(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி)

இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:

      “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்ததாயுள்ளது தொல்காப்பியம்.

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில

தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை.” என்கிறார் பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11)

பாணினியம் முதல் நூலல்ல

“ஐந்திரம்” என்னும் நூலே, தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாகும். இந்தத் தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழிகளுக்கு எழுத்துகளும், இலக்கணங்களும் வடிக்கப்பட்டன. வடமொழிகளான, மாகத, பாகத(பிராகிருத) மொழிகளின் இலக்கணங்களைக் கற்கப் புகுவோரெல்லாம் தமிழ் ஐந்திரத்தை முதலில் கற்றேயாக வேண்டும் என்னும் நிலை கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. இதனைக் கருநாடகத்தின் கொப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட அருகச் சமயக் குரவர்களைப் பற்றிய கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது.(அத்திப்பட்டு முரளிதரன் முகநூல்) எனவே பாணினியத்திற்கும் வழிகாட்டி ஐந்திரமே. அவ்வாறிருக்க பாணினியத்தைத் தொல்காப்பியத்தின் மூல நூலாகக் கூறுவது தவறல்லவா?

பாணினியத்தின் காலம்

இந்தியவியலாளர் கோல்ட்சுடக்கர், பண்டார்கர், முனைவர் இராதா குமுத்து முகர்சீ, பாடக்கு ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும்,வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாத்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர் என்கிறார் ஒருவர். ஆனால், அவர் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு.120 என வேண்டுமென்றே தவறாகக் கூறுகிறார். எனவே, நடுநிலை தவறிய இவரது கருத்து ஏற்கத் தக்கதல்ல.

விக்கிபீடியாவில் உள்ளவாறு பாணினியின் காலம் பொ.ஊ.மு.520க்கும் பொ.ஊ.மு.460க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறும் காலமும் தவறு.

பாணினி காந்தார நகரத்தில் தோன்றியதாகக் கூறுகின்றனர். கிமு 330-இல் பழைய காந்தார நகரத்தை அலெக்குசாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக் குசாந்தர் ஆவார். காந்தார நகரம் உருவானபொழுதே பாணினி தோன்றியவராக இருந்தாலும் அவரது காலம் கி.மு.330இற்குப் பிற்பட்டதே. எனவே அதற்கு முந்தையதாகக் கூறுவனவெல்லாம் கட்டுக்கதைகளே. பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் முனைவர் பந்தர்க்கார். நகர வரலாற்று அடிப்படையில் இக்கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது.

(தொடரும்)