தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க!

எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன்.

சான்றுக்குச் சில:  

புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல் போட்டனர். (சிலவற்றில் பந்தல் போடாமல் அனைத்து வாக்குப் பதிவு அறைகளின் முன்னரும் பந்தல்  போட்டதாகக் கணக்கு காட்டியிருப்பர் என்றனர் வாக்காளர்கள்.) ஆனால்,  இந்தமுறை முன்னதாகவே எல்லா வாக்குப்பதிவு அறைகளின் முன்னரும் பந்தல் போட்டிருந்தனர்.

இந்தமுறை, பள்ளியின் தொடக்கத்தில் இருந்த பதிவறையில் வாக்குப்பதிவுக் கருவி பழுதாக இருந்தது.  ஆனால் அரை  மணி நேரத்தில் சரி செய்து விட்டனர்.

குறைகளைக் களைவதற்குப் பாராட்டுகள்!

பழுது நேரத்தில் காத்திருந்த பொழுது எனக்குப் பின்னால் நின்றிருந்தவர் மனைவி பக்கத்திலிருந்த பெண்கள் வாக்குப் பதிவறையில் இருந்து வந்தார். அவர், வாக்காளர் பட்டியலில் உள்ளவாறான பகுதி எண், பக்க எண், வரிசை எண் விவரத்தை அளித்தால்தான் வாக்களிக்க இயலும் எனத் தெரிவிப்பதாகக் கூறினார். கையில் அவர் வைத்திருந்த சீட்டில் உள்ள எண்ணில் பெயரில்லை என்கிறார்களாம். பட்டியலில் இருந்த பெயரைச் சரிபார்க்க வேண்டியது அவர்கள் கடமை எனச் சொல்லி உள்ளே போய்த் தெரிவிக்குமாறு கூறினேன். மீண்டும் வந்து பட்டியலில் உள்ள விவரம் தெரிவிததால்தான் வாக்களிக்க முடியும் எனக் கூறுவதாகக் கூறினார். மீண்டும் நான் அவரிடம் அவ்வாறு கூறுவது முறையல்ல, அவர்களின் கடமை, வாக்காளர்களைச் சரி பார்க்க வேண்டியது. ஆனால், அந்தப் பொறுப்பை நம் தலைமீது சுமத்துவது தவறு என்று சொல்லச் சொல்லி மீண்டும் அனுப்பி வைத்தேன்.  அவர் சென்றதும்  தேர்தல் அதிகாரி வந்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள தொகுதி எண், வரிசை எண் உரிய பக்க எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்றும் அவ்வாறு விவரம் தராதவர்கள் யாரும் வாக்களிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அவர், வாக்குப்பதிவு மையத்தின் முன்னர்க் கட்சிக்காரர்களிடம் விவரம் வாங்கி வருமாறு கூறினார்.

அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். கட்சிக்காரர்கள் தரும் வாக்குச்சாவடிச் சீட்டில் கட்சிச் சின்னமும்  இருக்கும் என்பதால் அதனைத் தடை செய்து தேர்தல் ஆணையமே வாக்குச்சாவடிச் சீட்டை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் பகுதியில் யாருக்கும் அவ்வாறு தரவில்லை. நீங்கள் வெளியே இருக்கும் கட்சிக்காரரிடம் சென்று வாங்கி வருமாறு கூறுவதால், அக்கட்சிக்குச் சார்பாகச் செயல்படுவதாக உடனே முறையிட்டு நடவடிக்கை எடுக்கச் செய்வேன் என்றேன். உடன் அவர் அமைதியாக அறைக்குள் சென்றார்.

வெளியே அதிமுக நண்பர்கள்மட்டும்தான் வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருந்தனர். ஆனால், இந்தப் பகுதி வாக்காளர் பட்டியல் வேறு பகுதிக்கு மாறிப்போய்விட்டது என அதனைக் கொண்டுவர ஆள் அனுப்பி இருந்தனர். பிற கட்சிக்காரர்கள் யாரும் இல்லை.

