வெருளி நோய்கள் 694-698: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 689-693 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 694-698
694. கவர்மகர வெருளி – Zestorhodophobia
கவர்மகர நிறம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கவர்மகர வெருளி.
மகரநிற வெருளி அந்நிறத்தின் எல்லாச் சாயையும்() கொண்டிருக்கும். ஆனால், கவர்மகர வெருளி அதிலிருந்து மாறுபட்டது. எழுச்சியூட்டும் நிறமாகப் பிறரைக் கவர்வதாக அமைவது.
zesto என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கவர்ச்சியான என்று பொருள். rhodophobia என்பது மகர நிற வெருளி.
00
695. கவலை வெருளி – Anisychiaphobia
கவலை குறித்த வரம்பற்ற பேரச்சம் கவலை வெருளி.
“ஒருநாள் கவலை என்பது ஒரு மாதம் முழுவதும் நாம் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட நீளமாக அமைந்து விடுகிறது” என்பது சீனப் பழமொழியாகும்.
“ஒருநாள் நாம் கவலைப்பட்டால் கூட அந்தக் கவலையானது நம் மனத்தை ‘அமிலம் போல அரித்து, நீங்காத வடுவை ஏற்படுத்திக், காலமெல்லாம் நினைக்கச் செய்துவிடுகிறது” ஆதலின் கவலைப்படாமல் எதையும் எதிர் நோக்க வேண்டும்.
கவலை (Sadness) என்பது தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய். என்பர். உறுதியின்மை. பேரிடரைச் சந்திக்கும் சூழல். இழப்பு உதவி கிடைக்காமை வெற்றி பெறாமை தோல்வி போன்றவற்றைச் சந்திக்கும்போது நேரிடும் உணர்ச்சிதான் கவலை.
கவலை என்பது கவலைகளுக்குத் தீர்வோ மருந்தோ கிடையாது. இருப்பினும் பலர், கவலை இல்லையே என்று கவலைப் படுபவர்கள்போல் எதற்கெடுத்தாலும் கவலைப்படுகின்றனர். கவலைதான் மனச்சோர்வு போன்ற பலவற்றிற்கும் அடிப்படையாய் அமைகிறது. பிள்ளைகள் கவலைப்படுவதாகத் தவறாக எண்ணிப் பெற்றோரும் அல்லது ஒரு சாரார் கவலைப்படுவதாகத் தவறாக அஞ்சி மறு சாராரும் கவலை குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
கவலையின் விளைவுகள், அது தரும் நோய்கள் முதலியவற்றைப் படிப்போர் அல்லது கேட்போர் தங்களுக்கும் அந்நோய்கள் உள்ளதாக எண்ணிக் கவலைப்படுவர்.
Anisychia என்னும் கிரேக்கச்சொல்லிற்குக் கவலை என்று பொருள்.
00
696. கவனக்குறைவு வெருளி-Aydehadophobia
கவனக்குறை மிகைச் செயல் கோளாறு(ADHD; Attention deficit hyperactivity disorder) தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் கவனக்குறைவு வெருளி.
கவனக்குறைவு பல நோய்களுக்குக் காரணமாக அமைவதை எண்ணிக் கவனக்குறைவு குறித்து அளவற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
697. கவை வெருளி – Occupatophobia
தொலைபேசி கவையாக – பயன்நிலையில் – உள்ளதைக் குறிப்பது கவை வெருளி.
தொலைபேசி அல்லது அலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொழுது வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பயன்பாட்டு நிலையில் இருப்பது குறித்துத அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Busy என்று சொல்வதை நாம், பயன்பாடு, செயல், மும்முரம், சுறுசுறுப்பு எனப் பலவகைகளில் குறிப்பிடுகின்றோம். வேறு பயனில் இருப்பதைக் குறிப்பதற்குக் கவை என்பது ஏற்ற சொல்லாகும்.
இதனைப் புதுச்சொல் என்றோ பயன்பாட்டில் இல்லாத சொல் என்றோ கருதக் கூடாது. இப்பொழுதும் பயனற்றவன், பயனற்றது என்று குறிக்க நாம், கவைக்குதவாதன், கவைக்குதவாதது என்கிறோம். நாம் பேசும் பொழுது வேறு பயன்பாட்டில் உள்ளது என்பதை நாம் கவை என்றே குறிக்கலாம்.
00
698. கழி வெருளி-Polonophobia(1)
கழி தொடர்பானவற்றின் மீது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கழி வெருளி எனப்படும்.
வீட்டுப்பயன்பாட்டிற்கு உள்ள கழி, கம்பு, மூங்கில் முதலானவை கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.கழியைக் கொண்டு பிறர் தாக்குவார்களோ என்ற தேவையற்ற அச்சம், கழி முதலானவற்றைப் பிறர் பயன்படுத்தும் பொழுது மேலே பட்டுக் காயம்படுமோ என்ற தேவையற்ற அச்சம், அவற்றால் பணிகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படுமோ என்ற பேரச்சம் என இத்தகையோர் இவற்றைப்பார்த்தால் அச்சத்தில் மூழ்குவர்.
காண்க : போலிய வெருளி – Polonophobia
போலியநாட்டினரையும் Polo என்பது கொண்டு குறிப்பதால் போலிய நாட்டினர் வெருளி என்பதற்கும் Polonophobia என்றே சொல்கின்றனர். பயன்படும் இடத்திற்கேற்ப நாம் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply