(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி)

திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல.

insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் > நொடித்தவர் என்றே சொல்வோம்.

இதில் மைனர்  எனத் தமிழிலேயே குறிக்கப்பட்டுள்ளது. அகவைக்கு  வராதவர்களைக் குறிக்கும்  minor இளம்படியர்  எனவும் அகவை வந்தவரைக் குறிப்பிடும்  major  பெரும்படியர் எனவும் கூறப்படுவர்.

இளவர், அகவை வராத,வயது வராத, சிறிய,உரிமை வயது எய்தாதவர், உரிமை வயது அடையாதவர் என்று பொருள்கள். கணக்கில் சிறிய, சிறு பகுதி என்றும் புள்ளியியலில் சிற்றணி என்றும் பொருள்கள்.

? வழக்குகளில் மைனர் என்று வந்தால் என்ன சொல்ல வேண்டும்?

வழக்குகளைப் பொருத்த வரை  இவை முறையே சிறு வழக்கு, பெரு வழக்கு எனப்படும்.

?  மைனர் என்றால் adolescent, juvenile  என்று சொல்கிறார்களே?

adolescent என்பது வளரிளம்பருவத்தினரையும்  juvenile என்பது இளஞ்சிறாரையும் குறிக்கும்.

adolescent என்றால் வளர்நிலைச் சிறார்>வளர்சிறார் எனலாம். வளர்சிறார் என்றால் எல்லாருமே வளருபவர்தாமே என்று சொல்லக்கூடாது. சொற்களை வரையறைப்படுத்தி வகைப்டுத்திக் கொள்ள வேண்டும். Adolescent-விடலை என்றும் கூறுகின்றனர். விடலைப்பருவம் என்பது பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ள பருவத்தைக் குறிப்பது. எனவே, adolescent என்பதற்கு விடலை பொருந்தாது.

 இளஞ்சிறார் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

          நான் இளஞ்சிறார் நடுவர் மன்றத்தில்(Juvenile Court) நன்னடத்தை அதிகாரியாகப் பணியேற்ற உடன் இளஞ்சிறார் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அப்பொழுது ஒரு சாரார்  சிறுவர் என்றே சொல்லலாம் என்றார்கள். சிறுவர் என்பது பொதுவான சொல்லாகும்: சிறுவர்  என்பதன் பன்மை வடிவம் சிறார். அவரிலும் சிறு பருவத்தினரைக் குறிக்கும் வகையில் இளஞ்சிறார் என்பது சரிதான் என்று கூறிப் பயன்படுத்தி வந்தேன். அதனையே நீதிமன்றத்திலும் பின்னர் காவல் நிலையங்களிலும் பிற அலுவலகங்களிலும் ஏற்று இன்று தொலைக்காட்சி முதலான தகவல் ஊடகங்களிலும் இளஞ்சிறார் என்றே குறிப்பிடுகின்றனர். எனவே பயன்படுத்தப் பயன்படுத்த எச் சொல்லும் எளிமையானதுதான்.

          ? juvenile என்று சொல்லின் பொருளை இச்சொல் குறிக்காது. அப்படியே பயன்படுத்தினால் என்ன?

          ? நாமாகவே இவ்வாறு கற்பனையில் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கருதுகிறோம். உண்மையில் தமிழில் ஆடவருக்குக் குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என 6 பருவங்களும் பெண்டிருக்குப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7   பருவங்களும் குறிக்கப் படுகின்றன. இத்தகைய பருவ வரையறையும் சொல்லாட்சியும் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமையால், தமிழில்  உள்ள பருவங்களை நாம் மறந்து  இவ்வாறு பிறமொழிக்கேற்ப சொல்லாட்சியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுகிறோம்.

          post-mortem  – பிரேத விசாரணை என வந்துள்ளது.பிரேதம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பிணம் என்றே சொல்லலாம். சடலம் என்பது உடலைக் குறிக்கும். உடற்கூறு ஆய்வு என்பதால் உயிரற்ற உடல் என்ற பொருளில் சடலம் என்றே குறிக்கலாம்.

post-mortem report – இறப்பு விசாரணை என்று சொல்லலாமா?

அப்படிச் சொன்னால், எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புற உசாவலாக அமையும்.

 inquest எனப்படுவது   எவ்வாறு மரணம் நேர்ந்தது என்பது பற்றிய , உசாவுதலைக் குறிக்கும். அதுதான் இறப்பு விசாரணை, இறப்பு உசா. இங்கு இறந்த உடலை ஆய்வு செய்வதால் உடல ஆய்வு, பிண ஆய்வு  என்று சொல்ல வேண்டும்.

இப்பதிவேடு தமிழில் இருந்தாலும் minute book என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பொழுது ஆட்சிச் சொல்லகராதியைப் பார்த்தாவது அடுத்தவரிடம் கேட்டாவது தமிழில் எழுத வேண்டும் என்ற முயற்சி உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குறிப்பான  minute நிகழ்(வுப்) பதிவு எனப்படும். நிகழ் பதிவைக் குறிக்கும்  minute book-  நிகழ்ச்சிப்பதிவேடு – நிகழேடு என்று அழைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி வரிசையைக் குறிக்கும் agenda  நிகழ் நிரல் ஆகும்.

minute என்றால் நிமிடம் என்றுதானே பொருள்?

நிமையம், நுட்பமான; நுண்ணிய,மீச்சிறு, நுட்பமான, மணித்துளி,

குறுங் கோணஅளவு எனப் பல பொருள்கள் உள்ளன. இவைபோல் நிகழ்ச்சிப் பதிவையும் குறிக்கிறது. ஒவ்வொரு      நிமைய நிகழ்வையும் விடாமல் குறிக்க வேண்டும் என்பதற்காக இங்ஙனம் கூறுகிறார்கள் எனக் கருதத் தோன்றும். ஆனால், காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. சிறு குறிப்புகள் என்னும் பொருள் கொண்ட minuta scriptura என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது. கூட்டத்தின் குறிப்புகள் குறித்த ஆவணமே நிகழ் பதிவேடு.