வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 594-598)
வெருளி நோய்கள் 599-603
599. கடல்கோள் வெருளி – Tsunamiphobia
கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி.
நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும்.
சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, எனவே சுனாமி என்றால் துறைமுக அலை எனப் பொருள். தமிழில் இப்பொழுது இதை ஆழிப்பேரலை என்கின்றனர். ஆனால், இஃது அலையல்ல. கடலில் பேரலைகள் எழும்புவது இயற்கை. இதனால் கடலில் சென்று கொண்டிருக்கும் படகுகள், கப்பல்கள் போன்றவற்றிற்கு இடர்கள் நேரலாம். ஆனால் இத்தகைய பேரலை அல்ல இது. பழந்தமிழில் இதனைக் கடல் கோள் என்றனர். கடல் நீர் கரையைக்கடந்து நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியைக் கவர்ந்து கொள்ளும் வன்செயல் இது. இதனால் நிலப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கும் கட்டடம் முதலான பகுதிகளுக்கும் பேரழிவுகள் ஏற்படுகின்றன .எனவே, கடல் கோள் என்னும் காரணப்பெயர் பொருத்தமாக உள்ளது.
பழந்தமிழ்நாட்டில் இரு பெரும்கடல் கோள்களால் தமிழகத்தின் தென்பகுதி பேரழிவிற்கு ஆளானது. தமிழகத் தொன்மை வரலாற்றைத தாங்கிக் கொள்ள மனமில்லாதவர்கள், இதனைக் கற்பனை என்றனர். ஆனால், திசம்பர் 26, 2004 இல் பேரழிவுகளை உண்டாக்கிய கடல்கோள் வந்தபொழுதுதான் அவற்றை உண்மை என்றனர்.
00
600. கடல் பேருயிரி வெருளி – megalohydrothalassophobia
கடல் நீரில் வாழும் பேருயிரிகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடல் பேருயிரி வெருளி.
கடல் பயணத்தின் பொழுது கடல்வாழ் பேருயிரிகள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். அவை கப்பலை அல்லது படகைக் கவிழ்த்து விடுமோ, தாக்கி அழித்து விடுமோ என்ற பேரச்சங்கள் வரும். ஆனால், கடல் பயணம் மேற்கொள்ளாத பொழுதே இவற்றைப் படங்களில் அல்லது திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சிப் படங்களில் பார்த்து அல்லது இவை பற்றிப் படித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
601. கடல் வெருளி – Nautophobia
கடலோடிகளுக்குக் கப்பல் பயணத்தில் கடல்நீர்மீது ஏற்படும்அளவு கடந்த பேரச்சம் கடல் வெருளி.
கப்பல் அல்லது படகு கவிழும், கடலில் மூழ்க நேரிடும், காற்றலையால் திசைமாறி வேறிடம் செல்ல நேரிடும், திக்கு தெரியாமல் தவிக்க நேரிடும் என்பன போன்ற பேரச்சம் கொள்வர்.
கடலலையில் காலை நனைக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மையருக்குப் பேரார்வம் இருக்கும்.
“கடலலை கால்களை முத்தமிடும் புதுக் கலை”
எனப் ‘பொம்பள மனசு‘ (1980) என்ற வெளிவராத திரைப்படத்தில் பாடல் வரிகள் வரும்.
இருப்பினும் கடலலை கண்டு அஞ்சுவோர் உள்ளனர். கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்தவர்கள் பற்றிய செய்திகளை அறிந்து இத்தகையோர் கடல்கண்டு அஞ்சுவர்.
கப்பல் மீகாமர்கள், கப்பல் பயணிகள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், கடலில் மீன்பிடிக்கச் செல்வோருக்கும் கடல் வெருளி வரும். இவர்களுக்குக் கடல் வெருளி வந்தால், மீன்பிடி தொழில் பாதிப்புறும். பல்வகையான நாவாய்கள், கப்பல்களைச் செலுத்திப் பழந்தமிழர்கள் கடலில் ஆட்சி செய்தனர். அண்மைக்காலத்தில் ஈழத்தில் விடுதலைப்புலிகள் கடலைத் தங்கள் கட்டுக்குக் கொண்டு வந்தவர்கள்போல் கடலாட்சியில் சிறந்து விளங்கினர். இவற்றை எல்லாம் எண்ணிக்கடல் மீதான அச்சத்தை ஓட்ட வேண்டும்.
00
602. கடவுள் வெருளி – Zeusophobia
கிரேக்கர்களின் தொன்மங்களின் படி, வானவர் வேந்தன்(Zeus) என்பவர்தான் கடவுள்களின் அரசர். அவர்தான் இடி மின்னல் முதலானவற்றைக் கட்டுப்படுத்துகிறார்.
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப
(கபிலர், குறுந்தொகை 67.1-2)
பொதுவிடத்திலுள்ள மரத்தில் தங்கியுள்ள பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம், கொடியவரைத் துன்புறுத்தும் என்பது மக்கள் நம்பிக்கை. எனவே, பழி பாவத்திற்கு அஞ்சுபவர்களும் சிறு பிழைகளையும் பெரும்குற்றமாகக் கருதுபவர்களும் கடவுள் மீது பேரச்சம் கொண்டு மன உளைச்சல் கொள்கின்றனர். எனினும் நல்லன ஆற்றுநரும் “இறையே துணை” என நம்புகிறவர்களும் கடவுளுக்கு அஞ்சமாட்டார்.
சமய வெருளி(Theophobia)-ஐ ஒத்ததே இது.
Zeus என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் கடவுள்களின் அரசர்.
00
603. கடற்கரை வெருளி Aigialophobia
கடற்கரைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கரை வெருளி.
கடலோர நிலப்பகுதிதான் கடற்கரை. கடற்கரை மணல் மீது பேரச்சம் கொள்வோரை விடக்கடல் மீது பேரச்சம் கொள்வோரை உள்ளனர். கடலில் குளிக்கச்சென்று இறந்தவர்கள்பற்றியும் கடல் நீரில் கால் நனைக்கச் சென்று அலைகளால் இழுக்கப்பட்டு இறந்தவர்கள்பற்றியும் அறிந்தவர்களுக்குக் கடற்கரை என்றாலே அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் வருகிறது. தமிழ்நாட்டில் வடசென்னைக்கடற்கரை பேரிடர் நிறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோல் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு கடற்கரைப் பகுதி பேரிடர் நிறைந்ததாக இருக்கும். இவற்றைக் கேள்விப்படும் அந்தந்த நாட்டினர் விழிப்புடன் இருப்பதில் கவனம் செலுத்துவதற்கு மாற்றாகத் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply