(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி)

569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia

ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி.

கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள்.

காண்க: ஒளி வெருளி (Photophobia)

00

570. ஒளி வெருளி-Photo Phobia 

வெளிச்சம் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்  ஒளி வெருளி.

ஒளி வெருளி (Photophobia) என்பது பயிரியலில், ஒளியைக் கண்டு அஞ்சி ஒளி மறைவிடத்திற்கு அல்லது ஒளி இல்லா இடத்திற்குச் சென்று தங்கும் பூச்சிகளின் அல்லது பிற விலங்குகளின் இயல்பினை-ஒளிஎதிர் துலக்கத்தைக் குறிக்கும்.

கவிஞர் கண்ணதாசன், “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற கருப்புப்பணத் திரைப்படப்பாடலில்

“இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார்”

எனத் தவறான தொழில் புரிவோர் ஒளிக்கு அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருப்பார்.  மறைவான தொழில் புரிவோருக்கு ஒளி பகையாகிறது.

எனினும் ஒளியைக்கண்டு கூசுதல், ஒளியினால் கண்கள் பாதிப்புறும் என அஞ்சுதல். என ஒளி சார்ந்த கவலைகளால் ஒளி வெருளி உருவாகிறது.

சூரிய ஒளி வெருளி(Heliophobia)யும் ஒளி வெருளி போன்றதே.

Photo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒளி என்றுதான் பொருள்.     Photograph  என்பதன் சுருக்கமாக Photo என்று சொன்னாலும் இங்கே ஒளியைத்தான் குறிக்கிறது.

00

571. ஒளியூடிப் பொருள் வெருளி – Diafanophobia

ஒளியூடிப் பொருள் / தெளி தெரி பொருள்(transparent object)  குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளியூடிப் பொருள் வெருளி.

Diafano என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒளிபுகு/ஒளியூடி எனப் பொருள்.

00

572. ஒளிர் விளக்கு வெருளி – Fakosphobia

ஒளிர் விளக்கு( flashlight) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒளிர் விளக்கு வெருளி.

காண்க: ஒளி வீச்சு வெருளி(Selaphobia)

00

573. ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

ஒளிர்வது குறித்த தேவையற்ற பெருங்கவலையும் பேரச்சமுமே ஒளிர்வு வெருளி.

சூரிய ஒளி வெருளி(Heliophobia)யும் ஒரு வகையில் ஒளி வெருளி அல்லது ஒளிர்வு வெருளியே!

ஒளி என்னும் பொருளுடைய phōs என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததே Photo  என்னும் சொல்

aug என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மிகுதிப்பாடு என்று பொருள். ஒளி மிகுதியாகிப் பளபளப்பதை – ஒளிர்வதை  Photoauglia குறிப்பிடுகிறது.

00

(தொடரும்)