(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி)

ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.
ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் பற்றி அறிய அவாவுவதால் இக்காலம் பற்றி எழுத முனைந்தோம்.
தமிழ்வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்நாட்டின் தொல்பழம் வரலாறு மறைக்கப்பட்டு கட்டுக்கதைகளாகிய இராமாயணம், மாபாரதம் முதலிய ஆரியர் பற்றிய நூல்கள் தமிழ் மக்களிடையே பரப்பப்படுகிறது. ஏனெனில், அதிகாரம் அவர்களிடம் உள்ளது.
இன்னும் சின்னாளில் “இந்தி” யர் நாகரிகம் தமிழ்நாட்டில் குடிகொண்டாலும் வியப்பின்று! இத்தகு சூழலில், காலக்கணிப்பு முறை பற்றிக் குறளியத்திற்கு எழுதுவது ஏற்புடைத்தாம் எனக் கருதுகிறேம்.

பண்டைத் தமிழர் மூன்று தமிழ்க்கழகம் நிறுவி முத்தமிழாய்ந்தனர் என வரலாறு கூறுகிறது. அத்தகு உயர்ந்த நாகரிக வாழ்வு வாழ்ந்த தமிழர் காலம் கணக்கிடும் முறை தெரியாமலா இருந்திருப்பர்? யாவும், தமிழ்ப்பகைவர்களால் அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், இன்று அழிவுக்கு அகப்படாமல் தப்பிய சில ஏட்டுச் சுவடிகள் கொண்டு அச்சேறிய சில தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இலைமறைக் காய்கள் போல் பரந்து கிடக்கும் செய்திகளால் அறிந்த கருத்துகளைத் தன்மானத்தமிழர்க்கு இக்கட்டுரை வழி அறிவிக்க விழைந்தேம்.
காலக்கணிப்புக்குப் பயன்படுத்தப்பெற்ற சொற்கள் முறையே நொடி, மாத்திரை, நாழிகை, யாமம், அல், பகல், இரவு, வைகறை, காலை, மாலை, அந்தி முதலாகவும், பருவகாலம் திங்கள், சுறவம் முதலாகவும், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், ஆண்டு ஆகியனவுமேயாகும்.
தமிழில் நொடி மிகச்சிறிய கால அளவு. இதனை இலக்கண நூலார் மாத்திரை என்பர். இருபத்து நான்கு நொடி ஒரு நாழிகை. மாநொடி என்பது பொருந்தாது. இதனை நிமிடம் என்பர் வடமொழியாளர். முழுத்தம் (2 நாழிகை), யாமம் (ஏழரை நாழிகை), ஒரு நாளைக்கு முப்பது முழுத்தம், எட்டு யாமம். பகல், இரவு சேர்ந்து ஒரு நாள், கிழமை எனினும் நாளைக் குறிக்கும். கிழமைகள், ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை, அறிவன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, காரிக்கிழமை என்பன ஏழும் (வாரம்) என்பது ஒரு சாரர் கூற்று. திங்களுக்கு நான்கு

ஏழம். திங்கள் எனின் மாதம் எனப் பொருள். பன்னிரண்டு மாதம் ஓர் ஆண்டு. அவை, சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்பன. பருவம் என்பது இரண்டு மாதம் கொண்ட காலம். எனவே, ஆண்டுக்கு பருவங்கள் ஆறு. அவை, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. கார் என்பது மடங்கலும், கன்னியும், கூதிர் என்பது துலையும் நளியும், முன்பனி என்பது சிலையும் சுறவமும், பின்பனியாவது கும்பமும், மீனமும், இளவேனில் காலம் மேழமும், விடையும், முதுவேனில் எனப்பெறுவது ஆடவையும், கடகமும் ஆகும். உவா (பௌர்ணமி) காருவா (அமாவாசை).
சுறவம் முதல் சிலை முடிய பன்னிரெண்டு மாதம் கொண்டது. ஓராண்டு ஆகும்.
வடமொழிவாணர் ஆண்டுகட்குப் பிரபவ முதல் அட்சய முடிய அறுபதாண்டு வரை ஆண்டுகட்குப் பெயர் சூட்டியுள்ளனர். அறுபது பெயர்களும் விட்ணுவுக்கும், பிர்மாவுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகளின் பெயர்களாம். அப்பெயர்களும் வடமொழிப் பெயர்களே!
தமிழர் ஆண்டுகட்குப் பெயரிட்டதாகத் தெரியவில்லை. வடவர் ஆண்டுக்கணக்குத் தொடர் ஆண்டுக்கணக்கன்று. அறுபது அறுபதாகக் கூட்ட வேண்டியதே!
ஆங்கிலர் ஆண்டுக்கும் பெயரில்லை. அஃது தொடர் ஆண்டுக் கணக்கு. கிறித்து பிறந்தது முதல் கணக்கு வைத்துளர். அதனைக் கி.மு., கி.பி., எனக் குறிப்பிடுகின்றனர்.

அதனைப் பின்பற்றியே தமிழ்ப்பேரறிஞர் கூடி ஆய்வு செய்து தமிழர்க்கு ஆண்டு கணக்கிடும் முறை இல்லை என்னும் இழிவைப் போக்கத் திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கியுள்ளனர். அவ் ஆய்வின்படி தமிழர் ஆண்டாம் திருவள்ளுவர் ஆண்டு சுறவம் (தை) முதல் தொடங்குகிறது. இது கி.மு. 31 முதல் தொடங்குகிறது. இன்று திருவள்ளுவர் பிறந்த ஆண்டு 2055 (2024) ஆகும். ஆங்கில ஆண்டு கி.பி., கி.மு.,எனக் குறிப்பிடுவது போன்று தி.பி., தி.மு., என நாமும் குறிப்பிடலாம். நாம் எழுதும் மடல் ஆவணங்களிலும், தமிழர் தமிழாண்டையே, ஆங்கில ஆண்டை எழுதுவது போல எழுதுதல் வேண்டுமென வேண்டுகிறோம்.

(தொடரும்)