Deprecated: YoastSEO_Vendor\Symfony\Component\DependencyInjection\Container::__construct(): Implicitly marking parameter $parameterBag as nullable is deprecated, the explicit nullable type must be used instead in /home/kathir30/public_html/akaramuthala.in/wp-content/plugins/wordpress-seo/vendor_prefixed/symfony/dependency-injection/Container.php on line 60
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல
அயல்நாடுஇதழுரைஇலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரை

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக!

நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள்.

இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச் செயற்பாடின்மையை உணர்த்துகிறது. அவ்வாறில்லாமல் இடையீடின்றி மன்றம் இயங்கும் வகையில் செயற்பட வேண்டும்.

உலக மாநாடு நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளக் கூடாது. “உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.” என்னும் மன்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயலாற்ற வேண்டும்.

“சங்க இலக்கியங்கள் பற்றிய பயிலரங்குகள், கருத்தரங்குகளை நடத்துதல், சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் ஆய்வு நிறுவனங்களுடனும் தமிழ் அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுதல்” முதலான மன்றத்தின் செயல் திட்டங்களைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். “மன்றத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் தமிழியல் ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு விருதுகள், உதவித்தொகை, மாநாடுகளில் கலந்துகொள்ள பயணப்படி போன்றவற்றை வழங்குதல்” என்பது மன்றத்தின் செயல் திட்டத்தல் உள்ளது. அவ்வாறு விருதுகளும் உதவித்தொகைகளும் அளித்துத் தமிழ்ப்படைப்புகள் உலகளாவிய அளவில் பெருக ஆவன செய்ய வேண்டும்.

உலகத் தமிழர்களின் தமிழ்க்கல்வித் தேவையை நிறைவேற்ற உலகத்தமிழ் அமைப்புகளோடும் உலகளாவிய தமிழ்ச் சங்கங்களோடும் இணைந்து செயல்படல் என்னும் செயல் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். செயல் திட்டத்தில் உள்ளவாறு, மன்ற வெளியீடாக ‘உலகத்தமிழ் பண்பாட்டு இதழ் – International Journal of Tamil Culture’ ஒன்றைப் பன்மொழி இதழாக வெளியிட வேண்டும். கிரந்த எழுத்துகளோ அயற்சொற்களோ இல்லாத தமிழ்ப்படைப்புகளையே இவ்விதழ் வெளியிட வேண்டும்.

தமிழ் இருக்கைகள் அல்லது தமிழ்த்துறைகள் தொடங்க நல்கை அளித்த தமிழ் நாடு அரசு பின்னர்த் தொடர்ச்சியாகத் தராமல் இவை இயங்காமல் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தொடர்ந்து நல்கை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, பிற நாட்டு அரசுகள் மூலம் உலகெங்கும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த்துறைகள் தொடங்கப்படவும் தொடர்ந்து அவை செயற்படவும் தொண்டாற்ற வேண்டும்.

மாநாடுகள் நடத்தும்போது போதிய நிதியாதாரத்தை எழுப்பிய பின்பே அறிவித்து நடத்த வேண்டும். எதிர்பார்க்கும் செலவினத்தில் 60 விழுக்காட்டுத் தொகையையேனும் வங்கி வைப்பில் வைத்தே மாநாட்டை நடத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு பல பணிகள் ஆற்றுவதன் முன்னர் முதன்மையான பணி ஒன்று உள்ளது. அதுதான் போட்டி அமைப்பு ஒன்று மலேசியாவில் இருந்து செயற்படுவதைத் தடை செய்வது. இவ்வமைப்பு செல்வாக்கை வைத்துக் கொண்டு அதனையே உண்மையான அமைப்பாகக் காட்டி வருகிறது. பாசக ஆதரவாளர் ஒருவரைக் கொண்டு ‘தினமணி’யில் கட்டுரை எழுத வைத்து அதிலும் இப்போட்டி அமைப்பே உண்மையான அமைப்பு போல் தவறான தகவல்களை இடம் பெறச்செய்துள்ளது. இப்போக்கை வளர விடக் கூடாது. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்து மன்றத்தின் பெயரில் வேறு யாரும் மன்றம் நடத்தாத வண்ணம் தடை விதிக்கச் செய்ய வேண்டும்.

அண்மையில் சென்னையில் நடந்த மாநாடு குறைந்த கால வாய்ப்பு, போதிய நிதியின்மை முதலிய இடர்ப்பாடுகளைக் கடந்து சிறப்பாக முடிந்துள்ளது. இம்மாநாட்டில் பணிகள் நிறைவேற்றத்தில் குறைபாடுகள் எழுந்தமையைப் பிறர் கூறியும் தாங்கள் உணர்ந்தும் அறிந்திருப்பார்கள். அவற்றைப் பட்டியிலிட்டு இனி அத்தகைய குறைகள் நேரா வண்ணம் சிறப்பாகச் செயற்பட வேண்டும். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்றில்லாமல் தக்கவர்களை அவர்களின் ஒப்புதல்களுடனேயே பொறுப்பாளர்களாக அமர்த்துதல் வேண்டும். அமைச்சர் பெருமக்கள், தலைவர்கள் முதலானவர்களைச் சந்திக்கும்போது குழுவாகச் சென்று சந்திக்க வேண்டும். மன்றத்தில் முனைப்புடன் செயற்படுபவர்களை மேடையில் ஏற்றிப் பலர் முன்னிலையில் பாராட்டவேண்டும். இப்பாராட்டு உரியவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் பிறரையும் செயற்பாட்டில் இறங்கச் செய்யும்.

