(குறட் கடலிற் சில துளிகள் 33 : இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்தொடர்ச்சி)

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்.  

    (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448)

    தவறுகின்ற நேரங்களில் கடிந்துரைப்பார் இல்லாத பாதுகாப்பற்ற அ்ரசன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

    இடித்தல் என்பதற்கு முழங்குதல், இடியிடித்தல், நோதல், தாக்கிப்படுதல், மோதுதல், கோபித்தல், தூளாக்குதல், தகர்த்தல், நசுக்குதல், தாக்குதல், முட்டுதல், கழறிச்சொல்லுதல், கொல்லுதல், தோண்டுதல், கெடுத்தல்,கடிந்து சொல்லுதல் எனப் பல பொருள்கள்.

    இத் திருக்குறளில் இடிப்பாரை என்பது தக்க சமயத்தில் கண்டித்து நல்வழிப்படுத்துவோர் என்னும் பொருளில் வந்துள்ளது.

    இல்லாத=தமக்கு அணுக்கமாக வைத்திராத

    ஏமரா=காவலற்ற

    மன்னன்=அரசன்

    கெடுப்பார்=கெடுப்பவர்கள்

    இலானும்=இல்லை என்றாலும்

    கெடும்=அழிவான்

    ஏமரா  என்பது தக்க இடித்துரைப்பார் இல்லாமையால் காவலை இழந்தவனைக் குறிக்கிறது.

    கெடும் என்பது தீங்கிற்கு உள்ளாதல், வழி தவறுதல், சிறப்பை இழத்தல், ஒழுக்கந் தவறுதல், முறை தவறுதல் எனப் பலவற்றையும் குறிக்கும்.

    மன்னன் என்பது அரசனை மட்டுமல்லாமல், தலைவன், குடும்பத் தலைவனாகிய கணவன் முதலியவரையும் குறிக்கும்.

    இலானும்=கெடுப்பான் இல்லாதவனும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இவ்வாறு தலைவனோ தலைவியோ கேட்டிற்கு உள்ளானால், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் தீங்கிற்கு உள்ளாவர். எனவே, அனைவர் நலன் கருதியும் தன் அருகே துதி பாடிகளை வைத்துக் கொள்ளாமல் துணிவுடன் தவற்றினைக் கடிந்துரைப்போரைச் சூழ வைத்துக் கொள்ள வேண்டும்.  அருகில் உள்ளவர்கள் ஆமாம் சாமி போடுபவர்களாக இருப்பின் செவிக்கு இனிமையாக இருக்கலாம், உள்ளம் குளிரலாம். ஆனால் வாழ்க்கை நலம் பயக்காது. அதே நேரம், பிறர் தவற்றினை அல்லது குறையைச் சுட்டிக் காட்டுவது அந்த நேரத்தல் கசப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவுரையைக் கேட்டு நடப்பின் வரக்கூடிய அழிவிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    ஆன்றோர் அறிவுரையைக் கேட்காமல் அழிந்தவர்களை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. நல்லவர்கள் அறிவுரையால் நன்மை எய்தியவர்களைப் பற்றியும் வரலாறு சொல்லத் தவறவில்லை. ஆட்சி வரலாறு, தொழில் வரலாறு எனப் பல தரப்பிலும் நாம் இவற்றை அறியலாம்.

    முந்தைய குறளில்(447), இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் என்ற திருவள்ளுவர் இக்குறள்(448) மூலம் அவ்வாறு இடித்துரைக்கும் தன்மையரை அணுக்கமாகக் கொள்ளாதவன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே அழிவான் என்கின்றார். ஆக இவ்விரு குறள்கள் மூலம் இடித்துரைப்போர் துணையின் இன்றியமையாமையை நமக்குத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    நாமும்,

    கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன்

    தானே அழிவான்

    என்பதை உணர்ந்து தக்கவரைத் துணையாகக் கொண்டு வாழ்வில் வெல்வோம்! 000