அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்
தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே கொடுமை! இன்று தமிழ்மொழி வாயிலாகக் கல்வி கற்க மாணவர்கள் முன்வராத காரணமும் தமிழ்ப்புலமையுடையோரை இழ்ந்து ஆங்கில அறிவு உடையோரைப் போற்றுவதுதான். ஆதலின் தமிழக அரசு, ‘‘தமிழ் வழியாகப் பயின்றுள்ளோர்க்கும் தமிழ்ப் புலமையுடையோர்க்கும் முதலிடம் அளிக்கப்படும்’’ என அறிவித்தாலன்றி தமிழ் வழியாகப் பயில யாரும் முன்வரார். ஆகவே, தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு உடனடியாக இத்தனை விளம்பரப்படுத்தி அறிவித்தால் போதும். தமிழ் வழியாகப் பயிலவும் தமிழ்ப் புலமைப் பட்டம் பெறவும், ஓடோடிவருவர். அரசு தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டத்தின் பொருட்டுச் செலவழிக்கும் தொகையும் மிஞ்சும். மாணவர்களே தமிழை விரும்பிலர் என்ற குறையும் நீங்கும். தமிழ்ப்புலவர்களும் பணிபுரியலாம் என்ற விதியும் வேண்டியதின்று.
எனவே, தமிழையாட்சி மொழியாகக் கொண்டுள்ள தமிழக அரசில் தமிழ்ப்புலமையுடையோர்க்கே முதலிடம் என்பதனைத் திட்டவட்டமாக உடனே அறிவிக்க வேண்டுகிறோம். இத்துறையில் ஓரளவு ஆர்வம் காட்டும் தமிழக அரசுக்கு இஃது இயலாதது ஒன்றன்று.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
– குறள்நெறி: மாசி 03, 1995 / 15.02.1964








Leave a Reply