மாநாடுகளில் தமிழ்க்கட்டுரைகளை மட்டும் ஏற்க வேண்டும். அதே நேரம், பன்மொழி அமர்விற்கு வழி வகுத்துப் பிற மொழிகளில் தமிழ்குறித்த படைப்புகள் இடம் பெற வழி வகைசெய்ய வேண்டும். பிற மொழிப்படைப்புகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுத்துஅதன் படி உலக நாடுகள் எங்கும் தமிழ் இலக்கியச்சிறப்பு குறித்தும் சிறந்த நூலாய்வுகள் குறித்தும் நேரிடையாகவும் இணைய வழியாகவும் கூட்டங்கள் உரையரங்கங்கள் நடத்த வேண்டும். இத்தகைய பணி மன்றம் செயற்படுவதை உலகிற்கு உணர்த்தும். உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும் உதவும்.

சிங்கப்பூர், கனடா, மலேசியா முதலிய அரசுகள் முதன்மை யிடம் வகிக்கும் வண்ணம் தமிழர்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று நிறுவ முயன்று வெற்றி காண வேண்டும். பன்னாட்டுஅவைகளில் தமிழ் அலுவலக மொழியாக இலங்கப் பாடுபட வேண்டும்.

பெயளவிற்கு மன்றமாகச் செயற்படாமல்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் துறைதோறும் துடித்தெழுந்து செயலாற்ற வேண்டும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.   (திருவள்ளுவர், திருக்குறள் 666)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

2 thoughts on “உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

  • ஆகா!… ஆகா!!… ஆகா!!!… இவையென்ன வெறும் பரிந்துரைகளா! அல்ல அல்ல! தமிழர்த் தனிநாடு அமைக்கவே பன்னாட்டு அளவில் அரசியல் கால்கோளிடும் முயற்சி! இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுச் செயல்படுத்தினால் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் விரைவில் உலகளாவிய பேரமைப்பாக, அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்தோங்கும்!

    பன்னாட்டளவில் ஒரு தமிழ் அமைப்பை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உங்கள் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது ஐயா! ஆனாலும் நீங்கள் கூறியுள்ள இத்தனை தமிழ்ப் பணிகளையும் முன்னெடுத்துச் செய்யத் தேவையான நிதியை எப்படித் திரட்டலாம் என்பதற்கு மட்டும் எனக்குத் தெரிந்த சில வழிகளைச் சொல்ல விரும்புகிறேன்.

    இன்றைய நாளில் தொலைத்தொடர்பு வசதிகள் நன்கு பெருகியுள்ளன. ஒரு மாநாடோ கருத்தரங்கோ பட்டிமன்றமோ கவியரங்கமோ நடத்த வேண்டுமானால் எல்லாரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்கிற கட்டாயம் இன்றில்லை. இணைய வழியிலேயே நடத்தலாம். மகுடைத் (Corona) தொற்றுச் சமயத்தில் பல கூட்டங்கள் இப்படி இணைய வழியில் நடைபெற்று வெற்றி அடைந்தன. அவ்வகையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினரும் உயூடியூபில் தமக்கென ஒரு வலைக்காட்சி தொடங்கித் தமது பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை இணைய வழித் தொலைநிலைக் கலந்துரையாடல் முறையில் நடத்தி, அவற்றை முழுவதுமாகப் பதிவு செய்து, நேர்த்தியாகப் படத்தொகுப்புச் செய்து உயூடியூபில் வெளியிடலாம்.

    நீங்கள் கூறியுள்ளது போல் மன்றத்துக்கென ஓர் இதழைத் தொடங்கி அதை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் மென்படியாகவும் அச்சுப்படியாகவும் இணையவழியில் வாங்க ஏற்பாடு செய்யலாம்.

    இதே போல் புத்தகங்களையும் விற்பனை செய்யலாம்.

    தமிழில் Tamil99, Bamini எனப் புகழ் பெற்றவையும் புகழ் பெறாதவையுமெனப் பல தட்டெழுத்து முறைகள் உள்ளன. ஆனால் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தட்டெழுத்துப்பலகைகள் ஒன்று கூட விற்பனைக்குக் கிடைப்பதில்லை. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இந்த முயற்சியைத் தொடங்கலாம்.

    இப்படியெல்லாம் செய்தால் தமிழ்ச் சேவை செய்ததாகவும் இருக்கும், மேற்கொண்டு மாநாடு போன்ற பெரிய தமிழ்ச் சேவைகளை மன்றம் தொடர்ந்து செய்ய நிதி திரட்டலாகவும் அமையும்.

    நன்றி!

    Reply
    • இலக்குவனார் திருவள்ளுவன்Post author

      நன்று. நன்றி. பாராட்டுகள்.

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *