அட்டை-சேதுகாப்பியம் 3 :attai.sethukaappiyam-mundru

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3
மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு
முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர்.

தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத் தலைமையமைச்சர் வாசபேயரைக் கண்டு உரிமைக்குரல் எழுப்பிவந்தவர். ஈழத்தில் இரண்டு நூறாயிரம் தமிழர் கொடுமையான முறையில் கொலைசெய்யப்பட்ட வேளையில் கொதித்தெழுந்தவர். இனப்படுகொலையாளனைப் ‘போர்க்குற்றவாளி’ என்றறிவிக்கவேண்டுமென இற்றைத் தலைமையமைச்சர் மனமோகனரிடம் மன்றாடியவர்.

  சென்னைமுதல் குமரிவரைத் தமிழ்நடைப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டைத் தம் காலாலளந்தவர். நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதித் தமிழின் பெருமையை நூலாலளந்தவர்.

  நாள்தோறும் உரிமைமுழக்கம், பொதுக்கூட்டம், இலக்கிய அரங்கம், பாட்டரங்கம் என அரங்குகள் கண்டு தமிழர் உள்ளத்தில் கடுகளவேனும் மொழியுணர்வும் இனவுணர்வும் மலர்ந்திட அயராதுழைப்பவர். அறிவறிந்த மக்கட்பேறு பெற்று அவர்கள் மூலமும் தமிழுக்குத் தொண்டு புரிந்துவரும் எடுத்துக்காட்டான தந்தை.

ஆற்றல்சால் இதழாளர். கடந்த நாற்பத்திரண்டாண்டாகத். ‘தமிழ்ப்பணி’ எனும் இதழைப் பல்வேறு அல்லல்களிடையேயும் அயராது நடத்தித் தமிழினத்தைத் தட்டியெழுப்ப முயன்றுவருபவர்.உணர்வுப்பெருக்குடன் பொழிவாற்றும் நாவலர்;

வடசொற்கடிந்து தனித்தமிழ் பேணும் தமிழ்க்காவலர். இன்முகம் காட்டி இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் போற்றிப் பகைவரையும் நண்பராக்கிடும் நயமிக்க பண்பாளர்.

அனைத்திற்கும் மேலாக மனிதநேயத்தை உயிரெனப் போற்றும் தலைசிறந்த மனிதர். வாழ்வுமுழுதும் எதிர்நீச்சல் மேற்கொள்வதிலேயே காலம்கழித்துவரும் பெருங்கவிக்கோ அவர்களின் இக் காப்பியப் படைப்புமுயற்சியும் ஓர் எதிர்நீச்சல்பணியாகவே அமைந்துள்ளது எனலாம்.

பெருங்கவிக்கோ வா.மு.சே.அவர்களின் நோக்கம் விழுமியது. தமிழ்நாட்டின் வரலாற்றை- குமரிக்கண்டக் காலம் முதல் இன்றுவரையிலான வரலாற்றுநிகழ்வுகளை ஆவணப்படுத்த- விழைகிறார். இத்தகைய உயரிய நோக்கத்தை இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளரும், பாவலரும் வெளிப்படுத்தியதில்லை. அவ்வகையில் வா.மு.சே. தன்னிகரின்றித் தனித்த சிறப்பு மிக்க சிந்தனையாளராகத் திகழ்கிறார். தமிழ்நில வரலாற்றுடன் அருள்மொழியன் கதையும் பின்னிப் பிணையப்படுகிறது. ஒரு நடப்பியல்நெறி சார்ந்த தோற்றத்தை உருவாக்குதற்கு இங்ஙனம் அமைத்தார் எனலாம். செய்திச்செறிவு படிப்போர்க்குச் சலிப்பூட்டும் எனக் கருதிச் சுவைமிக்க வாழ்க்கைக்குறிப்புகளை இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தோடு எழுத்துகளைப் புனைந்தோர் இதுகாறும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் பெருங்கவிக்கோ நம் அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுத் தமிழ்நில வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இலக்கியம் புனையும் பணியைத் துணிவுடன் மேற்கொண்டுள்ளார். எனவே பெருங்கவிக்கோ தமிழ்கூறு நல்லுலகின் பெரும் போற்றுதலுக்குரியவர் எனலாம்.