அந்த அம்மையார்  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி மீண்டும் வெளியே வந்தார்.  நான், உடனே அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். பெண்கள் பகுதிக்குள் செல்வதாகக் காவலர் தடுத்த பொழுது அதனைப் பொருட்படுத்தாமல்  தேர்தல் அதிகாரிகளிடம் இவர் கையில் இணையத்தில் இருந்து படி எடுத்த வாக்காளர் விவரம் இருக்கின்றது. நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்றதற்கு “அவர் வீட்டு எண்ணில் வேறு பெயர் உள்ளது. எனவே, மறுக்கின்றோம்” என்றனர். எண் இருந்தது, தெருப்பெயர் இல்லை என்பதைக் காட்டினார். வேறு தெருப்பெயருக்குரியது அது. அப்பக்கத்தின் மேல்பக்கத்தில்தான்  தெருப்பெயர் உள்ளது. அதனைக் காட்டி அவர் முகவரியில் உள்ள தெருப்பெயர் பக்கத்தில் பார்க்குமாறு கூறினேன். அப்பொழுது கட்சிச்சார்பாளர் ஒருவர் முகப்புப் பக்கத்தில் தெருப்பெயர் விவரங்கள் உள்ளதைக் காட்டினார். அதன்படி  உரிய பக்கத்தில் பார்க்கும் பொழுது அவர் பெயர் அங்கிருந்தது. இவ்வாறுதான் வாக்காளர் பெயர்களைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி நான் வெளியே வந்து விட்டேன். அடுத்த பத்து நிமையத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஓர் அம்மையார் வந்து வாக்காளர் எண் விவரங்களைச் சரிபார்க்கத் தன்னிடம் வருமாறு அறிவித்தார், தேர்தல் பணியாளரா, கட்சிச்சார்பாளரா எனக் கேட்டதற்குத் தேர்தல் பணியாளர் என்றார். காலத்தாழ்வு எதுவும் நேரக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தேர்தல் மையப்பகுதியில் முதல் நாளே வந்து தங்கியிருக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதனை மீறியவர் குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்தக் குழப்பம் நேர்ந்திருக்காது அல்லவா?

முறையாகப் பயிற்சி பெறாத இத்தகைய தேர்தல் பணியாளர்களால் எத்தனை இடங்களில் வாக்காளர்கள் தங்கள் உரிமையை இழந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.

வாக்காளர் சீட்டுகளை அளிக்காத தேர்தல் பணியாளர்கள் மீதும் அவர்களின் பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த முறை இது போன்ற தவறுகள் நேரா.

ஒரு குடும்பத்தில் சில பெயர் மட்டும் நீக்கப்படும் நேர்வுகள் மிகுதியாக உள்ளன. சான்றாக, எங்கள் மகள் வீட்டில் நான்கு வாக்காளர்கள் இருப்பினும் இரு பெயர்களை மட்டும் முகவரி மாறியதாக நீக்கியுள்ளது. இவ்வாறு பல நேர்வுகள் ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். வாக்களார் அட்டை இருந்தால் வாக்களிக்கலாம் எனக் கூறி அதற்கேற்ப நடைமுறைகளை வகுக்க வேண்டும்.

தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளிப்பதுடன் வாக்கு மையத்தி ல்  அமர உள்ள கட்சித் தொண்டர்களுக்கும்  பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. எனவே, காணொளியாகவே வெளியிட்டுப் போதிய பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கலாம்.

ஊடகங்கள் மூலம் அறிய வரும் தேர்தல் ஆணையக் குறைபாடுகளையும் முறையீடுகள் மூலம் அறிய வரும் குறைபாடுகளையும் அறிந்து இவை போன்ற தவறுகள் மீண்டும் நேரா வண்ணம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 655)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல