வெருளி நோய்கள் 514-518: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 509-513 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 514-518
- எழு நாள் வெருளி-Paschaphobia
உயிர்த்தெழு நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் எழு நாள் வெருளி.
இயேசு கிறித்து கி.பி.33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம்நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிகும் நாளே உயிர்த்தெழு நாள் (Easter). ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா என்றும் பாச்சா(Pascha) என்றும் சொல்வர். புனித வெள்ளியின் மூன்றாம்நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் இதனை உயிர்ப்பு ஞாயிறு(Resurrection Sunday) என்றும் சொல்வர்.
பாச்சா(Pascha) என்னும் அரமேயச் சொல்லுக்குக் ‘கடந்து போதல்’ எனப் பொருள். இசுரேல் மக்கள் எகித்தில் இருந்து மீட்பு பெற்றதன் நினைவாகக் காெண்டாடும் இசுரவேலர் அல்லது எபிரேயர்(இயூதப்) பெருவிழா ஆகும்.பழைய ஏற்பாட்டில் குறிக்கப்பெற்றிருக்கும் இதனை இயேசுவின் உறப்பையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன் அறிவிப்பாகக் கருதுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் நோன்பு நாள்கள் 40இன் நிறைவில் இந்நாள் வருகிறது. எனவே,நோன்பைத் தவறின்றி முடிக்க வேண்டும் என்ற அச்சம் வருவதும் உண்டு. 50 நாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.
00
- எழுதுகை வெருளி-Scriptophobia
எழுத்து வெருளி(Graphophobia) போன்றதுதான் இதுவும். ஆனால் எழுத்துப் பிழையின்றி எழுதுவதுடன் அல்லாமல் எழுத்து நடை குறித்தும் கவலைப்படுவது. செம்மையாக எழுத இயலாமல் போகும் என அஞ்சுவது எழுதுகை வெருளி. எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உள்ளது. அவர்களில் ஒரு சாரார் எழுதுகை வெருளிக்கு ஆட்பட்டுள்ளனர்.
script என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எழுத்து. எழுத்து என்பது கையெழுத்து அல்லது எழுதுவது மட்டுமல்ல. எழுதப்படும் படைப்பும் எழுத்துதான்.
00
- எழுத்து வெருளி – Graphophobia/ Scribophobia
எழுதுவது குறித்தும் கையெழுத்து குறித்தும் அகரவரிசை அல்லது நெடுங்கணக்கு குறித்தும் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் எழுத்து வெருளி.
இல்லாத தலை எழுத்து இருப்பதாக எண்ணி அதுதான் வாழ்க்கையை வரையறுக்கிறது என எண்ணுவோர் உள்ளனர். இதனால் தலை யெழுத்து கண்டு அஞ்சுவோர் உள்ளனர். இதனையும் எழுத்து வெருளியில் சேர்க்கலாம் அல்லவா?
grapho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுது.
00
- எழுத்து(க்கூட்டு)ப்பிழை வெருளி-Ortographobia
எழுத்தொலிப்பில் தவறு நேர்ந்து விடும் என அஞ்சுவது எழுத்து(க்கூட்டு)ப்பிழை வெருளி அல்லது எழுத்தொலிப்பு வெருளி எனப்படும்.
தவறான எழுத்தொலிப்பு நேரக்கூடாது எனவும் சரியாக எழுத வேண்டும் என்றும் செயல்படுவது வரவேற்கத்தக்கதே. ஆனால், செம்மையாக எழுதுவதில் கருத்து செலுத்தாமல் பிழையாக எழுதிவிடுவோம் என அஞ்சுவது தவறுதானே!
சிறு பருவத்தில் ஒரு முறை தவறான ஒலிப்பில் எழுதி விட்டு அதனையே எண்ணித் தொடர்ந்து தவறாக எழுதுநர் உள்ளனர். தவறாக எழுதும் பொழுது ஆசிரியர்கள் தண்டிக்காமல் அறிவுறுத்தினால் இத்தகைய வெருளிக்கு ஆளாக மாட்டார்கள்.
Ortograph என்பது எழுத்துஒலிப்பு ஆகும்.
00
- எழுத்தறிவு வெருளி – Dysgraphiaphobia
எழுதுவது, விளக்குவது போன்றவற்றில் குறைபாடு இருப்பது தொடர்பான தேவையற்ற வரம்புகடந்த பேரச்சம் எழுத்தறிவுவெருளி.
dys என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குறைபாட்டுடன் செய்தல் என்று பொருள். graphía என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கையால் எழுதுதல் எனப் பொருள். கையெழுத்துக் குறைபாட்டையே முதன்மையாக இது குறிப்பிட்டாலும் எழுதும் திறன், விளக்கும் திறன் முதலியவற்றையும் குறிக்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply