வெருளி நோய்கள் 356 – 360 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 356 – 360
- இழிவு வெருளி – Humiliationphobia
இழிவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இழிவு வெருளி.
இழிவு படுத்தப்படுதல், அவமானத்திற்கு உள்ளாதல், தாழ்வுபடுத்தல், மதிப்பிழக்கச் செய்தல்(humiliation) போன்ற சூழல்களில் ஏற்படும் அளவு கடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.
இழிவு படுத்துதல் முதலியவற்றை நால்வகையாகப் பிரிக்கின்றனர். தெரிந்தவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல் தெரிந்தவரில் தவறு செய்யாதவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்யாதவை இழிவு படுத்தல் என வகைகப்படுத்துகின்றனர். மன்பதையி்ல் இத்தகைய இழிவு படுத்தல், சாதி,சமய அடிப்படையிலும் செல்வ வேறுபாட்டு நிலையிலும், கற்றறிந்தவர்,அறியாமை மிக்கவர் என்ற நிலையிலும் இழிவு படுத்தலாகும்.
ஆண்,பெண், இருபாலர் நிலையிலும் இழிவு படுத்தப்படுவோர் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளை இழிவு படுத்துவோர் உள்ளனர். இழிவு படுத்தலில் கொடுமையானது தீண்டத்தகாதவர் என இழிவு படுத்தலாகும்.
தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் எண் வகை மெய்ப்பாடுகளில் ஒன்றாக இளிவரலைக் குறிப்பிடுகிறார். பிறரால் இகழப்பட்டு எளியராதலாகிய தாழ்வுநிலை, இழிவு’ எனப்பாடங்கொள்வர் இளம்பூரணர்.
தாழ்வு மனப்பான்மை, கடுஞ்சினம், பெரு விருப்பு, பேரச்சம் கொண்டு இழிவு வெருளிக்கு ஆளாகின்றனர்.
” நஞ்சுஉடைமை தான்அறிந்து நாகம் கரந்துஉறையும் “
எனத் தொடங்கும் ஒளவையார் பாடலை இழிவு படுத்தலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். நஞ்சை மறைத்து வாழும் நச்சுப்பாம்பையும் நீரில் வெளிப்படையாக உலவும் நஞ்சற்ற பாம்பையும் குறிப்பிட்டு வஞ்சகத்தை மறைத்து வாழ்வோர் குறித்துத்தான் ஒளவையார் கூறுகிறார். எனவே, இது பொருந்தாது.
நாம் யாரையும் இழிவு படுத்த வேண்டா.
நாமும் இழிவு படுத்தலுக்கு உள்ளாக வேண்டா.
00
- இழுதுமீன் வெருளி Medousaphobia / Scyphophobia / Cnidarophobia
இழுதுமீன்குறித்த அளவுகடந்த பேரச்சம் இழுதுமீன் வெருளி.
scyphozoa என்பது இழுதுமீனின் அறிவியல் பெயர். skyphos என்னும் கிரேக்கச்சொல், (குடி)கிண்ணத்தையும் அவ்வடிவில் உள்ள உயிரினத்தையும் குறிக்கிறது.
எரிச்சல் ஊட்டுகிற என்னும் பொருள் தரும் knide என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து cnidaria உருவானது.
00
- இழுவைப் பெட்டி வெருளி – Cistulaphobia
இழுவைப் பெட்டி குறித்த வரம்பற்ற பேரச்சம் இழுவைப் பெட்டி வெருளி.
cistula என்னும் இத்தீன் சொல்லின் பொருள் பெட்டி/பேழை/சிற்றறை. அலமாரி எனப்படும் பேழையின் ஓர் அறை அல்லது இழுவை அறையைக் குறிக்கிறது.
பொதுவாக இது சிறாருக்கே மிகுதியாக வருகிறது. பெரியவருக்கும் அரிதாக வருகிறது.
00
- இழுவை வெருளி – Tuochephobia
இழுவை வண்டி(tow truck) தொடர்பான மிகையான பேரச்சம் இழுவை வெருளி.
சாலையில் பழுதடைந்த வண்டிகளை இழுத்துச் செல்லும் இழுவை வண்டி மீட்புந்து (wrecker), பழுதுகால வண்டி (breakdown truck), மீட்பு ஊர்தி (recovery vehicle) என்றெல்லாம் அழைக்கப் பெறுகின்றது.
00
- இளந்தை வெருளி-Hebephobia
இளம் அகவையர் – இளந்தைப்பருவத்தினர் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இளந்தை வெருளி.
சிறார் வெருளி (paedophobia) , பதினகவையர்வெருளி(Ephebiphobia) போன்றதுதான் இதுவும்.
இளந்தைப் பருவத்தினர் மீதான போதிய புரிதலற்ற, துல்லியமற்ற, மிகைப்படுதுதப்பட்ட, பரபரப்பான எண்ணங்களே அவர்கள் மீதான வெருளிக்குக் காரணமாகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்ற கவலையும் எரிச்சலும் வெறுப்பாக மாறி வெருளியை உருவாக்குகிறது.
முதலில் 1994இல் கிருகன் அசுத்திரோத்து (Kirk Astroth) என்பவரால் இச்சொல்(ephebiphobia) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்துப்பட்டது. பின்னர், குமுகவியலாளர், இளைஞர் நல அமைப்புகள், அரசு முகவாண்மைகள் இச்சொல்லைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்களாயின் விடலைப் பருவத்தினர், சிறுமியராயின் பெதும்பைப் பருவத்தினர் குறித்த வெருளி இது. தனித்தனியாகக் குறிக்காமல் பொதுவான இளந்தைப் பருவத்தினர் என்ற அடிப்படையில் இளந்தை வெருளி எனப்படுகிறது.
Ephebi என்னும் சொல்லிற்கு இளம்பருவம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5







Leave a Reply