(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி)

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5

அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்
ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?

மாற்றம் உலகின் இயற்கையெனஇங்கு
மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம்விண்ணில்
பூத்து கிலவ விதித்தனனே!

என்ற பாடல்களில் சிறந்த கருத்தும்,

கூனக் கிழவி நிலவினிலேராட்டில்
கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவேகாந்தி
மாமதி யோங்கி வளருதம்மா!

என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம்.

காட்சி இன்பம்

ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள். அதற்கு அந்த ஏழைத் தாய், “மகளே! நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்க நமக்குக் கடிகாரமும் வேறுவேண்டுமா?” என விடையிறுக்கிறாள். சேவற் கோழியும் காகமும், செங்கதிரும் செந்தாமரையும், தன் நிழலும் நேரத்தைச் சரியாக உணர்த்துமே என்று அந்தத் தாய் இயற்கையின் இனிய பெற்றியை எடுத்து இயம்புகின்றாள்.

சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கிஅவை
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோருக்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?

என்று இறுதியாகக் கூறி, மனித வாழ்விற்கு இயற்கை பின்னணியாகப் பொலிவதனை எடுத்து மொழிகின்றார்.

அடுத்து, அவருடைய ‘சைக்கிள்’ பாட்டு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பாட்டு.

தங்கையே பார்! தங்கையே! பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்!

என்று தொடங்கி,

ஒன்றன் பின் ஒன்றாக
உருளும்பை தாக்களைப் பார்!
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்!

என்று குழந்தைகளுக்குப் பாட்டிலேயே ஒற்றுமை உணர்ச்சியினை ஊட்டுகின்றார்.

கதைப்பாட்டில் கருத்து

‘ஊகம் உள்ள காகம்’ ‘நெற்பானையும் எலியும்’ ‘அப்பம் திருடின எலி’ முதலிய கதைப் பாடல்கள் குழந்தைகளுக்குக் கதையின் வாயிலாக அரிய கருத்துகளை உணர்த்தி நிற்கின்றன. தண்ணிர்த் தாகத்தால்,அலைந்து திரிந்த காக்கை மண்ணாற் செய்த ஒரு சாடியின்:அடியில் சிறிது தண்ணிரைக் கண்டு, அந்தச் சாடியினுள் சிறு சிறு கற்களைப் பொறுக்கி வந்து இட்டு, தண்ணிர் மேலே வர, நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது என்று கதை சொல்லி, கதையின் இறுதியில்,

ஊக்க முடையவர்க்குத்துன்பம்
உலகில் இல்லை, அம்மா!
ஆக்கம் பெருகும், அம்மா!-இதை நீ
அறிய வேண்டும், அம்மா!

என்று கூறி, ‘ஊக்கம் உண்மை வாழ்வுக்கு ஆக்கம்’ என்பதனை உணர்த்தியுள்ளார்.

‘நெற்பானையும் எலியும்’ என்ற கதைப் பாட்டில் ஓசை நயத்தோடு மலைவீழ் அருவி போன்று சொற்கள் குதித்து வருவதையும் காணலாம்.

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அங்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

பாட்டி வீட்டில் ஒரு பழைய பானையில் நெல் இருந்தது. பானையின் ஒருபுறம் ஒட்டை, அந்த ஒட்டையின் வழியே உள்ளே சென்ற சுண்டெலி ஒன்று நெல் தின்றது. அளவுக்கு மீறித் தின்றதால் வயிறு புடைத்தது. எனவே உள்ளே சென்ற எலி ஒட்டை வழியே வெளியே திரும்பி வர முடியாமற் போயிற்று. மறுநாள் பாட்டி பானையின் மூடியைத் திறந்தாள். எலி வெளியே வந்தது. ஆனால் பாவம், அந்த வேளை பார்த்துப் பூனை ஒன்று அங்கே வந்து விட்டது. பூனை எலியைத் தின்று விட்டது. இந்தக் கதையைக் கூறி, இறுதியில்,

கள்ள வழியினிற் செல்பவரைஎமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத்தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

என்று கள்ள வழியில் சென்றால் காலன் விடமாட்டான்; கள்ள வழியில் சென்றால் பூனைக்கு இரையான சுண்டெலியின் கதியே நம் கதியும் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளும். இவ்வாறு கதையும் கருத்தும் இணைந்துள்ள இத்தகைய கதைப் பாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் துணை நின்று, பண்பு நிலைக்குப் படிப் படியாகக் கொண்டு செல்லும்.

அப்பம் திருடின எலி, திருட்டில் பெற்ற அப்பத்தைத் தான் மட்டுமே தின்று இறப்பது உறுதியாயிற்று என்று கூறி, அளவு கடந்தால் ஆரமுதும் நஞ்சு என்ற கருத்தையும், கிட்டிய பொருளை எட்டிய மட்டும் எல்லார்க்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்ற கருத்தினையும் கவிமணி புலப் படுத்தியுள்ளார்.

‘ஒளவையும் இடைச்சிறுவனும்’ என்ற பாடல், ஆழக் கற்றாலும் அடக்கம் மிகத்தேவை என்பதனையும் ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்ற பாடல் பிறருக்கு நன்மை செய்பவர் மேற்குவத்தார் என்றும், தீமை செய்பவர் தீண்ட ஒண்ணாதார் என்றும் குறிப்பிடுகின்றன.

பெரியோரைப் போற்றுதல்

குழந்தைகளுக்குப் பெரியோர்பால் பேரன்பும் மதிப்பும் பெருக வேண்டும் என்பதனைச் சில பாடங்களில் கவிமணி வற்புறுத்துகின்றார். ஒளவைக் கிழவியின் அருமையினை,

கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே!

என்றும், திருவள்ளுவரை,

சாதி ஒன்றேயாம்தமிழர்
சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்என்று
நிலைநிறுத்தி நின்றோன்

என்றும், கம்பனை,

ஆரியம் நன்குணர்ந்தோன்தமிழின்
ஆழம் அளந்துகண்டோன்;
மாரி மழைபோலக்கவியின்
மழைபொழிந் திடுவோன்

என்றும், அமரகவி பாரதியினை,

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழ்ப் பெற்றோன்

என்றும் பாடியுள்ளார்.

வாழ்க்கை நீதிகள்

வளரும் இளம்செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப் பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், ‘நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத்தேடிவரும்’ என்றும் ‘நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா’என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடியாகிப் பள்ளம் உயர்மேடாகும் என்றும் கூறி, இறுதியில்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்