உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969)

என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர்.

உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும்.

   இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்

   கடைதுறத்தல் சல்லே கனை.

என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது ‘சல்லேகனை’ என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ‘இரத்தின கரண்டக சிராவகாசாசரம்’ என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது. அதே நேரம் இம்முறையைத் தற்கொலையாகக் கொச்சைப்படுத்தக்கூடாது என்றும் அறவழி உயிர் துறக்கும் உயர்ந்த முறை இது என்றும் நீலகேசி என்னும் சமண நூல் கூறுகிறது.

பலரும் சமணரின் ‘சல்லேகனை’ என்பதுதான் தமிழரின் வடக்கிருத்தலாக மாறிற்று என்று தவறாகச் சொல்வர். இதனைக் கையால் ஆகாதத்தனம் எனக் கூறாவிட்டாலும் தனக்குத் துயர் வரும் காலத்துத் தன்னால் பிறருக்குத் துயரம் வரக்கூடாது என்று எண்ணித் தன்னை வருத்தி உயிர்விடலாகக் கூறலாம். ஆனால், தமிழரின் வடக்கிருத்தல் என்பது தனக்கு இழுக்கு நேர்ந்த விடத்து, பெருமிதக் குறைபாடாகவோ களங்கமாகவோ மானமிழத்தலாகவோ கருதி அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடலாகும். சிக்கலை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல் என்றில்லாமல் வாழும் வழியிருந்தும் மானக்குறைபாடென எண்ணி உணவு மறுத்து உயிர் துறத்தல் என்பது பெரும் பண்பாகும். எப்படி இருந்தாலும் இரண்டிலுமே பொய்மையோ நடிப்போ இல்லை. தன் துயர் பொறுத்தலும் துணிவும் உள்ளன.

வடக்கிருந்த பண்பிற்கு எடுத்துக்காட்டாகப் பல கூற முடியும். சிலவற்றை மட்டும் நாம் பார்ப்போம்.

ithazhurai-vadakkuiruthal

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. திருமா வளவன் செலுத்திய நெடுவேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி”யைச் சேர்ந்த தமிழ் மக்கள்மார்பில் புண்பட்டு இறப்பதை விரும்பினரே யன்றி, முதுகில் புண் பட்டு வாழ்தலை அன்று. எனவே, முதுகில் புண் ஏற்பட்டு விட்டதை மானக் குறைபாடாக எண்ணிச் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.

உலகில் அனைவரும் மறக்கக்கூடா வடக்கிருத்தல் இணைபிரியா நட்பிற்கு அடையாளமான கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் வடக்கிருந்த செயலாகும். கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் அரசுரிமைக்காகத் தந்தையாகிய மன்னரை எதிர்த்தனர். அவர்களுடன் போர் தொடுக்கஇருந்த மன்னனிடம் புலவர்கள் அறிவுரை கூறி அப்போரைத் தடுத்தனர். புலவர்களின் அறிவுரைக்கிணங்க வேந்தனும் போரை நிறுத்தி அரசுரிமையை அவர்களிடமே கொடுத்தான். எனினும் மக்களே தந்தையிடம் போர்தொடுக்க நேர்ந்த சூழலை அவமானமாகக் கருதினான். எனவே, வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் விட்டான். அப்பொழுது அதுவரை வேந்தனை நேரில் கண்டறியாமல் நட்பு பூண்டிருந்த புவலர் பிசிராந்தையார் அங்கு வந்து, மன்னன் இறந்த துயரம் அறிந்து தானும் அவன் வழி வடக்கிருந்து உயிர் துறந்தார்.

நட்புலகில் போற்றப்படவேண்டிய மற்றொன்று மன்னன் பாரி – புலவர் கபிலர் இடையே உள்ள நட்பாகும். மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்மக்களைத் திருமணம் செய்வித்த பின் புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

சிலப்பதிகாரக் காலத்தில் கவுந்தியடிகள்,கோவலன் கொலையுண்டதன் தொடர்ச்சியாக – பாண்டிய வேந்தன் மரணம், கோப்பெருந்தேவி மரணம், கண்ணகி இழப்பு, மாதரி எரியுண்டல் எனத் தொடர்ந்து – ஏற்பட்ட மரண அவலங்களால், சமண சமய நெறிப்படி வடக்கிருந்து உயிர் விட்டார்.

தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்

           . ..

உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..

என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ ( 79-83) குறிப்பிடுகின்றது.

சமய முனிவர்கள் பல்வேறு காலங்களில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்துள்ளனர்.

இக்காலத்தில், உண்ணா நோன்பு என்பது கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொள்ளும் போராட்ட முறையாகவும் மாறிவிட்டது.   உலக நாடுகள் எங்கும் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் உண்ணா நோன்புப் போராட்டத்திலும் சாகும்வரை உண்ணா நோண்புப் போராட்டத்திலும் ஈடுபட்டவர்ஈடுபடுநர் பலராவர். இதில் குறிப்பிடத்தகுந்தது அயர்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ள உண்ணாநோன்புப் போராட்டங்களாகும்.

 Robert Gerard Sands  @ Bobby Sand

இராபர்ட்டு செரார்டு சான்டு என்ற பாபி சாண்டு (Robert Gerard Sands @ Bobby Sands, மாசி 26, 1985 – சித்திரை 22, 2012 / மார்ச்சு 9, 1954 – மே 5, 1981), என்பவர் ஐரிசு குடியரசுப்படையைச் சேர்ந்த தன்னார்வலர். இவர் சிறையில் இருந்த பொழுதே ஐக்கிய மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981இல் வட அயர்லாந்தில் (இ)லிசுபேர்ன் நகரில் உள்ள சிறையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த சிறைவாசிகளுக்குத் தலைமை வகித்தார். இவரும் இவருடன் உண்ணாநோன்பிருந்த பதின்மரும் இறந்தனர்.

 mahatma-gandhi01 Jatin_Das_Indian_freedom_fighter bagathsingh01

இந்தியாவில் காந்தியடிகள் [மோகன்தாசு கரம்சந்த்து காந்தி (புரட்டாசி 18, 1900 – தை 17, 1979; 2.10.1869-30.01.1948)] உண்ணாநோன்புப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர்.ஆங்கிலேயரின் அருள் பார்வை இவர் மீது இருந்தமையால்தான் பல போராட்டங்களை நடத்த முடிந்தது.இல்லையேல் ஏதேனும் ஒரு போராட்டத்திலேயே இவர் உயிர் பிரிந்திருக்கும். சதீந்திராநாத்து தாசு என்ற யதின்தாசு (Jatindra Nath Das @Jatin Das ) ஐப்பசி 12, 1935 – ஆவணி 29, 1960 / அக்.27, 1904 – செப்.13, 1929) இலாகூர் சிறையில் உண்ணாநோன்பிருந்து 63 ஆவது நாளில் உயிரிழந்தார்.

பகத்துசிங்கு (புரட்டாசி 11, 1938 – பங்குனி 10, 1962 / செப். 27, 1907 –மார்ச்சு 23, 1931), பிரித்தானிய சிறைவாசிகளுக்கும் இந்தியச் சிறைவாசிகளுக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று 116 நாள் உண்ணாநோன்பிருந்துள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பின்னரான உண்ணாநோன்புப் போராட்டமெனில், தெலுங்கு மக்களுக்கான தனி மாநிலம் வேண்டிஉண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த பொட்டி சிரீராமுலுவைக் (பங்குனி 3, 1932 – மார்கழி 2, 1983 / மார்.16, 1901 – திச.16, 1952) கூறலாம்.

 ithazhurai_Potti_Sreeramulu

சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கு முதலான 12 வேண்டுகைகளுக்காக ஆடி 12, 1987 முதல் (27.07.1956) 76 நாட்கள்உண்ணா நோன்பிருந்து புரட்டாசி 28, 1987 (13.10.1956) அன்று உயிர் துறந்த சங்கரலிங்கனாரையும் நம்மால் மறக்க இயலாது.

thileepan06

உலகம் முழுவதும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு, மாவீரன் திலீபன்(கார்த்திகை 12, 1994 – புரட்டாசி 10, 2018; 27.11.1963- 26.09.1987) ஆவணி 30,2018/ செப்.15, 1987 முதல் உண்ணாநோன்பிருந்து, நீர்கூட அருந்தாமல்புரட்டாசி 10, 2018 / செப்.26, 1987 இல் இந்தியத்தால் உயிரிழந்ததாகும்.

