–      இலக்குவனார் திருவள்ளுவன்

 veatti01

  அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

  Justice-D-Hariparanthaman

  எனினும் இது முதல்முறையல்ல. இது போன்ற மன்றங்களில் வேட்டி மட்டுமல்ல, இயல்பான செருப்புகளைக்கூட அணிந்து செல்ல முடியாது. அவற்றுக்கும் தடை. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறும் செயலன்று.advocateghandhi புதுதில்லியிலும் கல்கத்தாவிலும் வடநாட்டு மக்களுக்குரிய ‘குருதா’ என்னும் உடையை அணிந்து செல்ல இயலாது. கல்கத்தாவில் சில மன்றங்களில் மட்டும் வங்காளப் புத்தாண்டுப் பிறப்பான ‘வைசாக்கு’ நாளில் வேட்டி அணிய இசைவு உண்டு. இவ்வாறுபெங்களூர், கல்கத்தா, மும்பை, தில்லி என எல்லா இடங்களிலும் உடைக் கொள்கை என்ற பெயரில் தேசிய இனங்களின் உடைகளை அணிவோருக்கு இழைக்கப்படும் அநீதியே யாகும்; நம் பண்பாட்டிற்கும் தேசிய இன உரிமைக்கும் தனி மனித உரிமைக்கும் அரசியல்யாப்பிற்கும் எதிரானதாகும்.

 madrasboatclub gymkhanaclub01

  தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த மூதறிஞர் இராசாசி, பெருந்தலைவர் காமராசர், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித்தலைவர் ம.கோ.இராமச்சந்திரன் என அனைவரின் வழக்கமான உடையே வேட்டிதான். இந்தியத் தலைமைஅமைச்சர்களில் தேவ(கவுடா), நரசிம்ம(ராவு) முதலானோர் உடையும் வேட்டிதான். ஆனால், ‘எளியவராக இருந்தாலும் உயர்ந்தநிலையில் உள்ளவராக இருந்தாலும் வேட்டி அணிந்தால் வெளியேற்றப்படுவாய்’ என்பதே இத்தகைய மன்றங்களின் கொள்கையாகும். இப்படிப்பட்டவர்கள் இத்தகைய மன்றங்களை வேட்டி அணியாப் பகுதியில் சென்று நடத்த வேண்டியதுதானே!

  தேசிய இனங்களின் உடை அணிவதால் மறுக்கப்படும் செய்திகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் கடுமையான நடவடிக்கை எதுவும் இல்லை. சான்றாக, அசோக்கு (சாட்டர்சி) தேசிய வரைகலை பயிலகத்தின் இயக்குநராக இருந்தவர்; புகழ் பெற்ற வங்க இயக்குநர் சத்தியசித்(ரே)   மைத்துனர் என்பதை விட இவர் பெங்களூர் மட்டைப் பந்தாட்ட மன்றம் தோற்றுவிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதே குறிப்பிடத்தக்க செய்தியாகும். இருப்பினும் அவர் நம் நாட்டு முறையில் உடை உடுத்தி வந்தமையால் உள்ளே விடப்படவில்லை. அவரால் தன்னுடைய வாணாள் உறுப்புமையைத்(life membership) தூக்கி எறிந்து கண்டனம் தெரிவிக்க முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

  தமிழ்நாட்டில் நடப்பதும் இதுதான் முதல் முறையல்ல. 1980இல் உச்சநீதிபதி கிருட்டிண(ய்ய)ர; வேட்டி அணிந்து justice)krishna_iyer01வந்தமையால்   திறனாளர் மன்றம் எனப்படும் சிம்கானா மன்றத்தில் உள்ளே விடப்படவில்லை. அவரால் கண்டித்துக் கருத்தைப் பதிந்து வெளியேறத்தான் முடிந்தது.

  காளிமுத்து அமைச்சராக இருந்த பொழுது பண்பாடுகளின் சங்கமத்திற்கான மன்றமாக அழைக்கப் பெறும் ‘காசுமாபாலிடன்’ மன்றத்தில், வேட்டி அணிந்து வந்ததால் நுழைவுkalimuthuandjayalalitha01 மறுக்கப்பட்டார். எனினும் பின்னர் அவர் வேறு உடை கொண்டுவரப்பட்டு உள்ளே சென்றார் என்றும் திரும்பிச் செல்லாமல் அங்கேயே நின்று பின்னர் அவர்தான் முதன்மைச் சிறப்பு அழைப்பாளர் என்பதால் உள்ளே செல்ல இசைவளிக்கப்பட்டார் என்றும் இருவகைச் செய்திகள் உண்டு.

