இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன.

அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் திகழ்கிறார். அவரது ஐந்தாவது புதினம் ஆசைக்கோர் அளவில்லை என்பது.

புதின ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்குக் காவியா சண்முகசுந்தரம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி சரியாக இருக்கும்:

அம்பலவாணன் நல்ல கதைசொல்லி. இயல்பாக இனிதாக இசைவாய்க் கதை சொல்பவர்.

பெயர்தல், பொட்டுவைத்த பொழுதில், தூய்மை, தொடரும் நிழலாய் என நான்கு புதினங்களை எழுத அவற்றைக் காவியா வெளியிட்டுள்ளது.

புலம் பெயர்தல், பால் பெயர்தல், துப்புரவுப் பணி, எயிட்சு பிணி எனும் கதைக்களங்களைக் கண்டெடுத்துச் சொன்னவர் இப்போது சீட்டு நிறுவனங்கள் தில்லுமுல்லுகளை அம்பலமாக்கியுள்ளார்.

இவரை அம்பல வாணன் என அழைப்பது சாலப் பொருத்தம்தான். மேலும் மேலும் அம்பலங்கள் அரங்கேறட்டும்.

இவர் கூறியுள்ளதுபோல் மக்களின் அவலங்களைத் தன் புதினங்கள் மூலம் காட்சிப்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார்.

“ ‘ஆசைக்கோர் அளவில்லை அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லை. அவர் பட்டறிவும் இல்லை. ஆனால், இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.

குறைந்தபட்சம் அந்த அன்னத்தைத் தெரியும். ஏன் நமக்குத் தெரியும். கேட்ட செய்திதான்! கண்ட காட்சிதான்! ஏன், இது நம்முடைய பட்டறிவாகக் கூட இருந்திருக்கலாம்.

மிக விரிவாக, உணர்வுப்பூர்வமாக அதை அம்பலவாணன் விவரிக்கும் விதம், மனிதர்களைக் காட்டும் விதம், அவர்களின் கண்ணீரை, இரத்தக் கசிவை வார்த்தைகளாக, நிகழ்வுகளாக, ஒருவருக்கொருவர் உரையாடும் தருணங்களில், திசை தெரியாது திகைக்கும் நேரங்களில் மிக யதார்த்தமாகக் கடத்தி விடுகிறார்!

ஆம்! மக்களின் துயரங்களை, நம் முன் நிறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விடுகிறார். நம் புலவர்கள், அதிலும் சங்கக் காலப் புலவர்கள், தாம் காணும் காட்சிகளையெல்லாம் நம் கண்முன் காட்சிப்படுத்துவதில் வல்லவர்கள்.

அதுபோல் எழுத்தாளர் அம்பலவாணனும் தன் கண்களைப் படப்பொறிகளாகக் கொண்டு குமுகாயத்தில் அவலங்களைச் சந்திக்கும் மனிதர்களைப் படம்பிடித்துக் கதைமாந்தர்கள் மூலம் கொண்டு வருவதில் திறமையானவர்.

ஆனால். இப்புதினத்தில் மேலும் ஒரு படி முன்னேறிப் பிறர் மூலம் அறிந்த அவலங்களை, கேட்ட துயரங்களை, ஊடகங்கள் வாயிலாக உணர்ந்த செய்திகளை, கேள்விப் புலனிலிருந்து கட்புலனுக்கு மாற்றி, உயிரோட்டமுள்ள படைப்பை அளித்துள்ளார்.

இக்கதை உருவாக்கம் குறித்து எழுத்தாளர் அம்பலவாணனே பின்வருமாறு கூறியுள்ளார்:

“ ‘ஆசைக்கோர் அளவில்லை என்னும் இப்புதினம், இன்று காணப்படுகிற நிதி மோசடிகள் குறித்துப் பேசுகிறது.

இது வரையிலும் நான் எழுதிய புதினங்களில், எனது வேலையின் பொழுது சந்தித்த குமுகச் சிக்கல்கள் குறித்து எழுதினேன். இஃது அப்படியல்ல. நேரடியாக நான் அறிந்த செய்தியல்ல. ஆனாலும், தொழில் முறையில் அறிமுகமான இருவர், ஒருவர் ஆண், மற்றொருவர் பெண்.

மோசடி நிதி நிறுவனம் ஒன்றினால், ஏமாற்றப்பட்டுத் துன்பம் தோய்ந்திருந்த வேளையில், இருவரும் பகிர்ந்து கொண்டிருந்த செய்திகள்தான், இந்தப் புதினத்தின் கருப்பொருள்.

அவர்கள் சொல்லியதைப் பார்த்தால், மன்பதையில் எல்லா நிலையிலும் இருக்கிறவர்களும் பரவலாய் நிதி நிறுவனத்தின் கவர்ச்சி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது.

இதைப் புதினமாக எழுதி மக்கள் மத்தியில் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

பணத்தினை முதலீடு செய்பவர்கள், முகவர்களாகச் செயல்படுபவர்கள், அவர்களின் உறவுகள், உருவாகும் சிக்கல்கள் என்பவற்றின் அடிப்படையில், கதாபாத்திரங்களுக்குக் கற்பனையில்  உயிர் கொடுத்தேன்.”

குடும்பப் புதினம், குமுகாயப் புதினம், காதல் புதினம், உளவியல் புதினம், துப்பறியும் புதினம், திகில் புதினம் என்பன போன்று முப்பதுக்கும் மேற்பட்ட புதின வகைகள் உள்ளன.

இப்புதினம் குமுகாயப் புதின வகையாக இருந்தாலும் விழிப்புணர்வுப் புதினம் எனலாம்.

புதினங்களில் பல்வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. இப்புதினம்  கதையின் கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டும் பின்னோக்கு உத்தியை இடையிடையே கையாண்டுள்ளார்.

கதை மாந்தர்கள் மூலம் பின்னோக்கு நிகழ்வுகளைக் கூறுவது ஒரு வகை. எழுத்தாளரே பின்னோக்கு நிகழ்வுகளைக் கூறுவது ஒரு வகை.

இதில் கதையோட்டத்தின் இடையிடையே நனவோடை உத்தி போன்று எழுத்தாளரே பின்னோக்கு உத்தியைக் கையாண்டுள்ளார். ஆனால் எந்தச் சிக்கலும் இல்லாமல் தெளிவாகக் கதையைக் கொண்டு போகிறார்.

கதையோட்டத்திற்கு முன் நிகழ்வுகளும் உயிரோட்டமாக உள்ளன. அவற்றை எச்சிக்கலும் இன்றி, எடுத்துரைப்பதில் வல்லவராக எழுத்தாளர் இருக்கிறார்.

புதினத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப வாசகர்களுக்குக் கதைப்பாத்திரங்கள் மூலம் நல்லறிவுரைகளையும் வழங்குகிறார்.

எடுத்துக்காட்டாக, அக்கா  மாணிக்கம் மூலம், “இருப்பதைவிட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட்டால் புத்தி கெட்டுதான் போகும். பேராசை எனும் இறக்கைகள் இது போன்றவர்களுக்குப் பறக்கும் எண்ணத்தையும் அசட்டுத் துணிவையும் தருகிறது.

பறந்து போகட்டும். ஓரளவுக்கு உயரப் பறந்த பிறகு இறக்கைகள் உண்மையில்லை என்பது தெரியும்.

எந்த உயரத்தில் இருந்து விழுகிறார்களோ அந்த அளவிற்குக் காயங்களும் அதிகமாக இருக்கும். அப்பொழுது நமக்கு உயிரும் இருந்து மனமும் இருந்தால் காயத்திற்கு மருந்துபோடலாம்”  எனப் பேராசையால் வரும் பேரிழப்பை உணர்த்துகிறார்.