annaibupathy01

பெண்போராளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் நீர்மட்டும் அருந்தி மார்.19, 1988 முதல் உண்ணா நோன்பிருந்து ஒரு திங்களில் – அஃதாவது ஏப்.19,1988 இல் உயிர் துறந்தஅன்னை பூபதி(ஐப்பசி 19, 1963 – சித்திரை 5, 2019; நவம்பர் 3, 1932 – ஏப்பிரல் 19, 1988)

தமிழ்நாட்டில் ஈழ மறவன் செந்தூரன் போன்றோர் உண்ணாநோன்பிருப்பதும் உயிரை மதிக்கா அறப் போராட்டமாகும்.

 senthuran_1

இப்பொழுது உண்ணாநோன்பு, அடையாள உண்ணா நோன்பு, தொடர் உண்ணாநோன்பு, சாகும்வரை உண்ணாநோன்பு எனப் பலவகை உணவு மறுப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. என்றாலும் அண்மைக்காலங்களில் அரசியல் கட்சிகள்நடத்தும் உண்ணாநோன்புப் போராட்டங்கள் மக்களின் கேலிக்குள்ளாகி வருகின்றன. உணவு உட்கொண்டபின் உண்ணா நோன்புப் பந்தலுக்கு வருதல் அல்லது போராட்டப் பந்தலுக்குப் பின்னர் மறைவிடம் சென்று உணவு உண்ணல், அல்லது இடையிடையே வந்து சென்றுவிட்டு உண்ணாநோன்பை நாடகமாக்குதல் அல்லது இரண்டு உணவு நேரத்திற்கு இடையே உள்ள கால அளவை உண்ணா நோன்பாகக் காட்டுதல் போன்ற அவலங்கள் மேடையேறி வருகின்றன.

இவற்றிலெல்லாம் மிகவும் மோசமாகவும் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகி வருவன, இப்பொழுது அஇஅதிமுக   பொதுச்செயலர் செல்வி செயலலிதாவின் விடுதலைக்காக நடத்தும் உண்ணா நோன்புப்போராட்டங்கள் ஆகும்.

 fasting-admk

பெரும்பாலான இடங்களில் உண்ணா நோன்பு தொடங்கும் காலை 6.00 மணியளவில் ஒற்றைப்பட எண்ணிக்கையில்தான் தொண்டர்கள் உள்ளனர். காலை உணவிற்குப்பின்னர் – குறிப்பாகக் காலை 10.00 மணியில் இருந்துதான் தொண்டர்கள் உண்ணாநோன்புப் பந்தலுக்கு வருகின்றனர். ஒரு சாரார் நண்பகல் உணவு முடித்துவிட்டு வருகின்றனர். எனவே, நண்பகலுக்குப்பின்னர் கூட்டம் வருகிறது. இன்னும் பலர் உண்ணா நோன்பு இடத்திலிருந்து நால்வர் நால்வராக உணவகம் சென்று உணவு உட்கொண்டு விட்டு வருகின்றனர். கருப்புச் சட்டை அணிந்து வருவதால் தங்கள் அடையாளம் தெரிகிறதே என்பதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல் உணவகம் செல்கின்றனர் எனில், அவர்களின் நோக்கம் என்ன வென்பதைப்புரிந்து கொள்ளலாம். உண்ணா நோன்பிற்கான காரணம் தவறெனில், அதனை நடத்தும் விதம் கேலிக்குரியதாக இருப்பது அவர்களின் தலைவியையே அவமானப்படுத்துகின்றது என்பது புரியாமல் இருப்பதுதான் வேடிக்கை.

வரும் அக். 7 அன்று பிணை தரப்படலாம்; அல்லது வழக்கு ஒத்தி வைக்கப்படலாம்; அல்லது பிணை மறுக்கப்படலாம்; பிணை தரப்பட்டால், முழு விடுதலை என்பதுபோல் குதிப்பர் என்பது உண்மை. அதே நேரம், பொதுநலன் அல்லது அரசியல் போராட்ட அடிப்படையிலான வழக்கில் தண்டிக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும். தங்கள் தலைவி மீது, அவரின் ஈழத்தமிழர் பரிவு உணர்வாலும், மத்திய அரசிற்கு எதிராகத் தமிழக நலன் கருதிக் குரல் கொடுத்து வருவதாலும் இது போன்ற தமிழத்தேசிய உணர்விற்கு மதிப்பளிக்கும் போக்கினாலும் உலக அளவில் உண்டாகியுள்ள மதிப்பை இத்தகைய போராட்டம் தேய்க்கிறது என்பதை உணரவேண்டும். தவறான வேண்டுதலின் அடிப்படையிலான போராட்டங்கள் தண்டனைக்கான காரணங்களை அறியாதவரும் நன்கு அறியச் செய்யும் வாய்ப்பாகத்தான் அமைகின்றது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கட்சியினரில் ஒரு சாரார், தங்கள் தலைவி குற்றமற்றவர் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஒரு சாரார், இதைவிடக் கூடுதலாக ஊழல் புரிந்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படாத பொழுது இவருக்குமட்டும் ஏன் சிறைத் தண்டனை என்று ஒப்பீட்டளவில் கருதிப்பார்க்கின்றனர். மறு சாரார் சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது நாம் என்ன செய்ய இயலும் எனக் கருதுகின்றனர். தலைவி மீது பற்றுள்ளதுபோல் காட்ட எண்ணுவோரும் தங்கள் இருத்தலைக் காட்டிக் கொள்ள விரும்புபவர்களும்தான் போலியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்ய வேண்டியன, சட்ட முறையில் விடுதலைக்கான வாய்ப்பிற்கு உதவுவது, எந்த வகையில் குற்றமற்றவர் என்பதை மக்களிடையே பரப்புவது, இவற்றைப் பொதுமக்களுக்கு இடையூறு நேராவண்ணம் செய்வது, யாரையும் கட்டாயப்படுத்தாமலும்   யாருக்கும் தொந்தரவு விளைவிக்காமலும் அமைதி வழிப் பரப்புரையை மேற்கொள்வது ஆகியனவேயாகும். இவர்களின் செயல்பாடுகள் இதுவரை உண்ணா நோன்பிருந்த உயர்ந்த இலக்கிற்காக வாழ்ந்து மடிந்தவர்களை இழிவு செய்வதாக அமைகின்றன என்பதை உணர வேண்டும்! தங்கத்தலைவிக்குப் பங்கம் நேர்ந்ததாய் உண்மையில் வருந்துபவர்களின் செயல்களுக்கும் இழுக்கு தேடித்தருகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  பொழுது போக்கிற்காகவும் பெயர் பெறுவதற்காகவும் உண்ணா நோன்பைக்     கொச்சைப்படுத்துவதை அவர்களின் தலைவியும் தடுத்து நிறுத்த வேண்டும்.

 http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/jayawithtears-300x300.jpg

போராட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு ஊறு செய்பவர்களையும் பொதுச் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்துபவர்களையும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்தின்கீழும் தண்டிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்த தங்கள் தலைவியின் சொல்லின்மேல் மதிப்பு இருந்தது என்றால், போலியான போராட்டங்களைக் கைவிட்டுத் தங்கள் தலைவியின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டும். நடப்பது தலைவியின் சார்பிலான ஆட்சி என்பதால் இந்த ஆட்சிக்கு எந்த இடையூறும் தங்கள் செயல்பாடுகளால் நிகழக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அரசும் தங்களின் நிலையான தலைவியாகிய முந்தைய முதல்வர் அறிவிப்பைச் செயல்படுத்தி, நீதியைச் செல்வாக்கால் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தைத் தொண்டர்களிடையே இருந்துபோக்க வேண்டும்.   கீழமைவு மன்றங்களில் தண்டிக்கப்பட்டு மேல் மன்றங்களில் விடுதலை வழங்கப்பட்ட நிகழ்வுகள் பல உள்ளன. எனவே, சட்டப்படியான தண்டனையைச் சட்டப்படியாகச் சந்திக்கத் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்!

உண்ணா நோன்பு என்பது பெருமிதம் கொள்வோர் இழுக்கைத் துடைக்கும் ஈகச் செயலாகும்!

உண்ணாநோன்பு என்பது தங்கள் இலக்கை அடைவதற்காகப் போராளிகள் உயிர்க்கொடைபுரியும் மறச் செயலாகும்!

உண்ணா நோன்பு என்பது தங்களின் இன்னலைக்களைய – தங்கள் முறையீட்டை வெற்றியாக மாற்ற நிகழ்த்தும் ஓர் அறவழிப் போராட்ட முறையாகும்!

எனவே, உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!

போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

புரட்டாசி 19, 2045 / அக்.5,2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png