  இம்மன்றம் தொடர்பில் ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. புத்தாயிரம் தொடக்கத்தின் பொழுது இம்மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் (கலைபண்பாட்டுத் துணை இயக்குநராக இருந்த) என்னிடம் வந்து கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து தருமாறும் நானும் உரையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்பொழுது உடைக் கொள்கை பற்றி அவர் தெரிவித்த பொழுது நான் விழாக்களில் வேட்டி அணிந்துதான் வருவேன் என்றும் கலைஞர்கள் அவர்களுக்கு வாய்ப்பான உடையாகிய வேட்டியில்தான் வருவார்கள் என்றும் உடையை மாற்றுவதற்குரிய நிதி அவர்களிடம் இல்லாததுடன் வழக்கமான உடை முறையை மாற்றும் பொழுது ஆட்டம் தடைப்படும் என்றும் தெரிவித்தேன். தொடர்ச்சியாக வெவ்வேறு நாள் மூன்று முறை பேசியபின்பு கலைஞர்கள் கலையுடை என்ற முறையில் அவ்வாறு வரலாம் என்றும் என்னைக் கலைக்குழுவினராக எண்ணி வேட்டியில் வர இசைவதாகவும் தெரிவித்தார். எனினும் திடீர் வெளியூர்ப் பயணத்தால் அந்த நிகழ்ச்சிக்கு என்னால் செல்ல இயலவில்லை.அவர்களுக்கும் அதில் பெரிய மகிழ்ச்சி!

 mcc01

   2007இல் மத்திய உள்ளாட்சித்துறை அமைச்சகத்தில் மதிப்புநிலைச் செயலராக இருந்த அமெரிக்கா நாராயணனுக்கு இதுபோல் வேட்டி அணிந்து வந்தமையால்மட்டைப் பந்தாட்ட மன்றத்தில்நுழைவு மறுக்கப்பட்ட பொழுது அப்போதைய முதல்வர் கலைஞருக்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி மடல் அனுப்பினார். ஒன்றும் பயனில்லை. ஆனால் இப்போது இதுதான் முதல்முறை என்பது போல் கலைஞரும் திமுகவினரும் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

  இது தொடர்பிலும் ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.2012 இல் கணித்தமிழ்ச்சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தை மட்டைப் பந்தாட்ட மன்றத்தில் நடத்த இருப்பதாகத் தெரிவித்து அவர்களின் உடைக் கொள்கைக்கிணங்க யாரும் வேட்டி அணிந்தும் செருப்பு அணிந்தும்வரக்கூடாது என்றும் தெரிவித்தனர். உடனே நான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தேன். பிற நண்பர்களும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் அதன் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழுணர்விற்கு மதிப்பளித்து, கூட்ட இடத்தை மாற்றினார். இவ்வாறு நாம் ஒதுங்கிச் செல்ல முடிகின்றதே தவிர, எதிர்த்து வெற்றி காண இயலவில்லை. எனவே, பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாகத் தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 logo-madrasclub logo-madrasboatclub01

  2013 ஆகத்தில் துபாயில் அங்கு உள்ள மதுமதி என்னும் மகள் வீடடிற்குச் சென்ற தந்தை வேட்டியில் எதிசலட்   பெருநகரத் தொடர் வண்டி நிலையத்திற்குச்சென்றபொழுது காவல் துறையைச் சேர்ந்தவர் அவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்து விட்டார். நம் பரம்பரை உடை எனவும் உடலை மறைக்கும் சிறந்த உடை என்றும் அவர்dubai+metro கூறியும் அவர் உள்ளே விடவில்லை. ஆனால், இது குறித்துச் செய்திகள் வந்ததும் உடனே தொடர்வண்டித்துறையினர் அவ்வாறு வேட்டி அணியஎந்தத் தடையும் இல்லை எனவும் தனிப்பட்ட முறையில் காவலர் தவறாக நடந்து கொண்டதால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். அயல்நாட்டில்கூட நம் பண்பாட்டு உடைக்குத் தடை வந்தால் உடன் நடவடிக்கை வருகிறது. இங்கே உறக்கம்தான்! தொடர்பான விதிமுறையை மாற்றுமாறு தொடுக்கப்பட் வழக்குகள் கிடப்பில் உள்ளதாகவும் சொல்லப்படுகின்றன.

  இது போன்ற மன்றங்கள், “நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. எங்கள் clubஉடைக் கொள்கையில் உடன்பாடுள்ளவர்கள் உறுப்பினராகலாம்” என்பதுபோல் நழுவுவர். அரசுகளும் தனிப்பட்ட மன்றங்களின் கொள்கை என்பதுபோல் வாளாவிருந்துவிடுகின்றன. உண்மையில் தனிப்பட்ட மன்றங்கள் பொதுவான மக்களுக்கு எதிரானதாக இருப்பதால் நடவடிக்கை எடுப்பதே முறையாகும்.

  •        தமிழக அரசு நேரடியாகவே தனிமனித உரிமைக்கும் பண்பாட்டிற்கும் எதிரான இப்போக்குகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்கிணங்கச் செயல்படா மன்றங்கள் இயங்கத் தடை விதிக்க வேண்டும்.
  •         இதை மீறி வழக்கு மன்றம் சென்று இழுத்தடிப்பார்கள் எனில் அத்தகைய மன்றங்களுக்கு அளிக்கும் அரசு உதவிகளை நிறுத்த வேண்டும்.
  •      இத்தகைய மன்றங்களில் அரசு, அரசுசார் அமைப்புகளின் அதிகாரிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினராக இருக்கத் தடை விதிக்க வேண்டும்.
  •       நேரடியாகவோ மறைமுகமாகவோ இம் மன்றங்களை க் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தால் இவை திருந்தும் என்பது உண்மை.

தமிழக முதல்வர் துணிந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்போம்!

வேட்டி தீண்டாமை ஒழியட்டும்!

தேசிய இனங்களின் பண்பாடுகள் காக்கப்படட்டும்!