thamiz01

  கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்.

  மாணவர்கள் தமிழ் வழியாகப் படித்தலையே விரும்புகின்றனர். ஆசிரியர்களும் தமிழ் வழியாகக் கற்பித்தலே எளிதும் பயனுள்ளதும் ஆகும் என்று அறிந்துள்ளனர். ஆயினும் சில கல்லூரிகளில் சில பாடங்களைத் தமிழ் வழியாகப் படிக்க வசதியளித்திருந்தும் அவ் வகுப்புகளில் பேரளவில் சேர்ந்திலர். ஏன் சேர்ந்திலர்? தமிழ் வழியாகப் படித்தலை ஏன் விரும்பிலர்? பெருமைமிகு முதலமைச்சர் அவர்களே அதன் காரணத்தையும் கூறிவிட்டனர்.

  தங்களுடைய வருங்கால வாழ்க்கையைக் கருதித் தமிழ்ப் பாடமொழிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயங்கு கின்றார்கள் போலும் – இவ்வாறுதான் முதல் அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்கள். வாழ்க்கையைக் கருதிச் சேரவில்லை. ஆம். தமிழ் வழியாகப் படித்தால் இன்றுள்ள சூழ்நிலையில் அரசுப் பதவிகள் கிட்டா என்று கருதுகின்றனர். நடைமுறை அவ்வாறு கருதுமாறு செய்கின்றது. தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்றுக் கொண்டிருந்தும் தமிழ் வழியாகப் படித்தோரைத்தான் முதலில் பணிகளில் அமர்த்திக் கொள்ளவேண்டும் என்ற விதியை மேற் கொண்டிலர். ஆங்கிலத்தின் வழியாகப் படித்தோர்க்கே மதிப்பும் முதன்மையும் தருகின்றனராம். தமிழ் வழியாகப் படித்தோரை இகழ்ந்து ஒதுக்குகின்றனராம். இந்நிலையில் தம்மைத் தாழ்த்திக் கொண்டு எவர்தாம் தமிழ்வழியாகப் படிக்க முன்வருவர்!

  வேலை பெரும் நோக்கத்தை மட்டுமே மாணவர்கள் கொண்டிருக்கக் கூடாது என்று முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்கள். இன்று எல்லாரும் வேலை பெறும் நோக்கத்துடன் தானே படிக்கின்றனர். அறிவு வளர்ச்சிக்கெனப் படிப்பார் யாரும் இலரே. ஆதலின் தமிழ் வழியாகப் படித்தால் அரசுக் பதவிகள் கிட்டா என்று அஞ்சுதல் இயற்கைதானே. தமிழைப் பாடமொழியாக எடுத்துக் கொண்டால் தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சும் மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமையன்றோ? தமிழையாட்சி மொழியாகக் கொண்டுள்ள தமிழ்நாட்டு அரசு தமிழ் வழியாகப் படித்து வருவோரையே பணிகளில் அமர்த்துவோம் என்று கூறுவதற்கு மாறாகத்,  தமிழ்நாட்டு அரசுப் பதவிகளில் இடம்பெற விண்ணப்பம் செய்வோர் தமிழறிவு பெற்றிருக்க வேண்டிய கட்டாயமின்று என்று அன்றோ அறிவித்துள்ளது! பிறகு எங்ஙனம் தமிழ் வழியாகப் படிக்க முன்வருவர்? ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தும் ஆங்கில மொழிச் செல்வாக்கும் மதிப்பும் இன்னும் மறைந்திலவே!

Prof.Dr.S.Ilakkuvanar

  ஆங்கிலப் புலமையும் பற்றும் உடையோர்தாம் ஆட்சி செலுத்துகின்றனர். கல்லூரிகளில் தமிழ்ப் பாடமொழி வகுப்பில் மாணவர்கள் மிகுதியாகச் சேராமைக்குக் கல்லூரி முதல்வர்களும் காரணமாவார். ஆங்கிலத்தை மதித்துத் தமிழைத் தாழ்வாகக் கருதுவோரே இன்னும் கல்லூரி முதல்வர்களாக உள்ளனர். தமிழ் வழியாகப் படித்தலை உயர்வுபடுத்திக் கூறுவது கிடையாது. மாறாக இழிவுபடுத்திக் கூறுவோரும் உளர். கல்லூரிகளில் இடம்தேடி வருவோர் கல்லூரி முதல்வர் விருப்பத்திற்கு ஏற்பவே நடப்பது இயல்புதானே. ஆகவே, தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களே முதல்வர்களாயிருப்பின் இவ்வவல நிலை எளிதில் நீங்கும். ஆங்கில மோகம் இன்னும் அகன்றிலது. ஆகவே ஆங்கிலத்தின் வழியாகப் படித்தலையே மாணவர்கள் தம் விருப்பதற்கு மாறாக நாடுகின்றனர்.

  தமிழ்ப்பாடமொழி வகுப்புகளில் மாணவர்கள் மிகுதியாகச் சேர வேண்டுமென்றால்

                1. தமிழ் வழியாகப் படித்து வருவோர்க்கே முதலிடம் என்று உடனே அறிவித்தல் வேண்டும்.

                2. தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களே கல்லூரி முதல்வர்களாக இருத்தல் வேண்டும்.

அன்றியும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் எல்லாவற்றிலும் ஒரே சமயத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கிவிடல் வேண்டும். அங்ஙனமின்றி ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்று வைத்து அதன் வழியாகப் படித்து வருவோரே சிறந்தவர் என்று மதித்தால் தமிழ் வாயிலாகப் படிக்க வருவோர் அரியவே இருப்பர்.

  ஆகவே, தமிழக அரசு தமிழைப் பாடமொழியாக ஆக்குவதில் ஆர்வம் கொண்டிருப்பது உண்மையானால் இவற்றை எண்ணி ஆவன உடனே செய்யுமாறு வேண்டுகின்றோம். தமிழைப் பாடமொழியாகக் கற்று வருவோரால்தான் தமிழ்நாட்டுக்குப் பெரு நன்மை விளையும்,

kuralneri02குறள்நெறி (மலர்1: இதழ்6): பங்குனி19,1995: 1.4.1964