நிகழ்வுகள்

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்
சார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது.

தமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வு
பேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நல்நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வந்தவாசி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பி.தங்கராமன், வாசிப்பு இயக்க விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணிக்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “கல்விக்கண் திறந்த கருமவீரர் காமராசரின் 117-ஆவது பிறந்த நாளான இன்று, வாசிப்பு இயக்கத்திற்கான விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்குவது
மிகவும் பொருத்தமான நாளாகும். பாடப் புத்தகங்களைப் படிப்பதிலேயே இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகள் நன்றாகப் படித்து அதிக மதிப்பென் பெற வேண்டும் என்பதிலேயே
குறியாக இருக்கிறார்கள். பாடப் புத்தகங்களைக் கடந்து மற்ற நூல்களையும் குழந்தைகள் படிக்க வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் தூண்டுகோலாக இருக்க
வேண்டும். நூலகங்களுக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும். நாம் எவ்வளவு பொது அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கின்றோமோ,
அந்த அளவிற்கு நன் வாழ்வின் உயரங்களை நம்மால் அடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.
பேரணியில் ஆசிரியைகள் எசு.கலைவாணி, பி.சுசாதா, எசு.சந்தானலட்சுமி, சமூக ஆர்வலர் அறிவொளி வெங்கடேசன் முதலானோர் கலந்து கொண்டனர். இதில்,
வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணி அரசுக் கிளை நூலகத்திலிருந்து புறப்பட்டுத், தேரடி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று காமராசர் சிலை, கடைவீதி
வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன் நிறைவடைந்தது.
நிறைவாக ச.தமீம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *