கவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை.
சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர், இவரின் பெற்றோர்.
சிறு அகவையிலேயே பெரிய வாசகரானவர் தமிழ்நாடன். ஆண்டுக்கு ஆயிரம் நூல்களைப் படித்திருக்கிறார். இவர் பள்ளி செல்லும் வழியில்தான் அவ்வூரின் திராவிடர் கழக அலுவலகம் அமைந்திருந்தது. அங்கு வரும் ‘விடுதலை’ செய்தித்தாளைப் படித்து விட்டுதான் பள்ளிக்குச் செல்வார். அப்போது அவருக்கு அகவை 10. “அவன்கிட்ட முதலில் கொடுங்கள். படித்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும்” என்று கூறிப் பெரியவர்கள் இவரின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியிருக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மலரில் வெளியான கவிதைதான் அச்சில் வந்த முதல் படைப்பு. அப்போதே தமிழ்நாடன் என்ற பெயரில்தான் எழுதியிருக்கிறார்.
பள்ளிப் பதிவேடுகளில் பெயரை மாற்ற விரும்பியும் இவரின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காமையால் சுப்பிரமணியன் என்ற பெயரில்தான் ஓய்வூதியம் பெற்றுள்ளார்.
கடந்த 1960இல் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வேளாண் துறையில் ஓர் ஆண்டு பணி, அது பிடிக்காமல் ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்ற முயற்சித்தபோது இவர் மார்க்சியவாதி என்ற காரணத்திற்காக பணிவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.
பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் திராவிட இயக்கங்கள் மீது விமர்சனத்தைக் கூறவும் தயங்காதவர். திராவிடக் கட்சிகள் தமிழ் இலக்கியத்தைப் பரப்புரைக்குக் கையில் எடுத்துக் கொண்டன. ஆனால் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுத்தனவா என்றால் இல்லை என்று கூறிய தமிழ்நாடன், கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரியாரின் வழித்தோன்றலாகவே திகழ்ந்தார்.
கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்ற கருத்துடையவர் வானம்பாடி இயக்கத்தை உருவாக்கியதில் ஒருவர். வானம்பாடி கவிஞராக அறியப்பட்டவர்.
எழுபதுகளில் மார்க்சிய கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ‘மாவோ ‘என்ற பெயரைச் சொன்னாலே முதுகெலும்பை முறிக்கிற சூழல் நிலவிய ஒரு காலக் கட்டத்தில் மாவோவின் கவிதைகளை மொழிபெயர்த்தவர் தமிழ்நாடன்.
சேலத்தில் கல்வி அலுவலராகப் பணியாற்றிய ‘அனந்த பல்ப்’ என்பவருடன் நட்பு ஏற்பட, அவரிடம் மாவோ பற்றிய புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் நம்பூதிரிபாட்டை (அப்போதைய கேரள முதல்வர்) பார்க்கச் சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார் (அனந்தப் பல்ப்பும் நம்பூதிரிபாட்டும் நண்பர்கள்). தமிழ்நாடன் நம்பூதிரிபாட்டைச் சந்திக்கச் சென்றபோது அவரின் நூலகத்தைத் திறந்து விட்டு “என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்” என்றாராம்.
தமிழ்நாடனின் மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத் தகுந்தது “மனுதருமம்’ ஆகும். நாம் எவ்வாறு அடக்கி ஆளப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மனுதருமத்தை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.
“அம்மா அம்மா’ என்ற இவரது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டைப் பற்றியது. நூல் வெளிவந்த போது மிகுந்த வரவேற்பினையும் பாராட்டையும் பெற்ற படைப்பு.
தமிழ்நாடன் கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை மட்டுமன்று பொதுவுடைமைப் போராளிகளுக்கு வலுச் சேர்ப்பவையாகவும் அமைந்துள்ளன.
