(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி)

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்

எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ

உட்கான் பிறன்இல் புகல்.

(நாலடியார், ௮௰௩-83)

பொருளுரை:

பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும் அறியாமல் காப்பதிலும் அச்சம்; இவ்வாறு பிறன் மனைவியை நயத்தலால் எப்போதும் நேருவது அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது எதை எதிர்பார்த்தோ?

பதவுரை

புக்க இடத்து= பிறன் மனைவி இருக்குமிடத்திற்குப் புகும் போதும்; அச்சம்= அச்சம்; துய்க்கும் இடத்து=அடையும் போதும்; அச்சம்= அச்சம்; தோன்றாமல்= இச்செய்தியைப் பிறர் அறியாத வகையில்; காப்பு=காத்தலும்; அச்சம்= அச்சம்;  எக்காலும்=எந்நாளும்; அச்சம்= அச்சம்; தருமால்= விளையும் ஆகையால்; உட்கான்=அஞ்சாதவனாய்; பிறன் இல்=பிறன் மனையாள் இல்லத்தில்; புகல்= புகுதல்; எவன் கொல்=என்ன பலன் குறித்தோ?

உட்குதல் என்றால் கருதுதல் என்றும் பொருள். எனவே, உட்கான்=கருதாதவனாய், அஃதாவது இவற்றையெல்லாம் கருதிப்பார்க்காதவனாய் என்றும் கூறலாம்.

அச்சம் என்னும் சொல் ‘அச்ச’ என்னும் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகச் செ.சொ.பி.பேரகரமுதலி காட்டுகிறது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப .

என மெய்ப்பாட்டில் ஒன்றாக அச்சம் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ‘மெய்ப்பாடு என்ப’  எனக் கூறுவதால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இச்சொல் இருப்பதை அறியலாம். இத்தகைய தொன்மையான தமிழ்ச்சொல்லைச் சமற்கிருத மூலத்திலிருந்து வந்ததாகக் கூறுவது பொருந்தாது.

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் : 5) என்று பாரதியார் பாடியுள்ளார். இவ்வரிகளை அறிந்தவர்கள் பாரதியார் வந்துதான் ஆண்கள் கற்பை வலியுறுத்தியதாகக் கூறுவர். இது மிகவும் தவறு. திருவள்ளுவர்(திருக்குறள்-பிறனில் விழையாமை), திருமூலர்(திருமந்திரம், 0.01.11 – முதல் தந்திரம் – பிறன்மனை நயவாமை), நாலடியார்(பிறன் மனை நயவாமை) முதலிய தமிழ்ப் புலவர்கள் பலரும் பிறன் மனை நயவாமையை வலியுறுத்துகின்றனர். இஃது ஆடவரின் கற்பை வலியுறுத்துவது அல்லாமல் வேறு என்ன?

அச்சத்துடன் தவறு செய்வதற்கு அஞ்சாமல் ஒழுக்கமாக வாழலாம் அல்லவா?

பிறன்மனை நயத்தல் என்றால் ஆடவர் பிறருக்குரிய பெண்டிரை விரும்புவதாகவே பொருள் கூறப்படுகின்றது. இன்றைக்குப் பிறருக்குரிய ஆடவரை விரும்பும் பெண்டிருக்கும் இது பொருந்தும்.

பிறன்மனை விழையாது நல்லொழுக்கத்துடன் வாழ்வோம்!