முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிநிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஊடகத்தினர், பொதுமக்கள், ஊகச் செய்தியாளர்கள் எனப் பல தரப்பாரும் எண்ணியதற்கும் சொல்லியதற்கும் மாறாக ஆட்சித் தேரைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டுத் தேர்தல் காலத்தை நெருங்கிவிட்டார். மத்தியப்பிடியில் சிக்கியும் சிக்காமலும் நழுவியும் நழுவாமலும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகிறார். பாராட்டிற்குரிய பல பணிகளை ஆற்றி வருகிறார்.

“எதிர்க்கட்சித் தலைவர் தாலின், தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்வு செய்தார்கள்” எனப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி கூறிவருகிறார். கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இப்பொழுதும் முதல்வராகவும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஒருவர் இவ்வாறு கூறுவது அறியாமையாகக் கருத முடியாது. அவ்வாறிருக்க இவ்வாறு கூறுகிறார் என்றால் என்னென்பது? சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரைத் தேர்வு செய்வது என்பது வெளியே காட்டப்படும் நடைமுறை. உண்மையில் கட்சித்தலைமை அடையாளம் காட்டப்படுபவரைத்தான் அங்ஙனம் தேர்ந்தெடுத்ததாக அரங்கேற்றுவதே உள்ளார்ந்த செயல்பாடு. முதல்வர் மட்டுமல்ல, தலைமையமைச்சர், குடியரசுத்தலைவர் முதலான ஆட்சிப்பொறுப்பில் உள்ள தெரிவுமுறையெல்லாம் கட்சித்தலைமையின் விருப்பத்திற்கிணங்க நடத்தப்படும் நாடகங்கள்தான் என்பதை அரசியலில் அரிச்சுவடி அறிந்தவர்களும் அறிவார்கள். உள்ளாட்சி உறுப்பினர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வரை அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கட்சித்தலைமை வாய்ப்பு அளிப்பதால்தான் இந்த வாய்ப்பை அவர்கள் பெறுகிறார்கள்.

கட்சிச்சார்பின்றிப் போட்டியிடுபவர்கள்தாம் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பெருமை பேசலாம். பிறர் யாருமே கட்சியால் அடையாளங் காட்டப்படுவதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள். எனவேதான் அவர்கள் வெற்றி பெற்றதும் அதிகாரத் தலைமைக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். முன்பு குடியரசுத் தலைவாகத் தேரந்தெடுக்கப்பட்ட கியானிசெயில்(சிங்கு)வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும் கட்சித்தலைவியான இந்திராகாந்தி நடந்தபாதையை மகிழ்ச்சியுடன் துப்புரவு செய்வேன் என்றார்(1982). அவர் குடியரசுத்த்லைவரானதும் இந்திராகாந்தி சீருந்தில் இருந்து இறங்கியபொழுது கதவைத் திறந்துவிட்டார். அவர் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 72விழுக்காடு பெற்று வெற்றி பெற்றவர். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இறுமாப்புகொள்ளாமல் தன்னைத் தெரிவுசெய்த கட்சித்தலைவி இந்திராகாந்தியால்தான் குடியரசுத்தலைவர் ஆனதை உணர்ந்து அவருக்கு (அளவு கடந்த) நன்றியுடன் நடந்து கொண்டார்

இதேபோல் மத்தியப்பிரதேசத் தொழில் அமைச்சர் கைலாசு விசயவர்கியா(Kailash Vijayvargia) பாசக தலைமை தனக்கு வாய்ப்பு தந்தமைக்காக எனக்குக் கட்டளையிட்டால் கட்சி அலுவலகத்தைத் துப்புரவும் செய்வேன் என்றார்(2013). இவ்வாறு பற்பலரைச் சான்றாகக் கூறலாம். தமிழ்நாட்டிலும் அமைச்சர்களாகவும் பேரவைத் தலைவர்களாகவும் வாய்ப்பு பெற்றவர்களும் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவதும் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய வாய்ப்பு பெறாதவர்களும் தங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். பாசகவின் சதி அரங்கேறாமல் சசிகலா சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் அவரின் அடிமையாக் காட்டிக்கொள்வதில் போட்டி போட்டிருப்பார்கள். விடுதலை யான அவர் தமிழகம் திரும்பியதும்  இப்படிப்பட்டக காட்சிகள் அரங்கேறவும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் ஆட்சி என்ற பெயரில் கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. கட்சி ஆட்சி என்றால் ஒரு சிலரின் வல்லாண்மைக்கு உட்பட்டதுதான். கட்சித்தலைமையின் விருப்பத்திற்கு உரியவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுத் தேர்தல் முறையில் வெற்றி பெறுகிறார்கள்; ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் ச.ம.உ(எம்.எல்.ஏ)க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உதடு சொன்னாலும் சொல்பவர் உள்ளத்திற்கு உண்மை தெரியும் என்பதால்தான். சசிகலா நினைத்திருந்தால் செங்கோட்டையனுக்கோ சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத தம்பிதுரைக்கோ வேறு யாருக்கோ முதல்வர் பதவி தந்திருக்கலாம்.  சாதி அடிப்படையிலும் யாருக்கேனும் முதல்வர் பதவி தந்திருக்கலாம். எனவே, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு அ.தி.மு.க.சட்டமன்றக் குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி முதல்வரானவர், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கூறுவது மனமறிந்த பொய்யே! சட்டமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அவருக்கு இருந்தது என்றால் கூவத்தூருக்கு ஏன் தேவை ஏற்பட்டது. அவர்களைக் கூட்டி நேரடியாக முதல்வராக ஆகியிருக்க வேண்டியதுதானே!

அதேநேரம் எடப்பாடியாருக்கு இந்த உண்மையின் அடிப்படையில் நன்றி உணர்வு இருப்பதால்தான் பிற அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக வன்மையாகக் கருத்து தெரிவித்தாலும்  அவரைத் தாக்கி இவர் எதுவும் பேசவில்லை. அப்படிப்பட்டவர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொய்யாக முதல்வரானதன் காரணம் ச.ம.உ.(எம்.எல்.ஏ)க்கள் என்பது சரியல்ல.

ஒருவேளை, “சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளைக் கேட்டபொழுது பெரும்பான்மையர் என்னை விரும்பினார்கள், எனவே என்னைப் பரிந்துரைத்தார்” என்றுகூடச் சொல்லலாம். அப்படியானாலும் பெரும்பான்மையர் விருப்பத்தை ஏற்று நடுவுநிலைமையுடன் செயல்பட்டார் அல்லவா? இதை அற்ப உதவியாகக் கருதலாம். ஆனால்,

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

(திருவள்ளுவர், திருக்குறள் 102) என்பதல்லவா அறநெறி.

நன்றி கொன்றமை தவிர ஆட்சித்திறனால், சசிகலா தக்கவரைத்தான் முதல்வராக அமர்த்தியள்ளார் என்னும் நற்பெயரை அவருக்கு வாங்கித் தந்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 110)

 என்னும் நிலையைத் திறமையும் ஆளுமையும் மிக்கவர் அடையலாமா?

அஃதுமட்டுமல்ல. உதவியின் அளவைப்பொறுத்து உதவி மதிப்பிடப்படுவதில்லை. உதவிபெற்றவரின் பண்பின் அடிப்படையில்தான் உதவி மதிப்பிடப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.(திருவள்ளுவர், திருக்குறள் 105)

என்னும் தமிழ்மறைக்கிணங்க பெற்ற உதவியை மறக்கும் பண்பற்றவராக மாறலாமா?

ஒருவேளை காட்சிகள் மாறினால், “நான் சின்னம்மாவால் அடையாளங்காட்டப்பட்டவன்” எனப் பெருமை பொங்கக் கூறும் நிலையும் வரலாம். எனவே, இனிமேல், முதல்வர், தான் சசிகலாவால் முதல்வராகவில்லை எனச் சொல்வதையாவது இனி நிறுத்த வேண்டும். தன்னம்பிக்கை உள்ள முதல்வர் அவ்வாறு பொய்யுரை புகல்வதை நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

வளர்க அவர் நற்பணிகள்!

வெல்க அவர் நன்முயற்சிகள்!

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல