தமிழக வரலாறு 1/ 5 

அரசியல் வரலாறு

 இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். சங்கக் காலத்தில் தமிழகத்து மன் னிரிடையே பலபோர்கள் நடந்தன. ஒரு காலத்தில் சோழன் பேரரசனாய் விளங்கினான்; வேறொரு காலத்தில் பாண்டியன் பேரரசனாய் விளக்கமுற்றான்; பிறிதொரு சமயம் சேரன் பேரரசனாய்த் திகழ்ந்தான். கரிகாற் சோழன் இமயம்வரை சென்று இமயத்தில் புலிப் பொறி பதித்து மீண்டான். இவ்வாறே வட நாடு சென்று நெடுஞ்சேரலாதன், ‘இமயவரம்பன்‘ எனப் பெயர்பெற்றான். பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியர்களை வென்று, ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்று புகழ் பெற்றான். கி. பி. 300 முதல் 900 வரை தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சியில் இருந்தது. சோழர் சிற்றரசர் ஆயினர்.

  தெற்கே இருந்த பாண்டியரும் மேற்கே இருந்த சேரர், கங்கர், கதம்பர் என்பவரும், பல்லவ நாட்டுக்கு வடமேற்கே இருந்த சாளுக்கியரும், அவர்க்குப் பின்வந்த இராட்டிரகூடரும் பல்லவருடன் ஓயாது போரிட்டனர்.

  கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு ஒழிந்து, சோழப் பேரரசு ஏற்பட்டது. சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், நந்திக் கலம்பகத்திலும், பாரத வெண்பாலும், சில தனிப்பாடல்களிலும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதனைத் தோற்றுவித்த ஆதித்த சோழன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் சோழப் பேரரசர் பலர் தமிழகத்தின் பெருநிலப் பரப்பை ஒரு குடைக்கீழ் வைத்தாண்டனர். இப்பேரரசரும் பாண்டியருடனும் சேரருடனும் இலங்கை அரசருடனும் இராட்டிரகூடருடனும் அவர்க்குப்பின் வந்த சாளுக்கியருடனும் பல போர்கள் செய்ய வேண்டியவராயினர். ஆயினும், போர்க் கப்பல்களைச் செலுத்திப் பல தீவுகளை வென்ற பெருமை இச் சோழர்க்கே உரியது. சோழப் பெருநாடு வடக்கே துங்கபத்திரை யாறு வரை பரவியிருந்தது. இப்பெரு நாட்டை ஏற்படுத்தியவன் முதலாம் இராசராசன். கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஒய்சலர் படையெடுப்பாலும், தம்மாட்சி பெற்ற பாண்டியர் படையெடுப்பாலும் சோழப் பேரரசு ஒழிந்தது, சோழர்களின் போர்ச் செயல்களை ஒன்பதாம் திருமுறை, கலிங்கத்துப் பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலிய தமிழ் நூல்களில் காணலாம்.

  கி. பி. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலிக்காபூர் என்பவர் விந்த மலையைக் கடந்து யாதவ அரசரையும், ஒய்சல அரசரையும் வென்று, பாண்டி நாட்டையும் கைப்பற்றினார். தமிழகத்துச் செல்வம் கொள்ளை போயிற்று. சிறிது காலம் தமிழகம் நிலை தளர்ந்தது;  விசயநகர அரசு ஏற்பட்ட பின்பு தமிழகம் அமைதியுற்றது. மதுரை யிலும் தஞ்சையிலும் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. பின்பு தஞ்சையில் மகாராட்டிரர் ஆட்சி உண்டானது. விசயநகர ஆட்சிக்குப் பின்பு தமிழகம் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. யாண்டும் ஓயாத போர்கள் நடைபெற்றன. வாணிகத்துக்காக வந்த ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உள் நாட்டுப் போர்களில் ஈடுபட்டுத் தமிழகத்தை மேலும் பாழாக்கினர். இறுதியில் ஆங்கில ஆட்சி ஏற்பட் டது. அதுவும் ஒழிந்து இன்று நம் நாட்டில் குடி யாட்சி நடைபெறுகிறது.

 

(தொடரும்)

முனைவர் மா.இராசமாணிக்கனார்

 இலக்கிய அமுதம்