மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!

ஒருதலைக்காதலால் அல்லது ஒருதலை விருப்பத்தால் கொலைகள் பல பெருகி வருகின்றன.  காதலுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் காதலுக்காக மற்றவரின் உயிரை எடுக்கலாமா? எனக்குக் கிடைக்காத பெண் அல்லது சிறுபான்மை ஆண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசைப்படும் பொருளாகக் கருதி, மறு தரப்பாரை கழுத்தை அறுத்துக் கொல்வது, எரித்துக் கொல்வது, வேறு வகையில் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றிச் சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெருகி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். இவற்றைத் தடுக்க வேண்டுமென்றால் இருபாலருக்கும் மனப் பக்குவம் அளிக்கும் வகையில் கல்வி முறை இருக்க வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து இளைஞர்களைக் கொள்ளை கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்  சிறுவர் சிறுமியர், இருபால் இளைஞர்கள் எளிதில் தீய பாதைக்குச் செல்கின்றனர். கல்விக்கூடம் செல்வதே மறுபாலினருடன் ‘மகிழ்ச்சி’யாக இருப்பதற்குத்தான் என்ற தவறான எண்ணத்திற்கும் வந்து விடுகின்றனர்.

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கடந்த வாரம் பேசும் பொழுது ஒரு கருத்தைத் தெரிவித்தார். அவர் கருத்து மட்டுமல்ல அது. பலரும் அவ்வாறுதான் கூறுகின்றனர். “சிற்றூரைச் சேர்ந்த ஏழைப்பெண் நன்கு படிப்பாள் என்ற எதிர்பார்ப்பில் இடம் கொடுத்தேன். நன்கு படிக்கும் மற்றொரு பையனைச் சுற்றிச் சுற்றி வந்து அவன் படிப்பையும் கெடுக்கிறாள். இவள் மட்டுமல்ல, படிக்கும் எல்லாப் பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆண்களில் சிலர் இப்படி இருந்தாலும் பலர் பெண்களால் இப்படி மாறி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஆண்களைச் சமாளிப்பது எப்படி என்று கவலைப்பட்டோம். இப்பொழுது பெண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டி யுள்ளது. இவர்களைக் கல்வியின்பால் திசை திருப்ப என்ன செய்ய வேண்டும்” என்றார். (மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் மாணாக்கர்களே பங்கேற்கும் கருத்தரங்கம், உரையரங்கம், கட்டுரை எழுதுதல், இலக்கியப்போட்டிகளில் ஈடுபடச் செய்தல், விழாக்கள், நிகழ்ச்சிகளில் பொறுப்புகள் அளித்தல் என அவர்கள் கவனத்தைத் திருப்ப வேண்டினேன்.) பெண்களைக் குறை கூறுவதாக எண்ண வேண்டா. பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் ஆண்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவது, தோளிலும் தொடையிலும் தட்டிப் பேசுவது, படங்களைப் பார்த்து உரிமையுடன் பேசுவதாகக் கருதி, வாடா, போடா என்றெல்லாம் பேசுவது போன்ற காட்சிகளை அனைவருமே காணலாம். இவ்வாறு பெண்கள் பழகும் போது, பெரும்பாலோருக்கு உள்ளெண்ணம் வேறு இல்லாமல் இருக்கலாம். உடன் பழகும் ஆண், அவள் தன்னை விழுந்து விழுந்து காதலிப்பதாக எண்ணி ஆசையை வளர்த்துக் கொள்கின்றான். அவ்வாறு இல்லை என்னும் நிலை வரும்பொழுது அவளை அடைய வேண்டும் என வெறியாக அலைகிறான். அடைந்தாள் அவளை அடைய வேண்டும்.இல்லையேல் மரணத்தை அவள் அடைய வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்பச் செயல்படுகிறான்.

சில நேரங்களில் இத்தகைய காட்சிகளைப் பார்க்கும் பிறர் பழகியிராவிட்டாலும் எளிதில் பழகலாம் எனக் கருதித் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கின்றனர். ஆனால், மறு தரப்பு மறுக்கும்போது, “அவன்/அவள் மட்டும் இனிக்கிறானா/இனிக்கிறாளா? நான் என்ன குறைச்சல்” என்று கருதி, அமிலத்தை முகத்தில் ஊற்றுவது, கொலை செய்வது அல்லது இவைபோன்ற பெரும் ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறான்/ஈடுபடுகிறாள்.

பெண்கள்தானே அதிகம் கொலை செய்யப்படுகிறார்கள். அவ்வாறு இருக்க ஆண்களும் பாதிக்கப்படுவதுபோல் எழுதுவது ஏன் எனச் சிலர் எண்ணலாம். ஆண்களும் சில நேரங்களில் சிறுபான்மை பாதிக்கப்டுகின்றனர். ஆனால் கதைப்படங்களில், பெண் ஆணை அடைய எல்லா வகைக் குறுக்குவழிகளிலும்  ஈடுபடுவதையும் கடத்தல், மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொலை முயற்சியிலும் இறங்குவதையும் பார்க்கிறோம் .அடுத்த நிலை இதுவே மாறி, ஆண்களும் கொல்லப்படுவது பெருகும். முன் எச்சரிக்கையாக இதனைக் கூற வேண்டியுள்ளது.

