(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள் – தொடர்ச்சி)

குறள்நெறி

தமிழ்த் தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்கிறீர்கள்? சல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா?

பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படிச் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம்தான் ஒரு தேசிய இனப் பண்பாடாக அமைகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். இதை எதிர்த்து, பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று சொல்கிற பண்பாடு மறு பக்கம். இந்த இரண்டும் இன்றோ, நேற்றோ முளைத்து விடவில்லை. நம்முடைய வரலாறு நெடுகிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபக்கம்தான் திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை நீடிக்கிறது. மற்றொரு பக்கம் பார்ப்பனக் கருத்தியல்கள்.

முற்போக்கான தமிழ்த் தேசிய பண்பாடு என்பதன் அடையாளமாகக் குறள்நெறியை முன்வைக்கிறோம். குறள்நெறி என்பது சமத்துவம், பகிர்வு, அன்புடைமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. நிலையாமைதான் அதன் மெய்யியல். இதைத்தான் நாம் தமிழ்த் தேசிய பண்பாடு என்கிறோம்.

இது சாதியத்திற்கு, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பண்பாட்டு நிலைப்பாடு. தமிழ்த் தேசியப் பண்பாடு விரிவடைவதன் ஒரு பகுதிதான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது. எழுத்துகளின் வடிவங்கள், உடைகள் என எல்லாவற்றிலும் காலத்திற்குத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் சமத்துவப் பண்பாட்டின் இழைகளாக இருக்க வேண்டும். சமத்துவப் பண்பாட்டின் மாற்றங்களுக்கு இணையாகத் தான் இந்தப் பண்பாடு வளர வேண்டும்.

பல்வேறு பண்பாடுகளும் ஒரு தமிழ்த்தேசிய பண்பாட்டோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணைவுகளை அங்கீகரிக்கிற ஒரு பண்பாட்டைத் தான் நாம் தமிழ்த் தேசியப் பண்பாடு என்கிறோம். தமிழ் நாட்காட்டி வைத்திருப்பதால் அதையே தான் பயன்படுத்த வேண்டும் என்று அருத்தம் கிடையாது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் நாட்காட்டியை நாமும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நம்முடைய மாதங்கள், வருடங்கள் போன்றவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சல்லிக்கட்டைப் பொறுத்த வரை, விளையாட்டுகள் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் இருந்துதான் வருகின்றன. விலங்குகளோடு இரண்டு கால் விலங்குகளாக மனிதன் இருந்த நிலை மாறி கால்நடைகளை உழவுக்குப் பயன்படுத்துவது, தன்னுடைய பயணத்திற்குப் பழக்கப்படுத்துவது என மாற்றத் தொடங்கிய காலத்தில்தான் சல்லிக்கட்டு தொடங்கியிருக்கும். பிரபுத்துவ, சாதியச் சமூகத்திற்கு முன்னதாகவே சல்லிக்கட்டு இங்கே இருந்து வந்திருக்கிறது.

நிலப்புரபுத்துவச் சமூகத்தின் ஒரு கூறாகத் தான் சல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. அஃதாவது தன்னிடமிருந்த அடிமைகளையும், மாடுகளையும் நிலப்பிரபுக்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் சல்லிக்கட்டு என்ற ஒரு கூற்றும் உள்ளதல்லவா?

ஒவ்வொரு பழக்கமும் அந்தந்தக் காலத்தின் நிகழ்வை உள்வாங்கித்தான் மாறும். ஆடு, கோழி பலியிடுவது என்பது நீண்டகாலமாக நம் மக்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இடையில் நிலப்புரபுத்துவக் காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது அடிமைகள் ஆடு, கோழிகளை நிலச்சுவான்தார்கள் வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தஞ்சை, திருவாரூரின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையிலும் நிலப்பிரபுத்துவம் வந்து விட்டது. அதற்காகப் பொங்கலை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், ஆதிக்கச் சக்திகளும், அதன் கருத்தியலும் தேசியப் பண்பாட்டில் கலப்பதை நாம் அடியோடு தடுத்து விட முடியாது. இதன் அடிப்படையில்தான் சல்லிக்கட்டையும் பார்க்க வேண்டும். இதிலிருக்கிற பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும். எல்லாரும் கலந்து கொள்ளும் படியும் பாதுகாப்பானதாகவும் அதை மாற்ற வேண்டும். நம்முடைய இயக்கம் சார்பில் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே இருக்கிற பழக்கம் அது, அப்படியே தொடரட்டும், காலப்போக்கில் அது மறையட்டும் என்றுதான் சொல்கிறேன். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியவாதிகள் கற்பு என்ற பெயரில் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ‘குட்பு-கற்பு’ சிக்கலின்போது பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டது, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்குச் சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்கக் கற்பை வைத்தார்கள்.

எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய விழுமியங்களோ, கருத்துகளோ கிடையாது. ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்திற்குப் பொருந்தும்; இன்னொரு காலத்திற்குப் பொருந்தாது. கலையும் இலக்கியமும் கடவுளையும், அரசரையும் புகழ்ந்து பாடுவதற்கே என்ற நிலையில் இருந்தபோது ‘கலை கலைக்காகவே, இலக்கியம் இலக்கியத்துக்காகவே’ என்ற முழக்கம் வந்தது. அப்போது அது மிகவும் முற்போக்காகக் கருதப்பட்டது. பின்னர் அதுவும் பின்னால் தள்ளப்பட்டு ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற கருத்து முற்போக்குக் கருத்தாக இப்போது இருக்கிறது.

இப்படித்தான் கற்பும். பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் பாதுகாப்புக்கு ஒருவன் தேவை என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட கருத்துதான் அது. ஆனால் இன்று அது பெண்ணை அடிமைப்படுத்துகிற கருத்தாக மாறி விட்டது. எனவே அதை எதிர்ப்பதைப் பற்றி எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அது சனநாயகத்தின் பெயரில் சமூக உறவுகளில் வன்முறையை – அராசகத்தை நுழைப்பதாக இருக்கக் கூடாது.

குட்பு முன்மொழிந்த கருத்து வன்முறை(அராசகம்). அதனால் அதை எதிர்த்தோம். அதில் ஆணாதிக்கச் சிந்தனை எதுவும் கிடையாது. எங்கெல்சு குடும்பம் என்ற அமைப்பை சனநாயகப்படுத்துவது பற்றிப் பேசுவார். குடும்பம் என்ற அமைப்பில் ஆணாதிக்கச் சிந்தனையும், சுதந்திர மறுப்பும் இருப்பதைக் களைய வேண்டும். குடும்பத்தையே ஒழித்து விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குடும்ப ஒழிப்பு தமிழ்த் தேசிய இனத்தின் சமூகக் கட்டமைப்பையே சீரழித்து விடும்.

ஓர் ஒழுங்கை எதிர்ப்பது என்பது இன்னொரு ஒழுங்கை கட்டமைப்பதற்காகவே தவிர, ஒழுங்கே இல்லாமல் எப்படியும் போகலாம் என்பதற்காக அல்ல.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300