“மண்ணின் மாண்பு’ நூலிலுள்ள கவிதைகளைப் போராட்ட காலங்களில் சுவர் எழுத்தாகப் பயன்படுத்தியுள்ளனர் தோழர்கள். அதனால் காவல் துறை நெருக்கடிகளைச் சந்தித்தவர் கவிஞர் தமிழ்நாடன். அதனால் ஏற்பட்ட மனச் சோர்வினால் இலக்கியத்திலிருந்து சற்று காலம் விலகி உள்ளூர் வரலாறுகளை ஆய்வு செய்யத் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை நண்பர்களோடு இணைந்து வெளியிட்டவர். சேலம் மாவட்டத்தைப் பற்றி மூன்று ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசனின் “குமரகுருபரன்’ நூலின் கையெழுத்துப் படியைப் பழைய புத்தகக் கடையில்கண்டு பிடித்து பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அதனை நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூல் பெங்களூர் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சேலத்தின் பழமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் 1973ஆம் ஆண்டு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் எழுத்தாளர் ஓவியர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் சேலத்தில் அருங்காட்சியகம் தொடங்கினார்.
இதுதான் இந்திய அளவில் மக்களால் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம். மேலும் இந்த அமைப்பின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகள் நடத்தியதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் வெளியிட்டுள்ளனர். இன்றும் இவ்வமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சியும் அளித்து வருகின்றனர். முப்பத்தைந்து ஆண்டுக்காலம் ஆசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடன் நம் தமிழ்நாட்டு கல்வித்துறை மீதும் பள்ளிப் பாடநூல்கள் குறித்தும் கவனிக்கத்தக்க விமர்சனங்களை வல்லினம் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடனின் ‘சாரா’ நாவல் ஒரு புதிய மாதிரியில் எழுதப்பட்டது. “சாரா நாவல் உலக அளவில் அங்குமிங்கும் விரிந்து செல்கிறது. தமிழில் உலகளவில் விரிந்த பரப்பைத் தனக்குள் கொண்டுள்ள நாவல் என்று இதைத்தான் சொல்லமுடியும். பல்வேறு வரலாற்று
நிகழ்ச்சிகள், அனுபவங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் எப்படி ஒழித்துக் கொல்லப்பட்டார்கள், நியூயார்க் ஆர்லெம் சேரியில் நடந்த கலவரம் எவ்வளவு பிரம்மாண்டமானது.
அரபு மக்களின் புரட்சிகரப் போராட்டம், தமிழகத்தின் அரசியல், திராவிடர் இயக்கம், சோவியத் புரட்சி, இலெனின் காலம் என்றெல்லாம் பலதிசை வரலாற்று அனுபவங்கள் நாவலுக்குள் வந்திருக்கின்றன. தமிழகத்து இளைஞர்கள் இப்படிச் சில வரலாற்று அனுபவங்களை இந்த நாவல் மூல மேனும் கற்றுக் கொள்ள முடியும்” என்பார் கோவை ஞானி.
தமிழ்நாடனின் “சேலம் திருமணிமுத்தாறு’ என்ற நூல், ஓர் ஆற்றைப் பற்றி கூறுவதற்கு இவ்வளவு தகவல்களா என்ற வியப்பில் ஆழ்த்துகிறது. பல்வேறு வரலாற்றுச் சான்றாதாரங் களையும் நூலோடு இணைத்து அளித்திருப்பது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
தமிழின் முதல் அச்சு நூலையும் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியவர் தமிழ்நாடன்தான். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் என்ற நூல் 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமியின் வரலாற்றைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் “சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள், விசாரங்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, மொழி பெயர்ப்பு, ஓவியம் எனப் பல தளங்களில் சிறப்பாக இயங்கும் பன்முக ஆளுமை கொண்ட தமிழ்நாடன் படைப்புகள் காலத்தால் அழியாதவை.

இரத்தின புகழேந்தி

– தொடர்புக்கு rathinapugazhendi@gmail.com

நன்றி :தமிழ் இந்து

+++++++++++++++++++++

வானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன்

[சேலம் தமிழ்நாடன் 09.11.2013 அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார்.]
1941 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஒன்றாம் நாள் இருசாயி (எ) கமலபூபதி அம்மையாருக்கும் ஆறுமுகம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர் சேலம் தமிழ்நாடன். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தொடக்க, உயர்நிலைப் பள்ளி வகுப்புக் கல்வியைச் சேலத்தில் படித்தவர்.

1959 இல் சேலம் கல்லூரியில் படித்தவர். 1962 இல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.17.09.1964 இல் ஆசிரியர் பணியில் இணைந்தார். இக்காலகட்டங்களில் கவிதை எழுதத் தொடங்கியவர். இதே காலக்கட்டத்தில் தமிழர் தந்தை ஆதித்தனார் தொடர்பு ஏற்பட்டது.

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

1966 இல் எழுத்து சி.சு. செல்லப்பா அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. 1968 இல் கலைவாணி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். ஒரு மகனும்(மறைவு), ஒரு மகளும் மக்கட் செல்வங்களாக வாய்த்தனர்.

1972 இல் புதுக்கவிதைக்கான வானம்பாடிக் கவிஞராக அறிமுகம் ஆனார். 1985 இல் ‘சேலத்துச் செம்மல்’ விருது பெற்றவர்.

1995 இல் ‘திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது’ பெற்றவர். ‘சாகித்திய அகாதமி விருது’ இவரின் ஒரிய கவிதை நூல் மொழி பெயர்ப்பிற்காகப் பெற்றவர். 30.06.1999 இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தமிழ்நாடன் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இவர் ஓர் அறிஞர் – கலைஞர் – ஓவியர் – சிற்பக் கலைஞர் – தோல் சிற்பக் கலைஞர் – நாட்டார் சொல் கவிதை வழக்கு கலை இலக்கியப் படைப்பாளி – தமிழர் பண்பாட்டு நாகரிகத் தொன்மை விளக்கப் படைப்புகளை ஏராளமாக படைத்திருக்கிறார் – அல்லும் பகலும் ஆய்வுகளிலேயே நேரத்தைச் செலவிடுபவர் – சேலத்தின் தொன்மைச் சிறப்பை – அருங்காட்சியகத்தைவிட அதிகமான செய்திகளை நினைவில் நிறுத்தி பகிரக்கூடியவர்.

எழுபத்து இரண்டாம் அகவையில் இயற்கை எய்திய சேலம் தமிழ்நாடன் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி எழுத்தாளராக, ஓவியராக, கவிஞராகப் பன்முகத் தன்மையுடன் தமிழுலகில் அறியப்பட்டவர். தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்.

கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர். பாவேந்தரின் குமரகுருபரர் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000). சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர். தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர்.

(1995). தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் சிறப்பு வெளியீடாக வந்து தமிழ்மக்களின் மதிப்பினைப் பெற்ற நூல். கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980).

கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுநர். அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர். தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்.

கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர், பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர், புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர், கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.

செ.இராசுவுடன் இணைந்து பணியாற்றியவர், சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்

சேலம் தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)

வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் (பரமத்தி வேலூர்) (1995)

பரமத்தி அப்பாவு (1800 இல்)வெள்ளையரை எதிர்த்த வீரையன் வரலாறு)

சேலம் : கலையும் இலக்கியமும் (1995)

சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)

கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர்,

ஈரோடு (2009) 2000 yeas of Salem (1976)

The Story of India Indra 1975

அன்புள்ளம் அருணாசலம் 2005

சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள் :
South Indian Studies (1981)

சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)

தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)

தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)

தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)

கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

அண்மையப் படைப்பு – “அல்குல்” – காவ்யா வெளியீடு – கரிசல் கதைசொல்லி கி.ரா.வின் முன்னுரையோடு அமைந்த நூல். அருமையான வெளிப்பாடு – இதன் பதிவுக்குச் சங்க இலக்கியம் – மேலை நாட்டு மொழி அறிஞர்களின் மனப்பதிவுகள் – எடுத்துக்காட்டுகள் – இடுகுறிகள் என ஒரு சங்க இலக்கிய திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதி இருக்கிறார்.

முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/2013/11/blog-post_9.html