வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 689-693
689. கலை வெருளி – Artemophobia
கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி
இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது.
கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது.
00
690. கலைமான் வெருளி – Tarandophobia
கலைமான் தொடர்பான வரம்புகடந்த பேரச்சம் கலைமான் வெருளி.
நம்நாட்டில் கலைமான் வேட்டையாட வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தடை செய்யப்பட்டுள்ளது.
பயங்கர வழக்குகளில் தப்பியவர்கூடக்கலமான் வேட்டையில் தப்பிக்க இயலாமல் சிறைத்குத் தள்ளப்பட்டதை மக்கள் அறிவர். ஆனால் கலைமானை நேரில் பார்க்கக்கூட வாய்ப்பு இல்லாத பொழுதே அதன் படங்களைப் பார்த்துக் காரணமற்ற பேரச்சம கொள்வோர் உள்ளனர்.
00
691. கல்லறை வெருளி-Coimetrophobia/koimetrophobia
கல்லறை பற்றி எழும் தேவையற்ற பேரச்சமே கல்லறை வெருளி.
கல்லறை பற்றிப் படிக்க நேர்ந்தால், கல்லறை படத்தைப்பார்த்தால், நேரில் பார்த்தால் கல்லறை வழியாக நடக்கநேர்ந்தால், கல்லறைக்குச் சென்றால் சிலருக்குத் தேவையற்ற பேரச்சம் ஏற்படும். சிலர் பேய்ப்படங்களைப்பார்க்கும் பொழுதும் பேய்க்கதைகளைக் கேட்கும் பொழுதும் கிலிக்கு ஆளாகிக் கல்லறை அச்சத்திற்கு ஆளாவார்கள்.
நிலத்தடியிலுள்ள பாதுகாப்பான கருவூல அறையும் கல்லறை எனப்படும். என்றாலும் அஃது இங்கே குறிக்கப்படவில்லை.
coimetro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் புதைக்குமிடம்/இடுகாடு/கல்லறை.
00
692. கல்லூரி வெருளி – Collegiphobia
கல்லூரி, பல்கலைக்கழகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கல்லூரி வெருளி.
பள்ளி வெருளி உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கல்லூரி வெருளி வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்கள் அறிமுகம், தவறானவர்களுடன் பழக்கம் ஏற்படுமோ என்றகவலை, பள்ளியில் தமிழ் வழியில் படித்து விட்டுக் கல்லூரியில் ஆங்கில வழி படிக்கநேர்ந்தால் பயிற்றுமொழி குறித்த பேரச்சம், தேர்ச்சி குறித்த அச்சம், எதிர்காலம்திசை திருப்பப்படுமோ என்ற பேரச்சம எனப் பல காரணங்களால் கல்லூரி குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
693. கவர்ச்சியில்லாப் பெண் வெருளி – Aschemegynephobia
கவர்ச்சியில்லாப் பெண்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கவர்ச்சியில்லாப் பெண் வெருளி.
உடல் தோற்ற அடிப்படையில் விருப்பு வெறுப்பு அமையக்கூடாது; அழகு என்பது முகப்பொலிவு அல்ல; உள்ளத்தின் வெளிப்பாடும் பண்புமே ஆகும்; என அறிந்தும் கவர்ச்சியில்லாப் பெண்கள் குறித்துக் காரணமற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply