நிகழ்வுகள்

வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு இலக்கிய விருது

 

வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு

சிறந்த  ஐக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது

 

       கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புதினம், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை,  ஐக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு,உரிய படைப்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும்  தலைக்கு உரூ.5000/- பணமுடிப்பும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன.

      வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேசு. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளராகவும் உள்ள கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’  ஐக்கூ கவிதை நூல் சென்ற ஆண்டில் வெளியான சிறந்த ஐக்கூ கவிதை நூலாகத் தேர்வு செய்யப்பட்டது; ’கவிஞர் விழிகள் தி.நடராசன்’ பெயரிலான இலக்கிய விருது  இவருக்கு வழங்கப்பெற்றது.

  சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கில் ஆனி 02, 2048 / சூன் 16, 2017 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் இலக்கிய விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் உரூ.5000/- பண முடிப்பையும்  தமிழக அரசின்  வேளாண் துறை முன்னாள் இயக்குநர்  முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப., வழங்கிச் சிறப்பித்தார்.

   இவ்விழாவிற்குத் தமிழின் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் இராம.குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.

      கவிஞர் மு.முருகேசு இதுவரை 35-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய,  திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

      இவரது படைப்புகளில் இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும்  மேற்கொண்டுள்ளனர்.

 இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  இவரது தொடர் ஐக்கூ செயல்பாடுகளுக்காகக் குவைத்து நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கம் ‘குறுங்கவிச் செல்வர்’ எனும் விருதினை சென்ற ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டிதழ்களையும் தனது படைப்புகளுக்காக  இவர் பெற்றுள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேசு, பொதுவுடைமை இயக்க மூத்தத் தலைவர்  இரா..நல்லக்கண்ணு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.திருமலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் கவிமுகில்  முதலான ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

–  வந்தை அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *