(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி)

          கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன்

இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி

சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக்

கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்         

          பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி     5

          மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள்

எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்;

தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி

வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்  

          கொள்ளா தொழியேன் என்றுளங் கொளீஇச்  10

          செல்லா நின்றனன்; சென்றவன் ஒருநாள்       

          சண்டிலி தன்பாற் சார்ந்தனன் குறுகிக்

கண்டினை நிகரிசை கைவல பூங்கொடி

விண்டுரை யாடிய வெந்துயர்க் கொடுமொழி         

          தண்டா துரைத்துத் `தையாஅல் அவள்மணங் 15

          கொண்டா லன்றிக் கொண்டுயிர் வாழேன்;

சிறுமகள் அவளுழைச் செலீஇய என்னுளம்

பெறுவழி யறியாது பேதுறு வேனைக்

காத்தல் நின்கடன், கடிமணங் கொள்ளப்       

          பூத்தநல் லிளங்கொடி புந்தியை மாற்றி 20

          என்பாற் படுத்’தென இரந்துரை கூறினன்;      

          `பெண்பாற் குழலும் பெரியோய்! திருமணம் 

வன்பாற் பெறுதல் வரன்முறை யன்றே!

ஆசை யரும்பா அரிவையின் நெஞ்சில் 

          பேசிய காதற் பெருங்கனி பறிக்கக்        25

          கூசினை யல்லை, கொடுமதி விடுமதி;

பாலுணர் வகற்றிய பாவையின் நல்லுளம்

காலள வேனும் கருத்திற் கொண்டிலை,

விழையா ஒருத்தியை விழையா நின்றனை,  

          பிழையாம் அதனைப் பேணி அகன்றிலை,     30

          கிட்டா தாயின் வெட்டென மறத்தலைக்

கற்றா யலைநீ, காளைப் பருவம்

பெற்றாய் அதன்மனம் பெற்றாய் கொல்லோ?

பாலையில் தண்புனல் பருகிட முனைந்தனை,        

          காலையை இரவெனக் கருதி அலைந்தனை,   35

          கொல்லும் காமத்துக் கோட்படா தொழிமதி,

அல்லும் பகலும் அரும்பெரும் பணியில்

செல்லும் மகளின் செந்நெறிப் புகுந்து

செல்லல் விளைத்திடல் தீதினும் தீது’என        

          நல்லறி வுறுத்தினள் நங்கைஅச் சண்டிலி;       40

—————————————————————

          பொறாஅ – பொறுக்காத, மறாஅ – மறுக்காத, எனாஅ – என்று, கொளீஇ – கொண்டு, தையாஅல் – சண்டிலியே, செலீஇய – சென்ற.

000