நோயர் நாகராசு மூலம் அன்னத்தின் சிறப்பான செவிலியர் பணியை விளக்குவதுபோல் பிற பாத்திரங்கள் சிறப்புகளையும் சில நிகழ்வுகள் மூலம் விளக்குகிறார்.

புதினத்தில் ஆசிரியர் கூற்றில் பெரும்பாலும் அலைபேசி, தொலைபேசி, தொலைக்காட்சி, உள் இணைப்பு, மருத்துவமனை, நிறுத்தம் முதலான நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுதியுள்ளார்; உரையாடல் பகுதியில் பேச்சு வழக்கையே பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் அடுத்த பதிப்பில் அவற்றில் உள்ள வழுக்களை நீக்கி  வெளியிடலாம்.

மக்கள் மேம்பாட்டு வினையகம்’ என்னும் தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் இல.அம்பலவாணனின் பணிக்களங்களில் ஒன்று காரைக்கால். அந்நகரே இப்புதினத்தின் முன்னணிக் கதைக் களமுமாகும்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் படைப்புகளில் புதுச்சேரி மாநிலம் சிலவாகவே இடம் பெறும்.

ஆனால், எழுத்தாளர் இல.அம்பலவாணன், இப்புதினத்தில் வாசகர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காரைக்காலின் பங்களிப்பு, காரைக்காலில் சிறப்பாக நடைபெறும்  மாங்கனித் திருவிழா முதலியவைபற்றியும் அறியத் தருகிறார்.

ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முன்னேற்ற ஆசையால் சில வழிமுறைகளில் ஈடுபடவும் விரும்புவர்.

ஆனால், குறுக்கு வழியிலும் தவறான நம்பிக்கையிலும் பேராசைப் பாதையில் பயணம் செய்வர்.

இதனால் துன்பத்தையும் துயரத்தையுமே சந்திக்கின்றனர். அத்தகைய பேராசைக்கனவில் மூழ்கித் துன்பக்கடலில் தத்தளிப்பரவர்களைப் பற்றியதுதான் இப்புதினம்.

திட்டமிட்டு ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்களையும் அறியாமலேயே அவர்களின் பணியாளர்களாகவும் முகவர்களாகவும் செயற்பட்டு, மக்களை ஏமாற்றத்திற்குத் தள்ளுவோர்களையும் ஆசைச்சொற்களால் ஈர்க்கப்பட்டுப் பேராசைக் கனவுகள் நிறைவேறும் என்ற தவறான நம்பிக்கை வலையில் விழுந்து இழப்புகளையும் இடர்களையும் துன்பங்களையும் சந்திக்கும் அப்பாவிகளையும் எழுத்தாளர் நமக்கு நன்கு அடையாளப்படுத்துகிறார்.

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.”   (திருக்குறள், ௯௱௩௰௧ – 931) என இரைக்கு ஆசைப்பட்டுத் தூண்டிலில் சிக்கும் மீனை உவமையாகக் கூறித் திருவள்ளுவர், வெற்றியே கிடைத்தாலும் சூதாட்டத்தைத விரும்பக் கூடாது என்பார்.

நிதி நிறுவன முதலீடுகளும் சூதாட்டமாய்த் திகழ்கின்றன.

கோவையில் செயல்பட்டு வரும் திருமகள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் பரத்துகுமார். தன் மயக்குச் சொற்களால் மக்களை ஏமாற்றி நிதி திரட்டி மோசடியில் ஈடுபடுபவர்.

காரைக்காலில் உள்ள அருள்குமார் இதன் தலைமை முகவர். படியெடு (செராக்குசு) கடை நடத்துபவர் கனகா. மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் அருள்குமாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இந்நிறுவனத்தின் முகவராகிறார்.

இவரது இளவயதுத் தோழி விண்ணரசி மருத்துவமனையின் செவிலியர் அன்னம். இவரே இப்புதினத்தின் முதன்மைப் பாத்திரம்.