உங்கள் கைகளில் தவழும் மூன்றாம் காண்டத்தில் எதிர்நீச்சல் திருமணமாக அமையும் இறையன்–திருமகள் இணையர் திருமணமும் காப்பியத்தலைவன் அருள்மொழி-சேதுமதி திருமணமும் அவற்றின் சமுதாயப்பின்புலத்துடன் இனிது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

  புரியாத வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்பெறும் திருமண வழமையில் ஊறித் திளைத்த மூடநம்பிக்கை மிக்க மக்களை எவ்வாறு அருள்மொழி எதிர்கொள்கிறார். அவரகளின் இசைவுடன் எவ்வாறு தமது திருமணத்தைத் தமிழ்மணம் கமழச் செய்தார் என்னும் வரலாறு சுவைமிக்கது. அக் காலத் தமிழ்மக்கள் சனாதனிகளின் வடமொழி ஆதிக்கத்தைப் புனிதமெனப் போற்றி உச்சிமேற்கொண்ட அவலம் நம் நெஞ்சை உருக்குகிறது. பெரியார் மட்டும் தோன்றியிராவிடின். . . .? எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

காப்பியப் புலவர்களின் நெறியில் நம் பெருங்கவிக்கோ இயற்கைக் காட்சிகளைக் கவினுறப் படைத்துள்ளார்.

குற்றால அருவியின் வீழ்ச்சி-சத்தம்
கோடி இசையும் தாரா மாட்சி-ஒப்பில்
நற்றாள மத்தளத்தின் இசைபோல்-அதிர்ந்து
நாளோடும் பொழுதோடும் கேட்கும்-என்றும்
பற்றிய விடாதவர்கள் போலே-சூழ்ந்த
பறவைகளோ கீத இசை பாடும்-எங்கும்
அற்புதங்கள் சூழ்ந்திருக்கும் ஆட்சி-அந்த
அருமைக்கு நிகரேது நீட்சி!

எனக் கவிஞர் புனைந்துரைக்கும் இயற்கைநலன் குற்றாலத்தையே நம் கண்முன் கொணர்கின்றதன்றோ?

‘குமரிக் கதிரெழுச்சிச் செவ்விகாண் படலம்’ மிகச் சிறப்பாகக் குமரிக்கடலின் இயற்கைமாண்பை நயமுற நவில்கிறது.

காலைக்கதிர்ச் செல்வனைப் பதுங்கி எழும் அரிமா என உருவகப்படுத்துகிறார். கீழ்வானின் சிவப்பைத் தலைவன் காக்கச் சிந்தும் குருதியா? என வினவி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

‘கதிரும் நிலவும் காண் கவின்படலம்’ என்னும் படலத்தில் குமரிக்கடலில் கதிரும் நிலவும் சந்திக்கும் மாலைநேரக் காட்சியைச் சிறப்புறச் சொல்லோவியப்படுத்துகிறார்.

எதிரெதிர் முக்கடல் முன்னே-அந்தி
இரவியும் பூரண நிலவும்
மதிகதிர் சந்திப்புக் காட்சி-ஆட்சி
மாநில வையகம் முற்றும்
பதிஎதும் கண்டிட இயலா-மாட்சிப்
பண்கடல் குமரிமுனையில்
விதித்ததோர் இயற்கைசெய் விதியே-காண
வேண்டுமே தவம் கோடி மதியே!

எனக் கவிஞர் மகிழும்வேளையில் நாமும் அச் சொல்லோவியத்தை நம் மனக்கண்முன் கண்டு சுவைக்கிறோம்.

‘இருசுடர்த்தோற்றம்’ புனைதல் காப்பியநெறிகளுள் இன்றியமையாதது. இதனைத் திறம்படச் செயற்படுத்திக் கவிஞர் நம் போற்றுதலைப் பெறுகிறார்.

  தமிழர்தம் வாழ்வியல்நூலாகிய தமிழ்மறை திருக்குறளை ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிய திறத்தையும் தால்சுடாய் காந்தியடிகளுக்குத் திருக்குறளை எடுத்துரைத்த வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார் பெருங்கவிக்கோ.

காந்தியத்தின் நெறியாகி
கண்ணனவர் உரைநிகழ்த்தும்
மாந்தரிலே காந்தியைப் போல்
மாமனிதர் யாருமுண்டோ?
ஆந்துணையர் டால்சுடாய்தான்
அறிமுகத்தால் திருக்குறளை
ஏந்திஆங்கி லம்கற்க
ஏகசோதிக் கருத்தொளிகள்!(பக்.408)

என்னும் கவிஞரின் வரலாற்றுக்குறிப்பு இன்றைய காலத்திற்குத் தேவையான ஆவணப்பதிவாகும்.

திருக்குறளை உருசியநாட்டின் தால்சுடாய் கற்றே
அள்ள அள்ளக் குறையாத அமுதம் என்றே
அண்ணலுக்கு மடல்விடுக்க அறிந்தார் அண்ணல்!(பக்.175)

என்னும் கவிஞரின் குறிப்பு தமிழர்க்கு வரலாற்றுண்மையை நினைவூட்டும் செம்மையான பதிவு ஆகும்.

