(தந்தை பெரியார் சிந்தனைகள் 32 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 33

 4.  இந்தி எதிர்ப்பு

உலக வாழ்க்கையில் ஓர் ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத மொழியாகிய இந்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பெற்று வருகிறது. என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்” என்று எழுதிய ஐயா அவர்கள் இந்தி எதிர்ப்புக்காக மேற்கொண்ட பணி மிகப் பெரியது. இவற்றை விவரமாக ஈண்டு எடுத்துக்காட்டுவேன்.

1926-ஆம் ஆண்டு முதலே பெரியார் தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப்பபெறுவதை எதிர்த்து வருகின்றார்.

“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை. அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்” (குறிப்பு 1) என்று கூறி வந்ததுள்ளனர்.

1924-ஆம் ஆண்டு திசம்பரில் திருவண்ணாமலையில் நடைபெற்ற 30-ஆவது காங்கிரசு மாநாட்டில் நம் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள் (அப்போது அவர் காங்கிரசில் இருந்தவர்). அவரது தொடக்க உரையில் கூறியது.

“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலசுதீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும். . . வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு. மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திரமொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப்புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும். தாய்மொழியில் பற்றுச்செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்.” என்பதால் இவர்தம் அளவு கடந்த தமிழ்ப்பற்றினை அறியலாம். தமிழைப் பேணவேண்டும் என்பதில் ஐயா அவர்கட்கு இருந்த இணைவேறு எவர்க்கும் இல்லை.

(அ) இந்தி எதிர்ப்புபற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின்சில பகுதிகள்:

“இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்; பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பலவிடங்களில் கட்டாய பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு? இனிக் கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அநுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்யக் கற்பித்துத்தரும் ஒரு வித்தையாகிவிட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாமரமக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்”

(ஆ) இக்கட்டுரையில் மேலும் பல உண்மைகள் உள்ளன.

(இ) 1930-இல் நன்னிலத்தில் (தஞ்சைமாவட்டம்) நடைபெற்ற ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தித் திணிப்பைக் கண்டித்து முடிவு செய்யப் பெற்றது. இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தை எழுதியவர் தோழர் எசு. இராமநாதன் அவர்கள். இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் சாமி. சிதம்பரனார் அவர்கள். தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

பல ஆண்டுகட்கு முன்னரே மறைமலையடிகள் “இந்தி பொதுமொழியாவதற்குத் தகுதியுடையதன்று; இந்தித் திணிப்பால் தமிழ்கெடும்; தமிழர் துன்புறுவர்” என்பவற்றை விளக்கிக் கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு இருக்கும் செய்தியை மாண்புமிகு முதலமைச்சர் ஆச்சாரியார் அறிவார். ஆயினும் “இந்தியைக் கட்டாய பாடமாக்குவேன்” என்று கூறினார். காங்கிரசுகாரர்கள் பலரும் எதிர்த்தனர். தோழர் பசுமலை எசு. சோமசுந்தர பாரதியார் அவர்கள் அதைக் கண்டித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார். தமிழ் நாடெங்கும் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் முதலமைச்சரின் கருத்து கண்டிக்கப்பெற்றது.

(ஈ) 1937 திசம்பர்-26இல் திருச்சியில் தமிழர் மாநாடு கூட்டப்பெற்றது. (குறிப்பு 2)    தோழர்கள் கி.ஆ.பெ. விசுவநாதம், டி.பி, வேதாசலம் (வக்கீல்) ஆகியவர்கள் இதனைக் கூட்டமுனைந்து நின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள்: காங்கிரசுக் கட்சியினர், நீதிக்கட்சியினர், முசுலீம்லீக்கினர், கிறித்தவ சபையினர், வைதிகர்கள், புலவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே. மாநாட்டின் தலைவர் பசுமலை நாவலர் எசு. சோமசுந்தர பாரதியார். இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேறின. இம்மாநாட்டைப் பார்த்தோர் தந்தை பெரியாரையே புகழ்ந்தனர். அவருடைய உண்மைக்கொள்கையே இம்மாநாடாக உருக்கொண்டதென வியந்தனர். இதுமுதல் தமிழர் கிளர்ச்சி வலுத்தது. நகரெங்கும் கூட்டங்கள், மாநாடுகள், தமிழ் உரிமைப்போர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆகியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன.

ஆயினும் முதலமைச்சர் ஆச்சாரியார் விட்டுக் கொடுக்க வில்லை. ஆணவத்தைத் தளர்வுறச் செய்தது. சிலமாற்றங்களுடன் இதித் திணிப்பு நுழைந்தது. எல்லாப் பள்ளிகளிலும் என்றிருந்த திட்டம் 125 பள்ளிகள் (பரீட்சாரத்தமாக) என்று ஆயின. படிக்கவேண்டியதும் முதல் மூன்று படிவங்களில்தாம் இதற்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. திட்டம் பிசுபிசுத்தது; செத்தபாம்பு மாதிரிதான். திரு.ஆச்சாரியார் மக்கள் எதிர்ப்பு நாடியை நன்கு அறிபவர். ஏனைய காங்கிரசார்போல் திமிர் பிடித்தவர் அல்லர்.

