(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி)

  1. நல்லொழுக்கத்தைக் கூறுவன புராணங்கள். போற்றுதற்குரிய பெருமைக்குரியவர்கள் புராண நாயகர்கள் என்கின்றனர். ஆக இவர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா என்கின்றனரே!
  2. ஆரியர்கள், நல்லொழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொழுது எழுதியவையே புராணங்கள். எனவே அதற்கேற்பவே நல்லொழுக்கமற்ற பாத்திரப் படைப்புகளைப் பார்க்கலாம். எனினும் தமிழர்களுடன் தொடர்பு கொண்ட பின், ஒழுக்கப் பாதைகளில் நடை போடத் தொடங்கினர். அப்பொழுது புராணங்களில் திருத்தம் வேண்டுமென்று  விரும்பிய ஒழுக்கவாணர்கள் அதற்கேற்பக் கதைகளில் மாற்றம் செய்து இடைச்செருகல்கள் மேற்கொண்டனர்; அல்லது அப்படிப்பட்ட பகுதிகளை மக்கள் பார்வையில் படாதவகையில் மறைத்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிலர்.
  3. புராணங்களில் வரும் மாந்தர்களின் பெற்றோர் யாரும் உரியவர்கள் அல்லர். தவறான முறையில் பிறந்தவர்கள் என்பதை மறைக்கத் தெய்வப்பிறவிகளாகக் கதை கட்டி விடுகின்றனர். முனிவரின் அருளாகவோ தெய்வ அருளாகவோ பிறந்தவர்களாகவும் திரித்து விடுவர். சிலரின் பிறப்புகளைப் பார்ப்போம். விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர் பாண்டு. பாண்டு மனைவியர் குந்தி, மாதுரி. பாண்டவர்களில் மூத்தவரான யுதிட்டிரன் என்னும் தருமன் பாண்டு – குந்தி ஆகியோரின் பிள்ளையாக வளர்ந்தவர். ஆனால், குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.  குந்திக்கு வாயுவிடம் பிறந்தவன் வீமன் /பீமன் /பீமசேனன். குந்திக்கு இந்திரனிடம் பிறந்தவன் அருச்சுனன். சரண்யூவிற்குச் சூரியனிடம் பிறந்தவர்கள் அசுவினிகள் அல்லது அசுவினி குமாரர்கள் ஆகிய நாசத்துயா-தசுரா என்னும் இரட்டையர்கள். இவர்களுடன் உறவு கொண்டு மாத்திரி/மாதுரிக்குப் பிறந்தவர்களே நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையர்கள். விசித்திரவீரியன் இறந்த பின் மனைவியரான அம்பிகாவும் அம்பாலிகாவும் வியாசரிடம் குழந்தை பெற்றுக் கொண்டனர். வேலைக்காரிக்கு வியாசரிடம் பிறந்தவன்தான் விதுரன். அதிரத நந்தனன் என்னும் தேரோட்டி – இராதை இணையரால்  வளர்க்கப்பட்ட கருணன் குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன். அஞ்சலைக்கு வாயுவிடம் பிறந்தவன் ஆஞ்சநேயர். திருதராட்டிரன் மனைவி காந்தாரி. ஆனால் காந்தாரிக்கு வியாசரால்தான் கெளரவர் நூற்றுவரும் துச்சலை என்னும் மகளும் பிறந்தனர். வைசியப் பெண்ணிடம் யுயுத்துசு என்னும் ஒரு மகன் பிறந்துள்ளமையால் இவர்களின் பிள்ளைகள் எண்ணிக்கை 102 ஆகும். (வியாசர் தந்த பிண்டத்தால் இவர்கள் பிறந்ததாகக் கூறுவது அறிவிற்கு ஏற்றதாக இல்லை.)

கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது.

கிருட்டிணனுக்கு,  (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன் என்பதில் ஐயமில்லை என்கிறது பாரதம்.

பிரம்மாவின் ஒழுக்கத்தைப்பற்றிப் பார்க்கலாம்.

1. பரமசிவன்- பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து திருமணத்திற்கு ஓமம் வளர்த்தான். பார்வதி ஓமகுண்டத்தை வலம் வருகையில் இடக் கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்து கொண்டு வந்தாள். அவ்வாறு வருகையில் அவளது இடையை ஒட்டிய தொடை பிரம்மாவின் கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்து பிரம்மா காம மயக்கம் கொண்டான். அதனால் விந்து ஒழுகியது.  அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் பிரம்மாவுக்கு அகத்தியன் பிறந்தான்.

2. பிரம்மா மீண்டும் பார்வதியின் தொடையைப் பார்க்க மேலும் விந்து ஒழுகியது. அதை விருட்சபிச்சை போன்ற செடிகளில் விட்டான்.  இதனால் பிரம்மாவிற்கு வால்கில்லியாதி முதலிய அநேக முனிவர்கள் பிறந்தார்கள்.

3. அங்கிருந்து செல்கையில் பிரம்மா ஒரு சுடலைச் சாம்பலில் தனது விந்துவை விட்டான். அதில் பூரிச்சிரவன் என்கிற அரக்கன் பிறந்தான்.

4. அதில் உள்ள எலும்புகளை பொறுக்கி அதில் விந்தினை விட்டான். அதிலிருந்து சல்லியன் என்கிற வலுவானவன் பிறந்தான்.

5. அங்கிருந்து போகையில் சிறிது விந்து ஒழுகிக் கீழே விழ அதை ஒரு பறவை உண்டது. அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் விந்தினை விட்டான். அதைத் தவளை(மண்டூகம்) உண்டது. அதன் மூலம் மண்டோதரி பிறந்தாள்.

7. மிகுந்த விந்துவைக் குளத்தில் உள்ள தாமரையில் விட்டான். அதில் இருந்து பத்மை(சரசுவதி) என்கிற மகள் பிறந்தாள்.

8. மகளான சரசுவதியின் அழகைக்கண்டு அவளுடன் புணர வேண்டுமென பிரம்மன் கேட்டான். அதற்கு அவள் மறுத்தாள். புத்திரப் பாக்கியத்திற்காகத் தாய் தமக்கை பிள்ளை மகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் தவறில்லை என்னும் வேதவாக்கியத்தைச் சொல்லி அவளுடன் உறவு கொண்டான்.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதியை மணந்து கொண்டார் என்றும் ஒரு கதை. அப்படிப் பார்தாலும் மகளான சரசவதியுடன் உடலுறவு கொண்டவனே பிரம்மன்.

9. சரசுவதியைக் கருப்பவதியாக்கியபின் விந்துவைச் சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.

10. மகளான திலோத்தமை மீதும் காமமோகம் கொண்டவன்தான் பிரம்மன்.

11.  பிரம்மன் காடுகளில் அலைந்து திரிந்த போது ஒரு புதருக்குள் இருந்த கரடியைப் புணர்ந்தான். இதனால் கரடி முகத்துடன் கூடிய சம்புவந்தன் என்ற மகன் பிறந்தான்.

12. பின் விந்தினை ஊர்வசி கருப்பத்தில் விட வசிட்டன் என்ற மகன் பிறந்தான்.

இவ்வாறு முறையற்ற, அறிவிற்கு ஒவ்வாத பண்பாடற்ற செய்திகள் கடவுள், முனிவர்கள் பிறப்புகளையும் உடலுறவுகளையும் கூறுகின்றன. சோ போன்றவர்கள் இவற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவது உண்மையென்றால், கடவுள்களாகவும் முனிவர்களாகவும் அரம்பையர் களாகவும் கூறப்படுபவர்கள் உண்மையில் வெறும் புலனுணர்வுகளே. அவர்களை வணங்கவும் போற்றவும் வேண்டிய தேவையில்லையே.

இத்தயை அற்பத்தனத்தை விளக்கியதற்குத்தான் தொல். திருமாவளவனைக் கண்டித்தனர் சனாதனவாதிகள்.

  • (தொடரும்)