ஏனெனில் ஓர் எழுத்தாளர் தால்சுடாய் திருக்குறள் குறித்துக் காந்தியடிகளுக்கு எழுதவில்லை என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். 1908-ஆம் ஆண்டு “ஓர் இந்துவுக்குக் கடிதம்” என்னும் தலைப்பில் தால்சுடாய் எழுதிய மடல் அவரைப்பற்றிய வலைத்தளத்தில் இன்றும் காணக்கூடிய வகையில் இணையத்தளத்தில் உள்ளது. எனவே பெருங்கவிக்கோ இதனை வலியுறுத்தும் வகையில் தமது காப்பியத்திலும் பதிவுசெய்துள்ளமை எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் தொலைநோக்குடையது.

இதுபோன்றே

இந்தி ஆதிக்க எதிர்ப்பு-பக்.57-58& பக்.328
மும்முனைப்போராட்டம்- பக்.58-59
திபெத்தில் சீன மேற்சேறல்-பக்.150
தில்லையாடி வள்ளியம்மை தீரம்-பக்.152
எல்லைகாத்த ம.பொ.சி. – பக்.209-210
சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்-பக்.214-215
வள்ளலார்- பக்.217-218
அண்ணா- பக்.218-219
அரசர் அண்ணாமலையார்- பக்.220
கல்லக்குடி போராட்டம்- பக்.222-223
நேருவுக்கு கருப்புக்கொடி- பக்.224-225&பக்.329
மறைமலையடிகள் திருவள்ளுவர்
காலத்தை வரையறுத்தமை- பக்.360-361
தந்தை செல்வா-பக்.422

என வரலாற்றுச்செய்திகளை வாரிவழங்கி ’இக்காலப் பரணர்’ எனத் திகழ்கிறார்.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் படலம் 55-59
தமிழர்கள் முனைப்பெழுச்சிப் படலம் 224-233
சங்கரலிங்கனார் தவம் நோற்ற படலம் 327-337

என்னும் படலங்கள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன.

இங்ஙனம் இயற்கைப்புனைவிலும் வரலாற்றுப் பதிவிலும் ஈடற்றுவிளங்கி ஒப்பற்ற காப்பியத்தை வடிவமைத்துள்ளார்.

நூலைப் படித்துப் பயன் கொள்க. தமிழுக்குத் தொண்டாற்றுவதே தம் வாழ்வின் குறிக்கோள் எனக் கொண்டு வினையாற்றும் பெருங்கவிக்கோ அவர்களின் பெருமுயற்சிக்குத் துணைபயக்கும் வகையில் இந் நூலை வாங்கிப் படித்துத் தோழர்களுடன் விவாதம் நிகழ்த்துக. நூலைக் கற்றார், தம் திறனாய்வுகளை நூலாசிரியர்க்குத் தெரிவிப்பது, அவரை இன்னும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வாசகர் தம் கருத்துரைகள் ஆசிரியரை அவர்தம் படைப்புப்பணியில் மென்மேலும் முடுகி முன்னேற உதவும் என்பதனை நினைவிற்கொள்க.

”விலைப்பொருட்டால் நூல்தன்னை வாங்குவார் இலரேல்
கலைப்பொருட்டால் இயற்றத் துணிவார் எவரே?”

என்னும் என் தந்தையார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் பொன்மொழியை முன்வைத்துத் தமிழன்பர் அனைவரும் நூலை வாங்கிப் பொருளிழப்பிலிருந்து நூலாசிரியரைக் காக்கவேண்டுமென்னும் என் வேண்டுகோளுடன் என்னுரையை நிறைவுசெய்கிறேன்.

இன்னும் ஏழு காண்டங்கள் இயற்றி வெளியிடக் கவிஞர் திட்டமிட்டுள்ளார். அவரது ஒப்பற்ற இப் பணி அவருக்கு மட்டுமின்றித் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமைசேர்க்கும் பெரும்பணி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இத்தகைய ஒப்பற்ற பெருங்காப்பியத்தை வடித்துக் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் காலமெல்லாம் புகழ்பெற்றோங்க என் உளமார்ந்த வாழ்த்துகள்.

வெல்க தமிழ்! ஓங்குக பெருங்கவிக்கோ அவர்களின் தமிழ்த்தொண்டு!

-மறைமலை இலக்குவனார்

52/3 சௌந்தரியா குடியிருப்பு,

அண்ணாநகர் மேற்கு விரிவு,

சென்னை-600 101.
மேனாள் மாநிலக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர்,
மேனாள் சிறப்பு வருகைப்பேராசிரியர்,
கலிபோர்னியாப் பல்கலைக்கழகம்,பெர்க்கிளி.
ஆசிரியர்,’செம்மொழிச்சுடர் ‘-மின்னிதழ்.
www.semmozhicchutar.com
தொலைபேசி:26153561 கைப்பேசி:9445407120

சேதுகாப்பியம் 3 - விழா : sethukaappiyam_vizhaa

தமிழ்ப்பணி