இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை

– இலக்குவனார் திருவள்ளுவன்

 தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பன்முக அறிஞராகவும் களப்பணிகளில் ஈடுபட்ட போராளியாகவும் திகழ்ந்தவர். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். இதற்காகத் தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் எக்காலமும் எப்பொழுதும் வலியுறுத்திவந்தவர். தமிழ்வழிக்கல்விக்கு மூடு விழா நடத்திக் கொண்டு வரும் நாம் இப்பொழுதாவது இத்தகைய அழிவுப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழ் நலப்பணிகளில் கருத்து செலுத்தும் தமிழக அரசு தமிழ்நாட்டில் கல்வி என்றால் அது தமிழ் வழிக்கல்வியே என்னும் சீர்நிலையைக் கொண்டுவர வேண்டும்.

பேரா.சி.இலக்குவனாரின் தொடக்கக் கல்வியைச் சற்றுப் பார்ப்போம்.  இலக்குவனார், வைத்தியலிங்க(த் தேவ)ர், சீனுவாச(த்தேவ)ர் ஆகியோர் வீட்டுத் திண்ணைகளில் நடைபெற்ற பள்ளிக்கூடம் சென்று பயின்றார். இவர் தந்தையாரைப் போன்று பிள்ளைகளைக் கல்வியில் வல்லவர்களாக ஆக்குவதில் நாட்டம் கொண்ட கு.சி.அமிர்தலிங்க(த் தேவ)ர் என்பவர் தம் வீட்டையொட்டியே பள்ளிக்கூடம் ஒன்று அமைத்தார். அங்கு ஆசிரியர் கண்ணுசாமி(பிள்ளை) அனைவருக்கும் பாடங்கள் கற்பித்தார்.

இவற்றில் படித்த இலக்குவனார், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப்பெற்றார் எனலாம்.

பத்து அகவை வரை எழுத்துக்கல்விக்கு முதன்மை அளிக்காமல்  கேள்வியறிவு மூலம் வாய்மொழிக்கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது பேரா.இலக்குவனார் கருத்து. கல்வி உளவியலாளர்களும் இவ்வாறுதான் வலியுறுத்துகின்றனர். உருசியா முதலான நாடுகளில் இதனைப் பின்பற்றுகின்றனர். நாமும் மனப்பயிற்சியை வளர்த்தெடுக்கும் இக்கல்வி முறையால் அறக்கருத்துகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதன் மூலம் நல்ல தலைமுறையினரை உருவாக்க இயலும்.

“வாழ்வில் நன்கு வெற்றி பெறவும், எல்லாரும் கூடி, உறவாடி இன்புற்று வாழவும், மன்பதையில் மேலோராக மதிக்கப்படவும், செல்வத்தை ஈட்டவும், ஈட்டிய செல்வத்தை நன்கு துய்க்கவும், தாம் இயல்பாகப் பெற்றுள்ள ஒட்பமும் அழகும் சிறப்புறவும், ஆட்சி முறையில் பங்குகொண்டு பணியாற்றவும், வாலறிவன் நற்றாள் தொழவும் கல்வியே பெருந்துணையாவது என்று கருதி அனைவருக்கும் கல்வி தர வேண்டியது அரசின் கடமை,”[ இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)] அனைவரும் கற்கவேண்டியது மக்கள் கடமை என்கிறார் பேரா.இலக்குவனார்.

“தமிழ், சுருங்கிய எல்லைக்குள் எல்லாத் துறையிலும் மக்களுக்குப் பயன்படு கருவியாக அமைந்துள்ள நிலையையும் இழந்துளது. சமயத்துறையில் ஆரியமும், ஆட்சித்துறையில் ஆங்கிலமும், தேசியத் துறையில் இந்தியும், இசைத் துறையில் தெலுங்கும் செல்வாக்குப் பெற்றுத் தமிழ் வீட்டளவில் நின்றது. வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சிபெற்றிராது கலப்புத் தமிழாக, உருக்குலைந்த தமிழாக நின்றுவிட்டது. என வருத்தப்படுகிறார் முத்தமிழறிஞர் இலக்குவனார். இந்த அவலத்தை நாம்  எவ்வாறு போக்க வேண்டும்? தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழி பற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.” எனக் குறிப்பிட்டுத் தமிழ் மதிப்புடையதாக எல்லா இடங்களிலும் திகழத் தமிழர்கள் எல்லா இடங்களிலும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்கிறார். இல்லான் கருத்தை எவர்தான் ஏற்பர்? எனவே, தமிழர்கள் தம் நிலையை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தமிழுக்கு உயர்வு கிட்ட வழி வகுக்க வேண்டும் என்கிறார். அங்ஙனம் தமிழர்கள் உயர்த்திக் கொள்ள அவர்களுக்குத் தேவை தமிழ்வழிக் கல்வி என வலியுறுத்துகிறார்.

