வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 554-558 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 559-563
559. ஒலிப்பிக் கடிகார வெருளி – Xypnitiriphobia
மணிஒலிப்பிக் கடிகாரம்(alarm clock) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப்பிக் கடிகார வெருளி.
விழிப்பிற்காக மணியை ஒலிக்கச்செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குரிய மணிப்பொறி, ஒலிப்பிக் கடிகாரம் ஆகும்.
00
560. ஒலிம்பிய வெருளி – Olympicphobia
ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிம்பிய வெருளி.
பேரார்வமும் விடாமுயற்சியும் அளவற்ற நம்பிக்கையும் இருப்பினும் மறுபுறம் வாகைசூட இயலுமா என்ற கவலையும் சேர்வதால் ஒலிம்பிக்குப் போட்டிகளில் பங்கேற்பதில் பேரச்சம் கொள்கின்றனர்.
விளையாட்டு வெருளிபோன்றதுதான் இதுவும்.
00
561. ஒலி ஒளியிழை வெருளி – Cassettophobia
ஒலியிழை, ஒளியிழை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலி-ஒளியிழை வெருளி.
இழைகள் சிக்கிக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் பேரச்சம் கொள்கின்றனர். ஒலிப்பதியன் வெருளிக்குக் காரணமாய் அமைவதும் ஒலி-ஒளியிழை வெருளியே.
ஒலி இழை அல்லது ஒளி இழை அடங்கிய பெட்டகத்தைக் குறிப்பிடும் வகையில் ஆங்கிலத்தில் பெட்டக வெருளி என்கின்றனர்.
00
562. ஒலிவாங்கி வெருளி – Microphonophobia
ஒலிவாங்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிவாங்கி வெருளி.
நாம் பேசும் பொழுது ஒலி வாங்கிச் சரியாக வேலை செய்யாது, கர், குர் என்ற ஒலியை உடன் எழுப்புகிறது என்றெல்லாம் தேவையற்றுக் கவலைப்பட்டு ஒலி வாங்கி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
563. ஒல்லியன் வெருளி – Slendermanphobia
புனைவுரு ஒல்லியன்(Slenderman) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒல்லியன் வெருளி.
ஒல்லி மனிதன் (Slender Man) என்பது புனைவுரு பாத்திரம். இதனைச் சுருக்கமாக ஒல்லியன் எனக் குறித்துள்ளோம். மெலிந்த இயல்புக்கு மாறான உயரம் கொண்டதும், கூறுகள் இல்லாத தலையையும் முகத்தையும் கொண்டதும், கறுப்பு நிற உடை அணிந்ததுமான ஓர் உருவம். 2009இல் கைச்சுவை இணையத்தளப் பயனரான எரிக்கு நட்சன் (Eric Knudsen) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இலக்கியம், ஓவியம், நிகழ்படத் தொடர்கள் போன்ற ஊடகங்களில் ஒல்லியனைக் காண முடியும். ஒல்லியன்பற்றிய கதைகள் அவன் மக்களை – குறிப்பாகச் சிறுவர்களைப் பின் தொடர்தல், கடத்துதல், காயப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் காட்டுகின்றன. ஆதலின் இதைப் பார்ப்போருக்கு – அவர்களுள் சிறுவர்க்கு – அச்சம் உருவாதல் இயற்கையே. கற்பனையை மெய்யாகக் கருதும் பொழுது ஒல்லியனால் தீங்கு நேரும் எனப் பேரச்சம் வளர்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply