வெருளி நோய்கள் 901-905: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 896-900: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 901-905
901. கெடுமதிப்பு வெருளி – Oppugnophobia(2)
சுட்டுரை, முகநூல் முதலான குமுகத் தளங்களில் பின் தொடருநர் இழிவாக எண்ணும் வகையில் சிலர் மதிப்புக்கேடாகக் குறிப்பிடுவார்கள் எனப் பேரச்சம் கொள்ளுதல் கெடுமதிப்பு வெருளி.
00
902. கெண்டக்கி கோழி வெருளி -KFCphobia
கெண்டக்கி கோழி உணா குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி கோழி வெருளி
கெண்டக்கி வறுகோழி (KFC, Kentucky Fried Chicken) என்பது விரைவு உணவுச்சாலைகளின் கூட்டமைப்பு. இதன் தலைமையிடம் கெண்டக்கியில் உள்ள (உ)லூயிவிலில் (Louisville ) உள்ளது.
வறு கோழியுடன் பிற உணவுகளும் விற்பதால் கெண்டகி வறுகோழி வெருளி என்று சொல்லாமல் கெண்டகி கோழி எனக் குறிக்கப்பெறுகிறது.
00
903. கெண்டக்கி வெருளி -Kentuckyphobia
கெண்டக்கி மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி வெருளி.
கெண்டக்கி(Kentucky) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் 15 ஆவது மாநிலமாக 1792 இல் இணைந்தது. இதன் தலைநகரம் ஃபிராங்போர்ட்டு(Frankfort).
கெண்டக்கி மாநிலம் தொடர்பானவற்றுள், உணவு, பழக்க வழக்கம், பண்பாடு, தொழில், மக்கள் என ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருண்மைகளில் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்.
00
904. கேட்பி வெருளி – Hearingaidphobia
கேட்புதவிப்பொறி(Hearingaid) குறித்த வரம்பற்ற பேரச்சம் கேட்பி வெருளி.
செவிப்புலன் குறைந்தோர் கேட்பதற்குப் பயன்படும் கருவி காதொலிக்கருவி அல்லது செவித்துணைக் கருவி அல்லது கேட்புதவிப்பொறி என அழைக்கப்படுகிறது. இதனைச் சுருக்கமாகக் கேட்பி எனக் குறிக்கலாம்.
கேட்பியை அணிவதால் தம்மைச் செவிடர் எனப் பிறர் எண்ணுவர் என்ற அச்சம், தரமற்றவற்றை அணிந்து சரியாகக் கேட்க முடியாமல் போவதால் ஏற்படும் இடர் போன்ற கவலையும பேரச்சமும் கொள்வதால் கேட்பி வெருளி வருகிறது.
00
905. கேயானு வெருளி – Keanuphobia
கேயானு கதைப்பாத்திரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கேயானு வெருளி.
கேயானு இரீவசு என்னும் கனடா நடிகர் உள்ளார். இங்கே அவரைக் குறிக்கவில்லை. தீன் கோண்டசு (Dean Koontz) என்பவரின் பொய்யான நினைவகம் (False Memory) என்னும் புத்தகத்தில் உள்ள பாத்திரம் ஒன்றின் பெயர். அதில் கேயானு மீது ஒரு பெண்ணிற்கு அளவுகடந்த வெறுப்பும் அச்சமும் இருப்பதாக வரும். அதனையே கேயானு வெருளி என்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply