104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105
- 104 ? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்பதாகக் கூறுகிறார்களே!
- இந்திய அரசியல் யாப்பின்படித் தீண்டாமை ஒழிக்கப்பட்டது(பிரிவு 17). அதை எந்த வடிவில் நிறைவேற்றுவதும் சட்டப்படித் தண்டனைக்குரிய குற்றமாகும். சனாதனம் என்பது தீண்டாமையை வலியுறுத்துவது. அப்படியானால் சனாதனத்தை அரசியல் யாப்பு எதிர்ப்பதாகத்தானே பொருள். எனவே, அதை எதிர்ப்பது சரிதானே!
இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும். இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே.
இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே.
“சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு.” (மனு 11. 12)
பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு 10. 96)
இத்தகைய தீண்டாமையை வலியுறுத்தும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே! அப்படியானால் அதை எதிர்ப்பவர்கள் அரசியல் யாப்பின் காவலர்கள்தானே.
பண்பாட்டு, கல்வி உரிமையை வலியுறுத்துகிறது இந்திய அரசியல் யாப்பு. அப்படியானால் ஒரு பிரிவார்க்குக் கல்வி உரிமை இல்லை என்று சொல்லும் வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதனத்திற்குச் சாவு மணி அடிப்பதுதானே முறை.
இவ்வாறு அரசியல் யாப்பு தரும் அடிப்படைஉரிமைகளை மறுக்கும் சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்று சொல்பவர்களைப் பாராட்டத்தானே வேண்டும். மாறாகக் கடிந்துரைப்பது கண்டனத்திற்கு உரியது அல்லவா?
“நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்குப் பின் அடுத்த பிறவியில் நீ பெற விரும்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த இராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு” (ஆதார நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்: வீ.ஆர்.நார்லா, பக்கம்:169). (கீதை 3:4)
‘தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் “தீண்டாமை மனித நேயமற்ற செயல் – பெருங்குற்றம்” என்றோ “தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்” என்றோ அச்சிடப்பட்டு உள்ளன. படிக்கும் பொழுதே மாணவர்களின் உள்ளங்களில் தீண்டாமை எதிர்ப்பை விதைத்து அவர்களைப் பண்படுத்த முயல்கிறது அரசு. தீண்டாமையை வலியுறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்தை எதிர்ப்பதுதானே மக்கள் சார்பாளர்கள் கடமை. அந்தக் கடமையை ஆற்றுவோரைத் தண்டிக்க வேண்டும் என்பது முறையாகுமா?
- 105. ? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை ? எதிர்க்கிறார்கள் – சரியா?
- சனாதனம் என்பது இந்துமதம்தான். எனவே, சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்கள் எனச் சனாதனவாதிகள் கூறுகின்றனரே!
- சனாதனத்தையே இந்து மதத்தின் வேறு பெயராகக் கூறப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், இது மிகவும் தவறாகும். பல்வேறு சிற்றரசுகளையும் மாநிலங்களையும் இணைத்து இந்தியா என ஆங்கிலேயர் அறிவித்தனர். இதனால் இச்சிற்றரசுகள் மாநிலங்களின் பெருமைகளும் இந்தியா என்பதற்கு வந்து விட்டது. இதுபோல்தான் இந்நிலப்பகுதியில் இருந்த பல்வேறு கடவுட் கொள்கை யடிப்படையில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்றனர். ஆரியம் எங்குச் சென்றாலும் அங்கே உள்ள கோட்பாடுகள், இலக்கியங்கள், சிறப்புகளைவிடத் தங்களின் கோட்பாடுகள், இலக்கியங்கள், சிறப்புகளே உயர்ந்தன எனக் காட்ட அவற்றிற்கும் முந்தையனவாகத் தங்கள் கோட்பாடுகள் முதலானவற்றைக் கூறுவர். அங்கிருந்தனவற்றையே தங்களுடையனவாகக் காட்ட அப்பெயரையும் ஈர்த்துக் கொள்வர். அதுபோல் ஆரியத்தை இம்மண்ணின் மதமாகக் காட்ட இந்துமதம்தான் ஆரியம் என்று சொல்லி மக்களை நம்ப வைத்துவிட்டனர். இந்துக்கள் பலர் ஆரியத்தின் பல கொள்கைகளை ஏற்காவிட்டாலும் இந்துக்களாக அழைக்கப்பட்டனர் அல்லது காட்டப்பட்டனர். எனவேதான் ஆரியத்திற்கு எதிரான புத்த சமயம் போன்றவற்றையும் இந்துமதமாக அறிவித்துள்ளனர்.
குழந்தைத் திருமண முறை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக் களைந்த சீர்திருத்தக்காரர்களை இந்துமதப் பகைவர்கள் என்பார்களா?
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 145-148
Leave a Reply