இவரது கணவர் இளவரசன் தனியார் பாதுகாவலர் நிறுவனத்தில் கள மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர்.

அன்னம், கனகாவின் பேச்சால் இந்நிறுவனத்தில் பெருந்தொகை முதலீடு செய்கிறார். அத்துடன் நில்லாமல் உறவினர்கள், அறிந்தவர்கள் எனப் பிறரிடமும் தொகை பெற்று முதலீட்டிற்கு உதவுகிறார்.

ஆனால் நிதி நிறுவனம் கூறியவாறு வட்டி போன்ற எதையும் தராத பொழுதுதான் அதன் மோசடி புரியலாயிற்று. அன்னத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் அன்னத்திற்குத் தொல்லை தருகின்றனர்.

அன்னம் கனகாவிடமும் அருள்குமாரிடமும் முதலீட்டைத் திரும்பப் பெற மன்றாடுகிறார். ஆனால், அவர்களுமே நிதி நிறுவனரால் ஏமாற்றப்பட்டவர்கள்தாம். எனவே, இழந்த பணத்தை மீட்பதற்காக அனைவரும் போராடுகின்றனர். இப்போராட்ட வாழ்க்கை பற்றியதே இப்புதினம்.

அன்னத்தின் தந்தை பூவராகன் காரைக்கால் பகுதியில் தனியார் பத்திர எழுத்தராக இருந்தவர். புதுச்சேரி விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே, காரைக்காலின் வளர்ச்சியில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்.

இவர் முலமே புதுச்சேரி வரலாற்றை நமக்குத் தெரிவிக்கிறார்.

அன்னத்தின் அம்மா காமாட்சி, அக்கா  சரசுவதி, அண்ணன்  அரங்கசாமி, மகள்  இளமதி, மகன்  இளமுருகு, இளவரசனின்  அக்கா  சத்தியா,  கணவர் முருகவேல், கனகா  கணவர் பாலமுருகன், அக்கா  மாணிக்கம்,  மாமியார் கலாராணி முதலிய பாத்திரங்கள் மூலமும் காவல் ஆய்வாளர் முதலிய காவல்துறையினர் மூலமும் கதையைக் கொண்டு செல்கிறார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தாலும் குறிப்பாகப் பெண்கள் தங்கள் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பெரு விருப்பம் கொள்கின்றனர்.

ஆசை பேராசையாக மாறுவதும் மயக்குச் சொற்களில் வீழ்வதையும் கணவருக்குத் தெரியாமலேயே பின்னர் இதனைச் சொல்லலாம் என்று முதலீடு செய்து ஏமாறுவதையும் நயம்பட எழுதியுள்ளார்.

இப்புதினத்தை எழுதத் தொடங்கிய பொழுது ‘ஒன்று இரண்டானால்’ எனத் தலைப்பிட்டதாகவும் தாயுமானவரின் ‘ஆசைக்கோர் அளவில்லை’ எனத் தொடங்கும் பாடலைப் படித்ததும்

இதுவே பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று கருதி, அதனையே தலைப்பாகச் சூட்டியதாகவும் புதின ஆசிரியர் எழுத்தாளர் இல.அம்பலவாணன் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத்தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. அளவில்லா ஆசை அளவற்ற துன்பங்களையே தரும் என்ற உண்மையையும் உணர்த்துகிறது.

சிறந்த புதினங்களுக்குப் பரிசு தரும் சாகித்திய அகாதமி போன்ற அமைப்புகள் இப்புதினத்திற்குப் பரிசு தருவது அவற்றிற்கே பெருமை சேர்ப்பதாக அமையும்.

இது  காவியா  வெளியீடு. 138 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உரூ. 170/-
பேசி எண்கள் : 044-2372 6882 / 98404 80232

எழுத்தாளர் இல.அம்பலவாணன் எண் : 94431 41085

தாய் 17.12.2025