித்து மர விளக்கு வெருளி – Remmiðophobia
கிறித்து மர விளக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிறித்து மர விளக்கு வெருளி.
ஒளிர்வு அல்லது ஒளி ஒற்றைத் தலைவலியை உண்டாக்கலாம் என்பதாலும் மின் அதிர்ச்சி குறித்து அஞ்சுவதாலும் அல்லது முன்னரே மின்னதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தாலும், தீ நேர்ச்சி(விபத்து) நேரலாம் என அஞ்சுவதாலும் கிறித்து மர விளக்கு வெருளிக்கு ஆ்ளாகின்றனர்.
கிறித்து மர வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்து மர விளக்கு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
காண்க: கிறித்துமர வெருளி.
00
- கிறித்து மர வெருளி – Yedanshuphobia
கிறித்துநாள் கொண்டாட்டத்தின் பொழுது பயன்படுத்தப்படும் மரம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கிறித்துமர வெருளி.
கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்கும் கிறித்து மர விளக்கு வெருளி உள்ளவர்களுக்கும் கிறித்து மர வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
காண்க: கிறித்து மர விளக்கு வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply