(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி)

          கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட்

டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக்

கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன்,

`காவயிம் வல்லான் கற்பனை தூண்டும்

          ஓவியம் என்ன உருவம் உடையள், 45

          பாலும் பழமும் பஞ்சணை மலரும்

நாலும் விழையும் நல்லிளம் பருவம்,

வேலும் வாளும் மானும் விழியள்,

காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள்        

          வாமக் காளையர் வழிபடு தெய்வம்,       50

இதற்கு நலத்தள் எழில்வளர் பூங்கொடி

எட்டுணை யேனும் எண்ணிலள் காமம்,

பெட்டவர் பலராய்ப் பெருகினும், இவளோ

விட்டனள் காமம், இவள்செயல் வியப்பே!       

          பலரொடு கலந்தும் பொதுநலம் புரிந்தும்        55

          அலையும் இம்மகள் ஆசை துறந்தனள்,

நிலையும் திறம்பிலள், நினைப்பரும் வியப்பே!’

என்றுளம் வியந்தனன் ஏகுவோன் மனத்துச்   

          சுடுநெருப் பாகிச் சுடர்விடு காமம்        

          படர்ந்து விரிந்த பான்மை போலச் 60

          செக்கர் படர்ந்து சிறந்தது வானில்;

வெட்கி மூளும் விடலையின் விரிமுகம்

செக்கச் சிவந்து தெளிவிழந் ததுபோல்

மேலைத் திசையில் மெல்லெனச் செல்லும்    

          மாலைக் கதிரவன் மறைமுகங் காட்டினன்;    65

          மாமலர்ப் பூங்கொடி மையலைப் பெறாஅக்

காம வேகங் கடுகித் தாக்குறத்

துடிதுடித் தாடும் நெஞ்சகம் போலக்

கடிதடித் தேகும் கடுங்கால் மோதலின்  

          படபடத் தாடின பைந்தளிர்ப் பரப்பு;       70

          கூந்தலைப் பல்வகைக் கோலஞ் செய்தும்,

மாந்தளிர் மேனியில் மணியணி பூண்டும்,

கண்ணும் புருவமும் கருமை தீட்டியும்,

வண்ண ஆடைகள் வகைவகை உடுத்தும்,     

          ஒப்பனை முடித்த ஒண்டொடி மகளிர்    75

          கப்பிய காதற் கணவரொடு கூடி

மலர்வனம் புகூஉம் மனங்கவர் காட்சி 

—————————————————————

          செல்லல் – துன்பம், வாமம் – இளமை.

          எட்டுணை – எவ்வளவு, திறம்பிலள் – மாறுபட்டிலள், செக்கர் – சிவப்பு, பெறாஅ – பெறாத, கப்பிய – நிறைந்த.

+++

(தொடரும்)