valanarasu01

 நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.

  (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது ஆகும். ஓர் அமைப்பு தொடர்ந்து இயங்குவதென்பதே பாராட்டிற்குரியது. அவ்வமைப்பின் சார்பில் தொடர்ந்து போட்டிகள் நடத்தி இளைய தலைமுறையினருக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குகிறார் எனில் போற்றதலுக்கு உரிய செயல் வீரர் அல்லவா இவர். போட்டிகளில் பங்கேற்கச் செய்து தனித்தமிழ்ச் சிந்தனையை ஊட்டி இவரால் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் என உயர் பொறுப்புகளில் திகழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்து வருகின்றனர்.

   மாநிலத் தமிழ்ச்சங்கத்தின் அறக்கட்டளைப் பொழிவுகள் மூலம், இலக்கியத் துறைதோறும் தொண்டு செய்து வருகிறார்.

  1. தெய்வப்புலவர் சேக்கிழார் அறக்கட்டளை
  2. செய்குதம்பி பாவலர் அறக்கட்டளை
  3. அறிவியல் அறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை
  4. தமிழ்ப்பெரும்புலவர் ஆ.அருளப்பன் அறக்கட்டளை
  5. இத்தாலியத் தமிழேந்தல் வீரமாமுனிவர் அறக்கட்டளை
  6. சட்டப்பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன் அறக்கட்டளை
  7. புலவர் தி.சு.ஆறுமுகம் அறக்கட்டளை
  8. பெரும்புலவர் இராமாநுசக்கவிராயர் அறக்கட்டளை
  9. வழக்கறிஞர் இல.கு.கு.அப்துல் இரகுமான் அறக்கட்டளை
  10. சிர்மிகு கி.ந.அம்மையப்பன் அறக்கட்டளை
  11. கவித்தென்றல் இராமாநுசக்கவிராயர்  அறக்கட்டளை

ஆகிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூலம் தமிழன்னையை மகிழ்வித்துவரும் தகைமையாளர் இவர்.

   உலகத்திருக்குறள் தகவல்  மையத் தலைவர், பேராசிரியர் சாண்சன் நூலக வாசகர் வட்டத்தலைவர், உலகத் திருக்குறள் மையத் தென்மண்டிலத் தலைவர்,  மாநிலத் தமிழ்ச்சங்கத்தின் இணைச் செயலர் முதலான பல்வேறு தமிழ் அமைப்புகளில் வீற்றிருந்து தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்து வருகிறார்.

  அமெரிக்க வாழ்வியல் நிறுவனம், பேராசிரியர் வளனரசு அவர்களின் உயர்நலப் புலமையையும் வற்றாக் கல்வி வளத்தையும் பாராட்டி, ‘மாமனிதர்’, ‘விழுமிய கல்வியாளர்’, ‘அறிவுலகத் தூதர்’, ‘வாழ்நாள் சாதனையாளர்’   முதலான சிறப்பு விருதுகளை வழங்கித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது.

  தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்  என்றால் அதனை மக்களிடையே பேச்சாலும்  படைப்பாலும் இதழ்களாலும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்  தமிழ்ப்போராளி பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனார்.  திருநெல்வேலியில் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் பணியாற்றும் பொழுதுதான் சங்கத்தமிழைச்சிலர் அழிக்க முற்பட்டது கண்டு வெகுண்டெழுந்து அதனைப் பேணிக்காத்தார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலானவற்றை வாணாள் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டார். அவர்  மீது ஈடுபாடுகொண்ட  பேராசிரியர் வளனரசு அவர்களும் அவர் வழியில் ஈடுபட்டு நாடும் ஏடும் போற்றும் வகையில் திருக்குறள் வளர்ச்சிக்குத்  தொண்டாற்றி வருகிறார்.  இவரின் பன்முகத் திருக்குறள் தொண்டு கண்டு பாராட்டி உலகத் திருக்குறள் மையம் இவருக்குத் திருக்குறள் ஞான பீட விருது வழங்கியுள்ளது. தமிழக அரசும் தன்பங்கிற்கு இவருக்குத் திருவள்ளுவர் விருதும் பொற்பதக்கமும் விரும்பி அகம் மிக மகிழ்ந்துள்ளது.

  தமிழ்ப்போராளி பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனார் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆனால்,  அவற்றைத் தொடங்கி வைக்கும் வகையில், தம் தனித்தமிழ்ப் பரப்புரைப்பணிக்கு முன்னோடியாக உள்ள பேராசிரியருக்கு, திருநெல்வேலியில் ‘இலக்குவனார் நூற்றாண்டு விழா’ நடத்தி, முன்னோடியாகத் திகழ்ந்த இவர் சீர்மையை மறக்க முடியாது.

  கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், தேம்பாவணித் திறன், வண்டமிழ்த் தொண்டர் பெருமக்கள், கிறித்துவத் தமிழ்ச்சான்றோர்  முதலான படைப்பு நூல்கள் மூலமும் எண்ணற்ற பதிப்பு நூல்கள்  மூலமும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு மலர்கள் மூலமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.

  எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொணரவும் தேமதுரத் தமிழோசை உலகமெலாம்  பரவவும்  மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இசுரேல், இத்தாலி முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

  சிவனியம், மாலியம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என்னும் சயம வேறுபாடின்றிச் சமய நல்லிணக்க அறிஞராகத் திகழ்ந்து சமயங்கள் வாயிலான தமிழ்த்தொண்டுகளை எவ்வகைப்பாகுபாடுமின்றி மக்களிடையே பரப்பி வருகிறார்.

  எண்பொருள வாகச் செலச்சொல்லும் நுண்ணறிவும் கேட்டார்ப் பிணிக்கும் சொல்லறிவும்  மிக்கமையால்   எளிதில் தமிழ்த்தொண்டாற்ற முடிகின்றது இப் பெருந்தகையாளரால்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்.” (திருக்குறள் 1021)

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

”தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித் தெழுந்தே!” எனப் பாவேந்தர்வழியில் தமிழ்க்கடமை ஆற்றும் தகைசால் அறிஞர் வளனாருக்கு அப் பெருமையினும் வேறு பெருமை வேண்டுமோ?

பவளவிழாக் காணும் வளனரசு இணையர் நூற்றாண்டுப் பெருமங்கலவிழாவை உலகத்தமிழர்கள் கொண்டாடட்டும்!

வாழ்க வளனரசு இணையர்! ஓங்குக அவர்தம் புகழ்!

–          இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை
ஆனி 1, 2045 / சூன் 15, 2014                    http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png