(சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை- இரவி; திருவமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ; சரிதானா? – தொடர்ச்சி)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (மனு 1. 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே சீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (மனு , 1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (மனு , 1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்ய வராயுமிருக்கிறார்கள் (மனு , 1 : 101).

இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (மனு  2:31, 32)

பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது (மனு , 2 : 176-178).

தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு:

பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த் தண்டனையே உண்டு (மனு , 8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (மனு , 8 : 379).

பிரம்மஃகத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (மனு , 8 : 379).

பிராமணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (மனு , 8 : 281).

பிராமணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம் (மனு , 8 : 412).

இவற்றையெல்லாம் படித்த பின் யாரும் சனாதனம் பிராமணர்களை உயர்த்தவில்லை என்று பொய் மூட்டையை அவிழக்கமாட்டார்கள்.

  • ஆரியர் தோற்றமே பத்தாயிரம் ஆண்டுகள் இல்லை என்னும் பொழுது அவர்களின் சனாதனம் மட்டும்  பத்தாயிரம் ஆண்டுப் பழமையாக எப்படி இருக்க முடியும்? கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீதையில் முதன் முறை சொல்லப்பட்ட சனாதனம் பழமையானது அல்ல என முன்னே கூறியிருக்கிறோம். அப்படியே இருந்தாலும் மனித நேயத்திற்கு எதிரான அதனை எப்படித் தமிழ் நெறியுடன் ஒப்பிட இயலும்?

துணிந்து பொய் கூறுவதே ஆரியவாதிகளின் வழக்கம். எனவேதான், சனாதனவாதிகள் இங்ஙனம் கூறுகிறார்கள். சனாதனவாதிக்கு எதிரான வள்ளலார் இராமலிங்க அடிகளைச் சனாதனவாதியாகச் சித்திரிக்கிறார்கள்.

சாதியும் மதமும் சமயமும் பொய்என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

என்றும்

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

என்றும்

சாதி, மத, சமயத்திற்கு எதிரான வள்ளலாரை,

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என வேண்டிய வள்ளலாரைச் சாதி சமயக் குப்பையில் மூழ்கிய சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகக் கூறுவது தண்டனைக்குரிய செயல் அல்லவா? பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையாகத் திரித்துக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

(தொடரும்)