படிக்க வருவதற்கே காதலிப்பதற்குத்தான் என்று கல்வி நிலையம் வருபவர்கள் மன நிலையை மாற்ற வேண்டும். காதலித்துக் கடிமணம் புரிவதுதானே தமிழர் நெறி. அவ்வாறு இருக்கக் காதலை எதிர்ப்பானேன் என்பர் சிலர். இக்கால இளைஞர்கள் காதல் என்று எண்ணிக் கொண்டு ஆரவார ஈர்ப்பால்தான் இணைகின்றனர். எனவேதான், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்தவர்களைவிடக் காதல் மணம் செய்கிறவர்கள் மண விலக்கு பெறுவது பெருகி வருகிறது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்தபின்னர் அவரிடம் குறை காண நேரிட்டால் திருத்தியும் பொறுத்தும் வாழ எண்ணுவதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும். அவ்வாறில்லாமல் விலகிச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கினால் எப்படி அது காதலாகும். விளம்பரப் புகழ் கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் காதலித்து மறுமணம் புரிவதைக் கேட்கும், பார்க்கும் பிறர் இதனை எளிய வாழ்க்கை முறையாகக் கொள்கின்றனர்.

பத்தாண்டுகள் காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் பத்தே நாளில்  பிரிவதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் பத்தாண்டுகள் காதலில் திளைத்து என்ன பயன்? காதலால் மற்றவரைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்க்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

பழந்தமிழர்கள் காதலித்தார்கள். ஆனால் காதல் கைகூடாத நேர்வு வரின் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்களே யன்றிப் பிறரை அல்ல. காதலுக்குப் பெற்றோர் குறுக்கே வந்தால் மடல் ஊர்வதாகக் கூறி அவர்கள் மனத்தை மாற்றினார்கள். ஆண் காதலைப் பெண் ஏற்காவிட்டால், காதலிக்குத் தீங்கு விளைவிக்க வில்லை. மாறாக மடலேறித் தன்னைத்தானே வருத்தித் தன் காதலை ஊருக்கு வெளிப்படுத்தி, அப்பெண்ணைத் திரும்ணம் செய்விக்க வேண்டினார்கள்.

மடல் என்பது பனை மடலைக் குறிக்கும். பனை மடலால் செய்த குதிரையில் பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவித்து, காதல் வயப்பட்டவன் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு கையில் காதலிப்பவளின் ஓவியம் வரைந்த துணிக்கொடியை வைத்துக் கொண்டு, நாற்சந்தியில் மழை வெயில் காற்றைப் பொருட்படுத்தாமல் நின்று அல்லது ஊர்ந்து தன் காதலை வெளிப்படுத்துவது. பனை மடல் உடலை வருத்தும். இவ்வாறு தன்னை வருத்திக் கொண்டு காதலிப்பவளிடம் தன் உணர்வை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இப்பொழுது “காதலி இல்லையேல் சாவு நீ” என்று சொல்லி மிரட்டிக் காதலைப் பெற முயலுகிறார்கள். அப்படியும் வெற்றி காணாவிட்டால் தண்டவாளத்தில் தள்ளியோ அமிலம் வீசியோ வேறுவகையிலோ காதலியைக் கொல்லவோ சிதைக்கவோ முயலுகிறார்கள். இதைப்போய்த் தமிழர் நெறி என்று சொல்வதா?

தன்னைத் துன்புறுத்திக் கொண்டு தன் காதல் உணர்வை வெளிப்படுத்தும் பண்டைய பண்பு எங்கே! காதலிக்காதவரைத் துன்புறுத்தி மிரட்டிக்காதலுக்கு அடிபணியச் செய்யும் இன்றைய மோதல் உணர்வு எங்கே? காதலுக்காகத் தன் உயிரையே கொடுக்க முன்வந்த பண்டைய பண்பு எங்கே! நிறைவேறாக்காதலுக்காக காதலித்தவரின் உயிரையே பறிக்கும் இன்றைய  கொடுஉணர்வு எங்கே? இவை ஒன்றாக முடியுமா?

திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் நாடகங்களும் மக்களுக்கு அறிவூட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இஃது எங்கள் வேலையல்ல. பொழுதுபோக்கிற்கு உதவிப் பணம் சம்பாதிப்பதுதான் எங்கள் நோக்கம்  என்பர். நாம் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பொழுதுபோக்கு என்று சொல்லிக் காதலறத்தைச் சிதைத்து வளரும் தலைமுறையினரின் வாழ்வை அழிப்பதை ஒத்துக்கொள்ள முடியாது. உலகில் நடப்பதைத்தான் காட்டுகிறோம் திரைப்படங்களைப் பார்த்துத்தான் கெட்டுப் போகிறார்களா என்பர் சிலர். அதுவும் தவறுதான். சிறுபான்மை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பெரும்பான்மையாக்குவது சிறு, பெரு திரைப்படங்கள்தாம். என்னைக் காதலிக்காவிட்டால் பழி வாங்குவேன் என்று சொல்வதோ அவ்வாறு பழி வாங்குவதோ படங்களில் இடம் பெறக்கூடாது. இத்தகைய படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதையெல்லாம் கருத்துரிமை என்று அனுமதிக்கக் கூடாது. தொடக்கத்தில் தொடர்புடைய உருவாக்குநர், இயக்குநர் பிற கலைஞர்களுக்கு விழிப்புணர்வை வருவிக்கும் வகையில் இத்தகைய படங்களுக்கு வரிச்சலுகையோ பரிசோ, இவற்றில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும் படத்திற்கும் விருதுகளோ அளிக்க முடியாது என்பதை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பரவலாக இத்தகைய படங்கள் இல்லாமல் குறைந்து போகும்போது மாணவக்காதல்  கதைகளுக்கும் படங்களுக்கும் தடையும் விதிக்க வேண்டும்.

இணைய வழிச் சூதாட்டத்தைத் தடை செய்த அரசு

மாணவப்பருவக் காதல் படங்களையும் தடை செய்ய முன் வரும் என எதிர்பார்ப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை ஐப்பசி 09, 2053 / 26.10.2022