வழக்காடு மொழி

– தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும்

மத்திய  மாநில அரசுகள்!

  இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து  வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில்  உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா என்பது வேறு செய்தி. ஆனால்,  நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கக்கூடாது என்று சொல்லும் மத்திய அரசு அதனை மறுக்க 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டுள்ள கொடுமை நேர்ந்துள்ளது.

தமிழுக்கான வழக்காடு மொழித் தகுதியை மறுத்த மத்திய அரசைக் குற்றம சுமத்தாமல் மாநில அரசையும் குறைகூறுவது ஏன் என்று சிலர் எண்ணலாம். தங்கள்  பதவிச்செல்வாக்குகளையும் பணச் செல்வாக்குகளையும் மத்திய ஆட்சிமூலம் பெற்றுத் திளைக்கும் மாநிலக்கட்சிகள் பெயரளவு தீர்மானங்கள் அல்லது வேண்டுகோள்கள் மூலம்தத்தம் கடமைகள் முடிந்தனவாக எண்ணுவதே தவறுதானே!

1997, 1999 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் மறுத்த பின்னர், திமுக ஆட்சியில் தமிழகச் சட்டமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில தமிழை வழக்காடுமொழியாக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது மத்திய ஆட்சியிலும் திமு க இருந்தது. 12 திமுக அணி அமைச்சர்கள் மத்திய ஆட்சியில் இருந்தனர்.  எந்தப் பதவிகளை எப்படிப் பெற வேண்டும்? எந்த ஒதுக்கீட்டில் எவ்வளவு ஒதுக்கிக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் தெரிந்த திமுகவிற்குத் தன் அரசின் தீர்மானத்தை மத்திய அரசால் நிறைவேற்றிக் கொள்ளத்  தெரியாமலா இருந்திருக்கும்!

தமிழை வழக்காடுமொழியாக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11.10.2012 இல் மறுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரை, மடல் என வேண்டுகோள்கள் விடப்பட்டன. ஆனால், அத்துடன் கடமை முடிந்ததாக அதிமுக அரசு எண்ணியதால்தான்  மத்திய அரசு எதிராக முடிவெடுக்கிறது. மத்தியில் பேராயக்கட்சியாகிய காங்., பாசக என எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழர்கள்  இந்தியர்கள் அல்லர் என்ற நல்லெண்ணம் எப்பொழுதும் உண்டு. மீனவர் நலனாக இருந்தாலும்  கச்சத்தீவு உரிமையாக இருந்தாலும் ஆற்றுநீர்ப்பங்கீடாக இருந்தாலும் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைச் செயலாற்றுவதாக இருந்தாலும் இவை தமிழர்க்கு எதிரான பாதையில்தான் செல்லும். ஆனால், தமிழ், தமிழர் என்றுசொல்லி வாக்குகள் கேட்கும் தமிழகக் கட்சிகள் இவ்வாறு நடக்கலாமா? மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள இக்கட்சிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்கள் நலனை மேம்படுத்திக் கொண்ட இக்கட்சிகள், தமிழக மக்களுக்கான நலன்கள் என்றால் தோல்வியுறுவது ஏன்? தமிழக நலனில் போதிய முனைப்பு காட்டாததுதானே!

ஆகவே, அதிகாரப் பொறுப்பில் இருந்த, இருக்கும் மத்தியக் கட்சிகளுக்கு இணையாக மாநிலக்கட்சிகளையும் குற்றம் கூறுவது சரிதானே!

பொறுப்பில் உள்ளவர்கள் தமிழைப் புறக்கணிப்பதன் காரணம், தமிழில் வாதாடினால், கட்சி வழக்குரைஞர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற அச்சம்தானே! வழக்குகள் விரைவில் முடியவும்  நேர்மையாக உசாவல் நடைபெறவும் உரிய கருத்தை வெளிப்படுத்தவும் நல்ல தீர்ப்பைப் பெறவும் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தில் மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும்  மேல் முறையீட்டு வழக்குகளிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்திய மக்களில் ஒரு பகுதியினர் தம் தாய்மொழியான இந்தியில் வழக்காட உரிமை பெற்றிருக்கும்பொழுது அதே உரிமை பிறருக்கு மறுக்கப்படுவது எங்ஙனம் நீதியாகும்? இந்தியா ஒரு நாடு எனில்  நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் அல்லவா? அப்படியில்லாமல் நம் மொழியில் வழக்காடும் உரிமை கூட நமக்கு இல்லையெனில், அதற்கு உதவாத கட்சிகள்இருந்தென்ன? மறைந்தென்ன? கட்சித்தலைவர்களே! இனியேனும் தமிழக நலன் காக்கச் செயல்படுங்கள்! மத்திய ஆட்சிக்கு ஏதேனும் வகையில் நெருக்கடி கொடுத்தேனும் நீதிமன்றத்தில் தமிழுக்குரிய நீதியை நிலைநாட்டுங்கள்!

தமிழ்நாட்டிலுள்ள பாசகவினரே! தமிழர் நலனில் நீங்கள் ஈடுபாடுகாட்டுவது உண்மையெனில், கட்சியின் முடிவிற்குக் கட்டுப்படாமல், தமிழர் நலனுக்கு உங்கள் கட்சியைக் கட்டுப்படச்செய்யுங்கள்!

ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உயர்நீதிமன்ற வழக்காடுமன்ற மொழியாகத் தமிழை ஏற்கச் செய்யும் உரிமை இருக்கும்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தைப் புறக்கணியுங்கள். உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவித்து அதனைச் செயல்படுத்துவதற்குரிய வழிவகைகளுக்கான கருத்துகளை மட்டும்  உச்ச மன்ற நீதிபதிகளிடம் கேளுங்கள். நடைமுறைப்படுத்துவதற்குரிய அறிவுரைகளைக் கூறுவதுதான் உச்சமன்ற நீதிபதிகள் கடமை. மாறாகத் தமிழர் உரிமையை மறுக்கும் உரிமை அவர்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

பாசக அரசினரே! இந்தியா வலிமையான ஒரே நாடாகத் திகழ வேண்டுமானால், மொழித்திணிப்பை நிறுத்தி விடுங்கள்! மொழிவழித் தேசிய நலன்களைப் பேணுங்கள்! தலையாய மொழியான தமிழுக்குரிய இடத்தைத் தவறாமல் அளியுங்கள்! தமிழை மத்தியஆட்சிமொழியாக அறிவியுங்கள்! தமிழக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தமிழை நீதிமன்ற மொழியாக அறிவியுங்கள்! தமிழில் சட்ட நூல்கள், சட்டச் சொற்கள், பயிற்சிகள் முதலானவற்றிற்குத் தாராளமான பொருளுதவி அளியுங்கள்! தமிழில் நீதிமன்றச் செயற்பாடுகளை இலங்கச்செய்து தமிழன்னைக்கு நீதி வழங்குங்கள்!

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 668)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப்.4 – 10 , 2018