திருக்குறட் பொருட்பாலில் இறைமாட்சிக்குப் பின்னர்க் கல்வி, கல்லாமை, கேள்வி எனும் தலைப்புகளில் கல்வியின் இன்றியமையாமையும் பயனும் வற்புறுத்தப்படுகின்றமையால்  அக்கால மக்கள் கல்வியைக்  கண்ணெனவே போற்றி வாழ்ந்துள்ளனர் என்கிறார். நாமும் கல்வியை அனைவருக்கும் உரிய உரிமையாகக் கருதிக் கல்வி இல்லாதார் யாருமில்லை எ்னும் நிலையை உருவாக்க வேண்டும் என்கிறார்.

தமிழ் நாட்டில் உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களோ பொருளியல் வல்லுநர்களோ தோன்றாமைக்குக் காரணம் என்ன என வினா தொடுக்கிறார் பேரா.சி.இலக்குவனார். நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே “பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ஆகவே உடனே கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கூறுவதில் பொருந்தாத் தன்மையோ, புதுமையோ புரட்சியோ இருக்க இடமின்று. ” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965].    எனவே, எல்லா நிலையிலும் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தமிழ்க் காப்பிற்காகவும்தமிழ் வழிக் கல்விக்காகவும் என இரு முறை சிறை சென்றவர் தமிழ்ப்பயிற்றுமொழிக் காவலர் பேரா.சி.இலக்குவனார். உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற முதல் மொழியாசானாகிய அவர் குரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டுமல்லவா? நம் நாடு முன்னேற நாட்டு மொழியையும் நாட்டுமொழி வாயிலான கல்வியையும் நாம் கற்க வேண்டும் என அவர் வலியுறுத்துவதை நாம் இப்பொழுதாவது பின்பற்றாவிட்டால் நாம் அழிவுப்பாதைக்குச் செல்வதைத் தடுக்க முடியாது அல்லவா?

“தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965.] எனப் பெரிதும் வருந்தி உரைக்கிறார். மேலும் இது குறித்துச் செந்தமிழ்க்காவலர் பேரா.சி.இலக்குவனார் கூறும் அறிவுரை வருமாறு :

 “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது என வருந்தி உரைக்கிறார்.

 “தமிழராகப் பிறந்தவர்கள் தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் பயிலாது சாதல் கூடாது. இரண்டும் தமிழரின் இரு கண்களாகும். இரண்டையும் பயிலாதவர்கள் இரு கண்களும் அற்றவர்களே.” என்கிறார். எனவேதான் அவர் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பாடத்திட்டங்களில் சேர்த்தார். ஆங்கிலத்தில் சேக்சுபியர் எனத் தனித்தாள் இருப்பதுபோல் தமிழில் திருக்குறள் எனத் தனித்தாள் இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடினார்.  ஆனால், அது நிறைவேறவில்லை. தொல்காப்பியத்தையும் மூலநூலாகப் படிப்பிக்காமல் உரைநூலை மட்டும் கற்கும் வகையில் மாற்றியுள்ளனர்.

உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே நேரம் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வந்த அப்போதைய அமைச்சர் அவினாசிலிங்கத்தை இலக்குவனார் பாராட்டுகிறார். அதுபோல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் அனைத்துப் பாட வகுப்புகளிலும் தமிழைப்பயிற்றுமொழியாக்க வேண்டும் என்கிறார். ஆனால், இன்றைய நிலைமை மோசமாகி விட்டது. உயர்நிலைப்பள்ளிகளிலும் தமிழ்வழிக்கல்வி என்பது கானல்நீராகிக் கொண்டுள்ளது. கல்வியின் எல்லா நிலைகளிலும் தமிழே பயிற்றுமொழியாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 “தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும். ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்ட நம் நாட்டிலேயன்றி வேறு எங்கணும் வேற்று மொழியாகப் படிக்கும் இயற்கைக்கு மாறுபட்ட நிலையைக் காண இயலாது.” ஆதலின், “தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட பிறகு தமிழ்வழியாகப் படித்துப் பட்டம் பெற்றோர்க்கே ஆட்சித்துறையில் இடம் அளித்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசு இதற்கு மாறாகச் செயல்புரிந்து வருகின்றது. தமிழக அரசுத்துறையில் பணிபுரிய முன்வருவோர்க்குத் தமிழறிவு இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் வழியாகப் படித்து வருவோரை இவ்வாறு ஒதுக்கினால் எங்ஙனம் தமிழ் வழியாகப் படிக்க முன்வருவர்? ஆதலின் தமிழ் வழியாகப் படித்தோர்க்கே தமிழக அரசுத் துறையில் முதலிடம் என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.”

கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் தமிழ்வழிப்படித்தோர்க்கு 20 விழுக்காடு முன்னுரிமை என ஆணை பிறப்பித்துள்ளனர். எனினும் இந்த ஆணை ஓரளவே வரவேற்பிற்குரியது. முழுமையாகப் பாராட்டுவதற்குரியதல்ல. எடுத்துக்காட்டாக 20 பணியிடங்கள் காலியாக இருந்தது என்றால், முதல் 4 இடம் தமிழ்வழிப்படித்தோருக்குக் கிடைக்காது. வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணைக்கிணங்க 200 பணியிடங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்தால், பட்டியல் இனத்தவருக்கு 150 ஆவது இடமும் பட்டியல் சாதியில் அருந்ததியருக்கு 166 இடமும் இசுலாமியருக்கு 188 ஆவது இடமும் வழங்கப்பெறும். இஃது எங்ஙனம் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும்? இனச்சுழற்சி முறையில் சேர்க்கப்பட்டுச் சுழற்சி முறையில்தான் பணி வழங்கப்படும். 80 விழுக்காடு தமிழ்வழிப் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால், 20 விழுக்காடுதான் வழங்கப்படுகிறது. அதுவும் முன்னுரிமை அடிப்படையில் அல்ல.  எனவே, தமிழ்வழிப்படித்தவர்களுக்கு முதலுரிமை வழங்கும் வகையில் மறு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கல்வி என்பது தமிழ் வழியில் மட்டும்தான் என்பதை நடைமுறைப்படுத்தினால் வருங்காலங்களில் முன்னுரிமை என்பதற்குத் தேவையில்லாமல் போய்விடும்.

சுருக்கமாகச் சொல்வதாயின் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பின்வருவனவற்றை வலியுறுத்திக் கல்விக்கொள்கையை உணர்த்துகிறார்.

  1. மழலை நிலையில் திருக்குறளையும் ஆத்திசூடி முதலான பிற அற நூல்களையும் கற்பிக்க வேண்டும்.
  2. மழலைநிலையிலேய தமிழர் விளையாட்டுகளிலும் தமிழ்க்கலைகளிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  3. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளி வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருத்தல் வேண்டும்.
  4. கல்வியகங்களின் எல்லா நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. முழுமையாகத்தமிழ் வழிப்படித்தவர்கள் உருவாகும்வரை தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்வழிப்படித்தவர்களையே அமர்த்தல் வேண்டும்.
  6. பட்ட வகுப்புகளில் திருக்குறளுக்கெனத் தனித்தாள் இருத்தல் வேண்டும்.
  7. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளை அனைவரும் அறியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

தமிழ்மொழிக்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் முத்தமிழ்ப்போர்வாள் பேரா.சி.இலக்குவனார் முழங்குவதற்கு முதல்வர் மு.க.தாலின் செவி மடுக்க வேண்டும். முந்தைய ஆட்சியாளர்கள் வழியில் செல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப அயல்மொழியினருக்கு மட்டும் அயல்மொழிக் கல்வியை அளித்தால் போதுமானது. அதுபோல் தமிழர்க்கு உயர்கல்வியில் அயல்மொழி கற்பதற்கான வாய்ப்பைத் தந்தால் போதுமானது.

அகரமுதல இதழுரை

இலக்குவனார் திருவள்ளுவன்

(கார்த்திகை 01,1940, 17/11/1909 தமிழ்ப்போராளி

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாள்.)