இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 5 – மறைமலை இலக்குவனார்
பேராசிரியர் இலக்குவனார் காலத்தில் கிடைத்த சான்றுகளைக் காட்டிலும் மிகுதியான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன. சிந்துவெளி எழுத்துகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மண்பாண்டச் சில்லுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை வலியுறுத்துகின்றன. நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கற்கோடரியில் தமிழ் எழுத்துகள் காணப்படுவதாகக் கிடைத்த செய்தி தமிழ் எழுத்துகளின் தொன்மையையும் பழந்தமிழரின் கல்வியறிவையும் பாருக்குப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.
புதிய கற்காலத்திலேயே தமிழர்க்குத் தனித்த எழுத்துமுறை இருந்தது என்னும் செய்தி இந்தியாவில் தொன்மைவாய்ந்த எழுத்துமுறை தமிழருடையதே என்பதையும் கடன் கொடுக்கும் உயர்நிலையிலேயே தமிழ் இருந்தமையையும் வலியுறுத்துகிறது.
‘இன்று இந்தியர் நாகரிகம் என்று அழைக்கப்படுவதில் பெரும்பகுதி பழந்தமிழர் நாகரிகமேயாகும்’ (மே.ப. ப.210) என்னும் பேராசிரியரின் முடிபு உண்மை; வெறும் புகழ்ச்சியன்று.
தமிழ்மொழியின் எழுத்துமுறை, இலக்கியவளம், சொல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பேராசிரியர் இலக்குவனார் பழந்தமிழ் மாட்சியையும் தமிழர்தம்நாகரிகத் தொன்மையையும் பற்றிய தரவுகளைத் தொகுத்துரைக்கிறார். காலப் போக்கில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் அவரது கூற்றை வலியுறுத்தும் வகையில் விளங்குவது குறிப்பிடத் தக்கதாகும்.
செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் பேராசிரியர் இலக்குவனார், ‘பழந்தமிழ்” – ஆய்வுநூலில் “செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும்” என்கிறார். அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக்கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார். தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி அவர் விடுத்த அறிக்கையில், மலைகளில் மாணப்பெரியது இமயமலை என்பது போன்றும் இந்து சமயம் இந்தியாவின் மிகப் பெரும் சமயம் என்பதுபோன்றும் ‘தமிழ் செம்மொழி’ என்பது வெளிப்படையான உண்மை என்பதைச் சுட்டிக் காட்டியதுடன் இதற்காக ஒரு வேண்டுகோளோ போராட்டமோ தேவைப்படுவது அரசியற்சூழலையே காட்டுகிறது என அவர் வருத்ததுடன் தெரிவித்தார். செம்மொழித் தகுதிப்பேறு வழங்குதற்குத் தேவையான பண்புகளாக இந்திய அரசு அமைத்த வல்லுநர் குழு பின்வருவனவற்றை வலியுறுத்தியது. மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டு வழிமுறை உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள். அம்மொழிக்கே உரியதாகவும் , மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கிய வழிமுறை இந்த அளவைகள் பின்னர் நெகிழ்ச்சியுற்றதையே நடைமுறைகள் காட்டுகின்றன. தெலுங்கு மொழிக்கும் கன்னட மொழிக்கும் செம்மொழிப் பீடத்தில் அரியணைகள் வழங்கப்பெறுதற்கே இத்தகைய தளர்வுகளும் தடுமாற்றமும் தோன்றின. எனினும் அவை குறித்த ஆய்வு இக் கட்டுரையின் நோக்கிற்குட்பட்டதன்று. செம்மொழித் தகுதிப்பேற்றுக்குரிய வகையில் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலையறிவுப் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு ஆகிய சீரிய பண்புகள் தமிழுக்கு அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி சான் சாமுவேல், மணவை முச்தபா, வா. செ. குழந்தைசாமி , மலையமான் முதலிய அறிஞர்கள் பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். அவையனைத்தும் விரித்துரைக்கப் புகுந்தால் நெடிய வரலாறாக விரிந்துவிடும். .
செம்மொழி ஆய்வுவளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு இக் கட்டுரையின் கருப்பொருளாகும். தமிழ் செம்மொழி என்னும் தகுதிப்பேற்றுக்குரிய அனைத்துச் சீரிய பண்புகளும் பெற்றிலங்குவதனை விளக்கியும் அதற்கேற்ப உரிய உயர்வு வழங்கப் பெறாமலிருப்பதைச் சுட்டிக்காட்டியும் பேராசிரியர் சி. இலக்குவனார் எழுதிய ‘பழந்தமிழ்’ என்னும் நூல் இங்கு முதன்மையாகக் குறிப்பிடத்தக்கதாகும். மொழியியலாளர் ‘மூலத்திராவிடம்’ என்னும் கற்பிதமொழி ஒன்றனைச் சுட்டி, அதன் வழிப்பட்டனவாகத் தமிழ் மொழியையும் ஏனைத் திராவிட- மொழிகளையும் குறிப்பிட்டுவந்தனர். பேராசிரியர், அந்த மூலத்திராவிடம் என்னும் பெயரை அகற்றிப் ‘பழந்தமிழ்’ என்னும் பெயரை வழங்கினார்திராவிடமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்து பிறந்து வளர்ந்தவைகளாகும். மொழிக்குடும்பம் என்பது தொல் மொழி (Proto- language) ஒன்றிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடத்தாலும் வெவ்வேறு மாற்றமடைந்து ஒரு பிரிவு மொழியும் மற்றொரு பிரிவு மொழியும் வெவ்வேறு மொழியெனக் கருதும் பல மொழிகளின் தொகுதியாகும். இம் மொழிகளை இனமொழிகள் (Cognate languages) என்பர். இம்மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து அவையனைத்தும் தொல்மொழி ஒன்றிலிருந்து பல்வேறு மொழிகளாகக் கிளைத்திருக்க வேண்டும் என ஒப்பியல் ஆய்வு மொழி -யாளர்கள் கூறுவர். எல்லாத் திராவிடமொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியினை மூலத் திராவிட மொழி அல்லது தொல்திராவிடமொழி (Proto-Dravidian language) என வழங்கினர். (தமிழ் மொழி வரலாறு – சு. சக்திவேல் – ப. 52. இயல் 3 – தொல் திராவிடமொழியும் தமிழும்) என்னும் கூற்று இக் கருத்துக்குழுவினரின் ஆய்வுநெறிக்குத் தக்க எடுத்துக் காட்டாகும். ‘இன்று திராவிட மொழிகள் என்பனவெல்லாம் பழந்தமிழிலிருந்தே தோன்றியனவாம். இத் திராவிடமொழிகள் பழந்தமிழின் புதல்விகளே. தாய் என்றும் மகள் என்றும் உறவு கற்பித்து உருவகப்படுத்திக் கூறுவதைச் சிலர் விரும்பிலர். ஏனைய திராவிட மொழியாளரில் சிலர் தத்தம் மொழியே தாயெனத் தகும் என்றும் சாற்றுவர். ஆதலின் தாய், மகள் எனக் கற்பித்துக் கூறும் உறவுமுறையைக் கருதாது உண்மைநிலையை ஆராயின், பழந்தமிழே பல மொழிகளாக உருவெடுத்துள்ளது என்று தெளியலாம். ஒன்று பலவாகியுள்ள உண்மைநிலையை மறைத்தல் இயலாது’ (பழந்தமிழ் – ப. 65) என்னும் பேராசிரியர் சி. இலக்குவனார் கருத்து, திராவிட மொழியியலாளரின் சிந்தனைக்குரியது.
(தொடரும்)
– பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
Leave a Reply