(௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி)

தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார்; வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர்.

தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர்.

சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து, தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று.

மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும்.

தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப்பாவாணர் கண்ட முடிபு.

தமிழ், உயர்தனிச்செம்மொழி; பிறமொழி கலவாமல் இயங்கவல்ல சிறந்த மொழி; உலக மொழிகளுக்கெல்லாம் முன் பிறந்த மூலமொழி.

சமற்கிருதத்தினின்றே தமிழ் தோன்றியதென்றும், அதனால்தான் தமிழ் வளம் பெற்றதென்றும் கூறுவார் கூற்றைச் சிறிது ஆய்வோம்.

வடமொழி தமிழில் கலந்ததால் தமிழ் அழிந்தது.  எவ்வளவுக்கு  எவ்வளவு   வடமொழிச்   சொற்கள்  தமிழில் கலந்தனவோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்தன.

காட்டாகச் சில தருவாம்

      வடசொல்  – தமிழ்ச்சொல்

      கஷ்டம்     – துன்பம்

      நஷ்டம்     – இழப்பு

      இஷ்டம்     – விருப்பம்

      புஸ்தகம்    – பொத்தகம்

      அதிர்ஷ்டம்  – நன்னுகர்ச்சி, குருட்டு வாய்ப்பு

      ஆநந்தம்    – இன்பம்

      கலாச்சாரம்  – கலையொழுக்கம், பண்பாடு

      காஷாயம்   – காவி

      கியாதி     – புகழ்

      கிரகம்     – கோள்

      கீதம்      – இசை

      சங்கீதம்    – இன்னிசை

      சந்தேகம்   – ஐயம்

      சந்தோஷம்  – மகிழ்ச்சி

      ஞானம்     – அறிவு

     சிரமம்      – தொல்லை

     பிரச்னை    – கேள்வி, சிக்கல்

     கல்யாணம்  – திருமணம்

     விவாகம்    – மணம்

     வேஷ்டி     – துணி

     சமாச்சாரம்   – செய்தி

மற்றும் பலவாயிரம் சொற்கள் உள. மறைமலையடிகளார் மகளார் நீலாம்பிகையம்மையார் எழுதிய “வடசொல் தமிழ் அகரவரிசை” என்னும் நூலில் காண்க.

யாம் எழுதியுள்ள “தமிழ் கற்போம்” என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம்.  ஆங்கிலச் சொற்களுக்கும் நேரான தமிழ்ச்சொற்கள் எழுதப் பெற்றுள்ளன.

வடசொற்கள் மட்டுமன்று; வேற்றுமொழிச் சொற்கள் எவை தமிழில் கலந்தாலும் தமிழ்ச் சொற்கள் அழியும் என்பதுறுதி.  ஏனெனில், தமிழ் தனித்து, பிறமொழியுதவி இன்றி, இயங்கக் கூடிய செம்மைப்பட்ட சீரிய மொழி.

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்