வெருளி நோய்கள் 519-523: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 519-523
- எளிமை வெருளி – Efkolophobia
எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.
எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.
00
- எறும்பு வெருளி-Myrmecophobia/ Formiphobia
எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.
எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில் அல்லது பாதைகளில் எறும்பு இருக்கும் என்று கருதினால் அளவு கடந்த அச்சம் கொள்வர்.
பூச்சிகள் குறித்துக் காரணமின்றி அஞ்சும் பூச்சி வெருளியர் போன்றவர்களே எறும்பு வெருளியரும். [பூச்சி வெருளி (Entomophobia/Insectophobia)]
myrmex என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எறும்பு.
00
.
- என்புருக்கிநோய் வெருளி-Phthisiophobia/Tuberculophobia
என்புருக்கி நோய்/காசநோய் குறித்த இயல்புமீறிய பேரச்சமே என்புருக்கிநோய் வெருளி.
என்புருக்கி நோய்த்தடுப்பு முறைகளும் நலப்படுத்தும் மருத்துவமும் பரவலாக உள்ளன. இருப்பினும் என்புருக்கியரைப் பார்த்தாலே, அவர்கள் அருகில் இருந்தாலே என்புருக்கி நோய்க்கு ஆளாகி, உடல் சீர் குலைந்து மரணம் நேரும் என அஞ்சுவோர் உள்ளனர். இயல்பான இருமலைக்கூட என்புருக்கி நோயின் அடையாளமாகக் கருதி அஞ்சி அஞ்சிச்சாவர்.
Phthisis / Tuberculo என்றால் என்புருக்கி நோய் / காசநோய் எனப் பொருள்.
00
- ஏக்க வெருளி – Nostalgiaphobia
வீட்டு நினைவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏக்க வெருளி.
கல்வி, பணி, மண வாழ்க்கை முதலான பல காரணங்களால் வீட்டை விட்டுப் பிரிந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் ஏக்க உணர்வு மீள் சந்திப்பு குறித்த கவலையாகிப் பேரச்சமாக மாறுகிறது.
புலம் பெயர் மக்கமளிடையே ஏக்க வெருளி காணப்படுவது இயற்கையாக உள்ளது.
‘பதிபக்தி’ படத்தில் முதலில் படைத்துறை வீரர்கள் விட்டிற்குத் திரும்ப இருப்பதால்,
“வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே” என மகிழ்ச்சியாகப் பாடுவார்கள். ஏக்கம் தீரப்போகும் மகிழ்ச்சி என்றாலும்
“தேனைப்போலப் பேசினாலும் பேசலாம் – கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்”
என்று ஏக்கமும் இருக்கும்.
வீடுதிரும்பிய கதை நாயகன் சோகத்தில்
“வீடு நோக்கி ஓடி வந்த என்னையே”
எனப் பாடுவான். அதில்,
“நான் எண்ணி எண்ணிக் கதறியென்ன உலகிலே,
ஓர் இனிப்புமில்லை கசப்புமில்லை, வாழ்விலே”
எனப் பாடுவதும் ஒரு வகை ஏக்க வெருளியின் விளைவே.
00
- ஏணறை வெருளி – Elevatorphobia/Elevaphobia
ஏணறை [மின்னேணி(Elevator/Lift)] தொடர்பான அளவுகடந்த பெருங்கவலையும் பேரச்சமும் ஏணறை வெருளி.
ஒரு தளத்திலிருந்து மேல் தளங்களுக்குச்செங்குத்தாகத் தூக்கிச் செல்லவும் பின் இறங்கிவரவும் பயன்படுவதைப் பிரித்தானியர் LIFT என்றும் அமெரிக்கர் ELEVETOR என்றும் கூறுகின்றனர். Lift என்பதையே முதலில் தமிழில் பயன்படுத்தி வந்த நாம் பின்னர் மின்னேணி என்றோம். சிலர் ‘உயர்த்தி’ என்றனர். ஆனால், இச்சொல் பொதுச் சொல்லாக உள்ளது. பொருள்களை உயர்த்தக்கூடிய மனிதர்களை உயர்த்திக் கம்பங்களில் பணியாற்ற உதவக்கூடிய வேறு சில உயர்த்திகளும் உள்ளன.
அறைவடிவில் அமைந்து ஏணிபோல் உதவுவதால் ஏணறை என நான் குறிக்கின்றேன்.
மின்னேணி எனப்படும் ஏணறை திடீரென்று இடையில் சிக்கிக் கொண்டால் என்னாவது? மின்சாரத்தடை ஏற்பட்டுவிட்டால் எப்படி மீள்வது? திடீரென்று பழுதானால் எப்படித் தப்பிப்பது என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர்.
பிறர் இதுபோன்ற சூழலில் சந்தித்த இடர்களை அறிய வருவதாலும் பேரச்சம் கொள்கின்றனர்..
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply