(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி)

11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும்  மொழியான  சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்  பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப் போய்விட்டதே என்று கவலைப்படுவதைவிட நமக்கு வேறு வழியில்லை.

  1. 12. கேந்திரிய இந்தி சிக்(கு)சான் மண்டல் (ஆகுரா) என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, முழுமையும் இந்திய அரசின் நிதிஅளிப்பில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தி மொழியின் பயிற்சி, ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக 19.3.1960 இல் தொடங்கப்பெற்ற கேந்திரிய இந்தி சன்சுதான் என்னும் நிறுவனத்தின் தில்லி, மைசூர், ஐதராபாத்து. கௌகாத்தி, சில்லாங்கு, திமாப்புர் ஆகிய ஆறுஇடங்களில் உள்ள 6 மண்டலப் பயிலகங்கள் மூலம்  அயல்நாட்டில் இந்தியைப் பரப்புதல் என்னும் திட்டத்தின் கீழ், 71 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்தி கற்பிக்கப்படுவது போல் அயல்நாட்டினருக்குத் தமிழைக் கற்பிக்கத் தனி அமைப்பை இந்திய அரசு ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான தகுதி நமக்கு இல்லை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 13. இந்தியா முழுமையும் சமசுகிருதம் பேசுவோர் எண்ணிக்கை 50,000-இற்கும் குறைவே. ஆனால், 1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், பிற மாநிலங்களின் அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். பத்து கோடிக்கும் மேலாகத் தமிழ்பேசுவோர் இருப்பினும் தமிழ்ச் செய்தித் திட்ட நினைவுகளுக்கே புறக்கணிப்புதான் என்பது   வேதனையல்லவா? 
  1. 14. வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படும்; சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும்  முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப் படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தது நம் அறியாமையே என இந்திய அரசு நடந்துகொள்கிறது.
  1. 15. இந்திய அரசின் துறைகளும் கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் தங்கள் குறிக்கோள் முழக்கங்களாகச் சமசுகிருத முழக்கங்களை வைக்க ஊக்கப்படுத்தப் படுகின்றன. இந்திய அரசின் முழக்கமாகச் சத்தியமேவ செயதே அறிவிக்கப்பட்டுள்ளது போல், ஆயுள்காப்பீட்டுக் கழகம் –  யோகசேமம் வகாமியாகம் (Yogakshemam Vahāmyaham), இந்தியக் கப்பற்படை – சன்னோ வருணா(Shanno Varuna), இந்திய வான்படை – நாப சுபர்சம் தீபிதம் (Nābha Sparsham Dīptam),    இந்தியக் காவல் துறை – சாத் ரக்கசனய் கலா நிக்ரனயா (sadd rakshanay khalah nighranayah), இந்தியக் கடலோரக் காவல் படை – வயம் ரக்சாமகா (Vayam Rakshāmaha), அ.இ.வானொலி  – பகுசன இதய பகுசன சுகய (Bahujanahitāya bahujanasukhāya), அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் – சரீர்மத்தியம் கலூதர்ம சாதனம் (Shareermadhyam Khaludharmasādhanam), ஆந்திரப் பல்கலைக்கழகம் – தேசசுவி நாவதிட மசுது (Tejasvi Nāvadhitamastu), பனசுதாலி வித்யாபீடம் – ச வித்யா ய விமுக்தயெ (Sa Vidyā Ya Vimuktaye),  பிருலா தொழில்நுட்ப அறிவியல் பயிலகம், பிலானி – ஞானம் பரமம் பலம்  (Jnānam Paramam Balam) எனச் சிலவற்றை எடுத்துக்காட்டிற்குக் கூறலாம். இவைபோல் தமிழ் முழக்கங்களைப் பொது முழக்கங்களாக வைப்பர்; செய்மதி, ஏவுகணை, படைக்கலன்கள், வானூர்திகள், கப்பல்கள் முதலியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தது நமது அளவு கடந்த ஆசை என்பதுபோல் இந்திய அரசு நடந்து கொள்கிறது.
  1. 16. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பின்னும் தாய் நிலத்தில் தமிழ், தலைமை யிடத்தில் இல்லாவிடில் இழுக்கெனக் கருதியாவது ஆட்சித்துறையில், கல்வித் துறையில், நீதித்துறையில், சமயத்துறையில், பிற துறைகளில் என எங்கும் தமிழே ஆட்சி செய்யும் நிலை மலரும் என எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் அவலநிலை தானே இன்னும் தொடருகிறது. உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டி வழக்குரைஞர்கள்  மடியும்வரை உண்ணா நோன்பிருப்பினும் இந்தியஅரசு படிய வில்லையே!
  1. 17. சமசுகிருத அகராதி வெளியீட்டிற்கெனப் பொருள் உதவி  வழங்கப்படுவதுபோல் தமிழ் மொழியில் பல்வேறு துறைகளில் அகராதிகள் வெளியிட இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு ஈடேறும் நிலை இல்லையே!
  1. 18. சமசுகிருதச் செய்தி இதழ்களும் இலக்கிய அறிவியல் இதழ்களும் வெளியிடப் பொருள் உதவி வழங்குவதுபோல் தமிழ் இதழ்களுக்கும் மலர்களுக்கும் பொருளுதவி கிடைக்கும்; ஒவ்வொரு துறைகளிலும் புதுப்புது இதழ்கள் பெருகும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவையெல்லாம் சமசுகிருதத்திற்கு மட்டும்தான் உனக்கில்லை என மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு நடந்து கொள்கிறதே! 
  2. 19. தேசியச் சிந்து மொழி மேம்பாட்டுக் குழு, தேசிய உருதுமொழி மேம்பாட்டுக் குழு முதலான அமைப்புகள் மூலம் சிந்து மொழியையும் உருது மொழியையும் வளர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பௌத்த படிப்பு மத்திய மையத்தின் மூலம் பாலி, திபேத்தியன், ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி மொழி பயில உதவி வழங்கப்பட்டு வருகிறது. பௌத்தக் கல்வித் திட்டத்தின் மூலம் சிங்களம் படிக்கவும் படிப்பிக்கவும்  இந்திய அரசு உதவி வருகிறது. இவைபோல்  செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்னராவது  தமிழ் பயிலவும் பயிற்றுவிக்கவும்  இந்திய அரசு உதவும் என்ற எதிர்பார்ப்பு நீர்மேல்எழுத்தாகக் கூடாது எனக்கவலை வருகிறது.