(உ) 1938 பிப்பிரவரி 27 இல் காஞ்சிமாநாகரில் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள்; ஆந்திரர் (பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானவர்). மாநாட்டைத் திறந்து வைத்தவர் முன்னாள் சட்ட உறுப்பினர் சர்.எம்.கிருட்டிணநாயர். தொடர்ந்து மறியல்கள், உண்ணா விரதம், போராட்டங்கள் முதலியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன. சட்ட மறுப்புக் காலத்தில் வைசுராய் பிரபுவால் பிறப்பிக்கப் பெற்ற கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் காங்கிரசு அரசு இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் மீது தாராளமாய்க் கையாண்டது. இது குறித்துப் பலகண்டனக் குரல்கள் எம்மருங்கும் எழுந்தன. தந்தை பெரியார் “அமைச்சர் இல்லத்துக்கு முன் மறியல் செய்யாதிருப்பது நலம்” என்றோர் அறிக்கை விடுத்தார். ஆச்சாரியாரைப் போலவே பெரியாரும் இங்கிதம் தெரிந்தவர்.

(ஊ) திருச்சியிலிருந்து 100 போர் வீரர்கள் கொண்ட இந்தி எதிர்ப்புப் படையொன்று சென்னையை நோக்கிச் சென்றது. இப்படையைத் தந்தை பெரியார், சனாப் கலிஃபுல்லாசாகிப் எம்.ஏ.(சிலகாலம் திருச்சி மாவட்ட வாரியத் தலைவராயிருந்தவர்) முதலியவர்கள் நல்லுரை கூறி வழி அனுப்பி வைத்தனர்.

இப்படையில் காஞ்சியைச் சேர்ந்த பரவத்து இராச கோபாலாசாரியர், இராவுசாகிபு குமாரசாமி பிள்ளை, மணவை இரெ. திருமலைசாமி, கே.வி. அழகர்சாமி, இராமாமிர்தத்தம்மாள், தோழர் முகைதீன் போன்ற பலர் இப்படையில் சென்றனர். இப்படை சென்னையை அடைந்ததும் அதற்கு வரவேற்பு அளிக்க, சென்னைக்கடற்கரையில் என்றும் கண்டிராத அளவு சுமார் 70,000 பேர்கள் கூடினர். அன்று அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முதற்போர்க்குரலிட்டு அதனை விளக்கிக் கூறினார். அன்று முதல் அதுவே தமிழரின் கொள்கையாயிற்று.

இப்படைவீரர்களில் பலர் சென்னையில் மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் பேரால் கூட்டுறவு இயக்க முன்னாள் துணைப்பதிவாளர் சி. டி. நாயகம் (தி.நகர் சர். தியாகராசர் மேனிலைப் பள்ளியை நிறுவியவர்), தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.,பி.எல்., (சிறந்த பேச்சாளர், சைவசித்தாந்தி), ஈழத்து சிவானந்த அடிகள், சி.என். அண்ணாத்துரை (முதல் தி.மு.க முதலமைச்சர்), டி.ஏ.வி நாதன், சாமி அருணகிரிநாதர், கே. இராமய்யா, மறை. திருநாவுக்கரசு, திருவாரூர் பாலசுந்தரம் போன்ற 1,500 பேர்கள் சிறைப்பட்டனர்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1. குடியரசு (10-5-1931) இதழில் எழுதப்பெற்ற தலையங்கம். குடியரசு வாரஇதழ் 2.5.1925இல் ஈரோட்டில் தொடங்கப்பெற்றது. இதனைச் சிறந்த தமிழறிஞரும் பெரியாருமாகிய திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள்தொடங்கி வைத்தார்கள்

குறிப்பு  2 இக்காலத்தில் நான் புனித சூசையப்பர் கல்லூரி பி.எசி. வகுப்பு மாணவன். அன்றும் இன்றும் அரசியல் எனக்கு ஒவ்வாமை. செய்திகளைப் படிப்பதோடு சரி. ஞாயிறு மாலைநேரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார், புதுக்கோட்டை வல்லத்தரசு, திருச்சி ஆலாசியம் (காங்கிரசு) முதலிய நல்ல பேச்சாளர் பேசுவது தெரிந்தால் தொலைவிலிருந்து பேச்சைக் கேட் பேன். படிப்பைத்தவிர, பிற தாக்கங்கள் என்னைக் கவருவதில்லை.