க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்

(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
க௩. போலித் தமிழர்
இன்று தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர் முதலிய பலமொழி பேசுபவரும் வாழ்கின்றனர்.
தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர். ஐந்து கோடியில் ஒன்று அன்றி ஒன்றரைக் கோடிப் பேர் இருப்பர். ஆனால், தமிழ்நாட்டில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்பவர் பலர் மதவேறுபாடு, மொழி வேறுபாடு கருதாது தம் தாய்மொழி தமிழ் என்றே, மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், வேலைகட்கு விண்ணப்பங்கள் எழுதும்போதும், பதிவு செய்கின்றனர். அவர்கள் யாவரும் தமிழ்ப்பற்றுள்ளவர்களென்று கூறிவிடவியலாது. பிழைப்புக்காகத் தமிழைப் பயன்படுத்துபவர் பலராவர். தமிழைத் தாய்மொழியெனப் பதிவு செய்தவர் எல்லோரும் தமிழ்ப்பற்றுள்ளவரல்லர். ஏனெனில், அவர்கள் வளர்க்கப் பாடாற்றுவது அவர்தம் பண்டைய தாய்மொழிகளையே!
குறிப்பாகச் சொன்னால், பார்ப்பனர் தமிழைத் தாய்மொழி எனப் பதிவு செய்தாலும், அவர்கள் வளர்க்க முயல்வது தம் பண்டைய தாய்மொழியாகிய சமற்கிருதத்தையேயாகும். அம்மொழி பேச்சுவழக்கற்றதாயினும், அதில்தான் எல்லாம் பொதிந்திருக்கின்றன. அறிவியல், பொருளியல், குமுகவியல், வாழ்வியல் முதலிய அனைத்தும் உளவென்று கூறுகின்றனர். வடநாட்டாரும் அதற்குத் துணை செய்கின்றனர். ஏனெனில், அதன் பெயரே வடமொழியன்றோ?
தெலுங்குத் தமிழர் வீட்டிலும் அவர் உறவினர்களுடனும் தெலுங்கில்தான் பேசுகின்றனர். அங்ஙனமே பிற மொழியினரும் செய்கின்றனர்.
சில வேற்று மொழியாளர் தமிழ்த்தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு, தமிழ்த்தாளிகைகள் நடத்திக் கொண்டு அதனால் பிழைத்து வருகின்றனர். அவர் இல்லத்தார் பேசுவது தம் உண்மையான தாய்மொழியே. அவர் உறவினருடன் பேசுவதும் அம்மொழியிலேயே. தம் மக்கள் பெயர்கள் தமிழில் இடவில்லை. அவர்கள் பெயரும் தமிழில்லை. தமிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் வளர்க்கப் பாடுபவர்போல் பேசுகிறார்; எழுதுகின்றார். எல்லாம் பிழைப்புக்கான நடிப்பே.
சிலர் சீர்திருத்தம் பற்றியும் பேசுவர். இறைக்கொள்கை பற்றியும் பேசுவர். திரவிடர் கழகக் கூட்டத்திலும் பேசுபவர். திருக்கோயில் கூட்டத்திலும் பேசுவர். இவர்கள் கொள்கையற்ற கோமாளிகள், தமக்குப் பெயரும் புகழும் உண்டாகவேண்டுமென்று இரட்டைக் கோலம் (போடுபவர்) புனைபவர்.
சில சீர்திருத்தத் தன்மான இயக்கத்தினர் இறைப் பற்றாளர்களையும், மடாதிபதியையும் தம் இயக்கக் கூட்டங்களில் பேச அழைக்கின்றனர். இவர்கள் கொள்கைக்காக இயக்கம் நடத்துபவரா? பிழைப்புக்காக இயக்கம் நடத்துபவரா? என ஆய்ந்தறிக. சிலர் பெரியார் தொண்டரென்பார், அண்ணா அன்பரென்பார், காந்தியார் அடிமையென்பார். ஆனால், பெரியார், அண்ணா, காந்தி சொன்ன கோட்பாடுகளைப் பின்பற்றி நடக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை. இத்தகைய தலைவர்களின் பெயர்களைச் சொல்லிப் பிழைப்பு நடத்துபவராவர்.
திராவிடர் கழகத்தார், தன்மானப் பகுத்தறிவு இயக்கத்தார், பகுத்தறிவாளர் முதலிய சீர்திருத்தம் பேசுவோர் பலர் தாம் மட்டில் ஓரளவு அக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பர். ஆனால், அவர்தம் இல்லத்தார் அனைவரும் மூடப்பழக்கவழக்கங்களை முற்றாகப் பின்பற்றியே நடப்பர்.
இத்தகைய தமிழரெல்லாம் போலித் தமிழர்களேயாவர். இவர்களையெல்லாம் நம்பினால் தமிழும் முன்னேறாது; தமிழ்நாடும் முன்னேறாது. எனவே. உண்மைத் தமிழர்களாகிய வேளாளர், மறவர், இடையர், படையாட்சியர், அகமுடையர், அம்பலக்காரர், பள்ளர், பறையர், மலைவாணர், மீனவர், முத்தரையர், கைக்கோலர், முக்குலத்தோர் முதலிய அனைவரும் ஒன்றுபட்டுழைத்து முன்னேற்ற முயல்வோமாக!
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை






Leave a Reply